திங்கள், 21 செப்டம்பர், 2020

தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றார் அதிமுகவுடன் சசிகலா அணி இணைப்பு? பாஜ தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை

dhinakaran : சென்னை: தனி விமானம் மூலம் நேற்று டெல்லி சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அங்கு பாஜ மூத்த தலைவர்களுடன் அணிகள் இணைப்பு குறித்து ரகசிய ஆலோசனை மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு அடைக்கப்பட்டார். மேலும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினால் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத்துறை விளக்கம் அளித்திருந்தது. இந்தநிலையில், அதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டத்தில்  எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடையே கருத்து மோதல் நடந்தது. இதேபோல், சசிகலா விடுதலை குறித்தும் ஆலோசனை நடந்தது. இதற்கிடையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அதிகாலை திடீரென தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அவருடன் உதவியாளர் ஜனார்த்தனன், கட்சி பிரமுகர் மல்லிகார்ஜூன் ஆகியோரும் சென்றனர். டெல்லி சென்ற டிடிவி.தினகரன் அங்கு லீலா பேலஸ் ஓட்டலில் தங்கினார்.



பின்னர், பாஜ மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்ததாகவும், அதிமுகவுடன் சசிகலா அணியை இணைப்பது குறித்து ரகசிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து டெல்லி பாஜ தலைவர் ஒருவர் கூறியதாவது: பாஜ ஆதரவு தொழிலதிபர்கள் உதவியுடன் சென்னையில் இருந்து டிடிவி.தினகரன் தனி விமானம் மூலம் டெல்லி வந்தார். குஜராத் மற்றும் டெல்லியை சேர்ந்த 3 பாஜ ஆதரவு தொழிலதிபர்களுடன் டிடிவி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அவரை சந்திப்பதற்கான நேரமும் கேட்டிருந்ததார். பின்னர் நட்டாவுடன் ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாஜ தலைவர்கள் சிலர் டிடிவி.தினகரனை சந்தித்தனர். ஓ.பி.எஸ், எடப்பாடி, சசிகலா ஆகிய மூன்று அணிகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று பாஜ தலைவர்கள் டிடிவி.தினகரனிடம் கூறியுள்ளனர். சசிகலா சிறை சென்ற பிறகு அமமுக என்ற கட்சியை உருவாக்கினேன். எனவே, நாங்கள் 4 அணிகளாக உள்ளோம் என அவர்களிடம் டிடிவி தெரிவித்துள்ளார். மேலும் கட்சிகளை ஒன்றாக இணைக்கும்போது தனக்கு கட்சியில் என்ன பதவி வழங்க வேண்டும், அணிகளை இணைப்பதன் மூலம் தனக்கு என்ன பலன் கிட்டும். எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்க்கு என்ன பதவி கொடுப்பீர்கள் என்று அவர் கேட்டதாக தெரிகிறது.


இதையடுத்து, டிடிவி.தினகரனின் கோரிக்கையை நிராகரித்த பாஜ தலைவர்கள் அதிமுகவுடன் சசிகலா அணியை இணைத்து, சசிகலாவிற்கு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வழங்க தயாராக உள்ளதையும் தினகரனிடம் கூறியுள்ளனர். இதேபோல், சசிகலா தரப்பு பெரிய தொகையை பாஜ தேர்தல் செலவிற்கு தர வேண்டும் என்றும் பாஜ மூத்த தலைவர்கள் கேட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், கடந்த 6 மாதமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத டிடிவி.தினகரன் நேற்று அதிகாலை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்று, அங்கு பாஜ தலைவர்களை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் முக்கிய சந்திப்புகளை முடித்துவிட்டு நேற்றிரவு டிடிவி.தினகரன் சென்னை திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக