வியாழன், 3 செப்டம்பர், 2020

புலம்பெயர் தமிழர்கள் தவறான தகவல்களையே பிரபாகரனுக்கு வழங்கினர் – எரிக் சொல்ஹெய்ம் புதிய தகவல்

veerakesari :விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை கேட்டு நடந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலை இன்று எவ்வளவோ மேம்பட்டபுலம்பெயர் தமிழர்கள் தவறான தகவல்களையே பிரபாகரனுக்கு வழங்கினர் – எரிக் சொல்ஹெய்ம் புதிய தகவல்தாக இருந்திருக்கும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஓரளவு சுயாட்சியை அவர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்று நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார்.

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுத்து செயற்பட்டவரை அநேகமான எல்லா விடயங்களுமே சரியான திசையில் சென்றன. பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுக்காத வேளைகளில் பிரபாகரனின் செயற்பாடுகள் தவறுதலாகவே அமைந்தன என்றும் சொல்ஹெய்ன் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் மூன்று இலங்கை தலைவர்களின் ஆட்சிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சியில் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவராக இலங்கைக்கு அடிக்கடி வந்து செயற்பட்ட சொல்ஹெய்ன், கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் இணையத்தள வெளியீட்டுக்கு பிரத்தியேகப் பேட்டியொன்றை அளித்திருக்கிறார். இந்த பேட்டியில் அவர் விடுதலைப் புலிகளுடனும் அரசாங்கத்துடனும் தான் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிலவற்றின் விவரங்களையும் சர்வதேச சமூகம் அந்த முயற்சிகளில் வகித்த பங்கையும் விரிவாக தெரிவித்திருக்கிறார்.

ஒரு சமாதான தூதுவராக இலங்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகித்த நீங்கள் எதிர்நோக்கிய விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் குறித்து கவலைப்படுகிறீர்களா? என்று சொல்ஹெய்மிடம் கேட்டபோது, ‘ இலங்கையில் நடந்தது ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட – நவீன யுகத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மிகவும் மோசமான மோதல்களில் ஒன்றாகும்.

இலங்கையின் பலர் தங்களது உறவினர்கள் காணாமல்போனதால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் கிராமங்களை சேர்ந்த படைவீரர்களாய் இருந்தால் என்ன, வடக்கில் தமிழ் குடிமக்களாய் இருந்தால் என்ன, பெரும் எண்ணிக்கையான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். மக்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

அதனால் எம்மால் சமாதான முயற்சிகளில் வெற்றிப்பெற முடியவில்லை என்பது தான் எனது கவலை. ஆனால், எம்மால் இயன்றவரை நாம் முயற்சித்தோம். இலங்கையின் இருதரப்பையும் சேர்ந்த தீவிரவாதிகளினால் நாம் கடும் கண்டனத்துக்கு உள்ளானோம் என்பது என்னை கவலைப்பட வைக்கவில்லை.

நான் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவனாக இருந்ததாக சிங்கள தீவிரவாத தேசியவாதிகள் கூறிய அதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்விக்கு தனிப்பட்ட முறையில் நானே பொறுப்பென்று தமிழ் தீவிரவாதிகள் கூறினார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு நோர்வேகாரர்களையே குற்றம் சாட்ட வேண்டும்’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

‘முழுமையாக  நோக்குகையில், சமாதானத்தை காண்பதற்கு முயற்சிப்பவர்களை அல்ல, போர் வெறியர்களையே குற்றம் சாட்ட வேண்டும். அதிக பெரும்பான்மையான சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் எம்மிடமிருந்து சமாதானத்தையே எதிர்பார்த்தனர்’ என்றும் பதிலளித்தார்.

புலிகளிடம் உண்மையான அக்கறை இருந்தது

விடுதலைப் புலிகளுடன் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நோக்கும்போது, அவர்கள் சமாதானத்தில் மெய்யான அக்கறை கொண்டவர்களாக இருந்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘நிச்சயமாக. தெற்கில் தவறான எண்ணம் இருக்கிறது.

புலிகள் அவர்களின் அதிகாரத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது சமாதானம் பேசுவதில் நாட்டம் காட்டினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 2000-2001 இல் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியவர்களாக இருந்ததைப் போல் அதற்கு முன்னரோ பின்னரோ ஒருபோதும் இருந்ததில்லை.

ஆனையிறவு இராணுவ முகாமை கைப்பற்றிய அவர்கள் முழு யாழ்ப்பாண குடா நாட்டையும் கைப்பற்றுவதற்கு மிகவும் நெருக்கமாக சென்றார்கள். இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் செய்த உதவி காரணமாகவே இறுதி நேரத்தில் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டன.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்து இலங்கை பொருளாதாரத்தையும் புலிகள் நிர்மூலம் செய்தார்கள். அதனால் அவர்கள் தங்களது வல்லமையின் உச்சக்கட்டத்தில் இருந்தபோதே சமாதானத்தை நாடினார்கள்.

அவர்கள் முற்றுமுழுதாக மெய்யாகவே சமாதானத்துக்கு முயற்சித்தார்கள் என்பதை இது காட்டியது. ஆனால், தொடர்ந்து சமாதான முயற்சிகளை முன்னெடுத்து சமஷ்டி இணக்கத் தீர்வொன்றுக்கு செல்வதற்கு அவர்கள் தயாராக இருந்தார்களா என்பது கேள்விக்குரியது. பிரபாகரன் சமாதானத்துக்கு தயாராக இருந்தார். ஆனால், பெருமளவு விடயங்களை விட்டுக்கொடுக்கவேண்டியிருந்தது என்று நான் நினைக்கிறேன் என்று பதில் கூறினார்.

கேள்வி: அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இணக்கத் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கலானதாக இருந்ததா?

பதில்: மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்தவர். சமாதான முயற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தெளிவான திட்டமொன்றை கொண்டிருந்தார் என்று நான் நினைக்கவில்லை.

எமது ஆலோசனைகளை அவர் செவிமடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்தை தோற்றுவிக்கக்கூடிய முறையில் பிரபாகரன் நடந்துகொண்டதன் காரணமாக அவரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதை நாங்கள் நேர்மையுடன் கூறித்தான் ஆகவேண்டும். வடக்கில் வீதியோரங்களில் குண்டுகளை வைத்து படைவீரர்களை கொலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். பிரபாகரனும் மகிந்தவும் தங்களது பிரதிநிதிகள் மூலமாக ஜெனீவாவில் இரண்டு சுற்றுப் பேச்சுக்களையும் நடத்தினார்கள்.

பிரபாகரனுடன் ஒரு உச்சி சந்திப்பை நடத்துவதற்கு தான் முற்றிலும் தயாராக இருப்பதாக அந்த நேரத்தில் மகிந்த என்னிடம் கூறினார். நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடிய சமாதான முயற்சிகளையே மகிந்த அந்த நேரத்தில் விரும்பவில்லை. அதனால் நாம் இன்று யோசிப்பதைப் போன்று நினைத்து பார்ப்பதை விடவும் 2006 நிலைவரம் இருந்தது. அதுவே சமாதானத்தை காண தவறவிடப்பட்ட இறுதி சந்தர்ப்பமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: பிரபாகரனுடன் சந்திப்பதற்கு மகிந்த ராஜபக்சவினால் வெளிப்படுத்தப்பட்ட விருப்பம் குறித்து பிரபாகரனுக்கு உண்மையில் தெரியப்படுத்தப்பட்டதா? அவரது பதில் என்னவாக இருந்தது?

பதில்: இந்த விடயங்கள் எதுவுமே அந்த நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால், இப்போது நாம் அவற்றை வெளிப்படையாக  பேசமுடியும்.

சமாதான முயற்சிகளுக்கு இரு வேறுபட்ட அணுகுமுறைகள் இருந்தன. விடுதலைப் புலிகளை பொறுத்தவரை படிப்படியான அணுகுமுறை ஒன்றையே அவர்கள் விரும்பினார்கள். நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்றும் இரு தரப்பிலும் சமாதானத்தை மேம்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் அக்கறையாக இருந்தது.

ஒரு இலங்கை அரசுக்குள் தமிழ் மக்களுக்கான சுயாட்சி அல்லது சுயநிர்ணய உரிமை ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்திமுடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் முடிவாக இருந்தது. தனியான அரசொன்று அமைவதென்பது ஒருபோதும் சாத்தியமாக இருக்கவில்லை. அத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகளின் விளைவாக தனிநாடு என்பது ஒருபோதும் இருக்கவும் முடியாது. எனவே விட்டுக்கொடுப்புக்கு இடைப்பட்ட ஒரு நிலைப்பாடாக – சமஷ்டி முறையே இருக்க வேண்டியிருந்தது.

தளர்வுபோக்கு வேண்டும்

சமஷ்டி முறை தொடர்பில் இளைஞர்கள் ஒரு தளர்வு போக்கை காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறுகிய நோக்கில் அதைப் பார்க்கக் கூடாது. இந்தியாவில் சமஷ்டி முறை சிறப்பாக செயற்படுகிறது. டில்லியின் தலையீடு இல்லாமல் மாநிலங்களினால் அவற்றின் சொந்த விவகாரங்களை கையாளக் கூடியதாக இருக்கிறது. அதேவேளை, இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவும் மாநிலங்கள் இருக்கின்றன.

கேள்வி: ஒரு சமாதான முயற்சியாளர் என்ற வகையில் நோர்வேயினால் வேறுபட்ட முறையில் நடந்து உயிர்கள் காப்பாற்றப்படுவதையும் போர் சமாதான முடிவுக்கு வருவதையும் உறுதிப்படுத்துவதற்கு நோர்வேயினால் முடியுமாக இருந்திருக்குமா?

பதில்: இந்த விவகாரம் தொடர்பில் நான் சிந்திப்பதில் பெருமளவு நேரத்தை செலவிட்டேன். உள்நாட்டு போரின் முடிவு என்ற மாக்ஸ் சால்டரின் நூலில் அது விவரமாக குறிப்பிடப்பட்டும் இருக்கிறது. சமாதானத்துக்கு இரு பிரதான தடைகள் இருந்தன என்று நான் நம்புகிறேன்.

சமாதானத்துக்கான முக்கிய தடைகள்

ஒன்று கொழும்பில் ஒற்றுமை இல்லாமல் இருந்தமை. அந்த நேரத்தில் இரண்டு பிரதான கட்சிகள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்.

அவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். சந்திரிகா செய்வதை ரணில் ஆதரிப்பார் என்றோ அல்லது ரணில் செய்வதை சந்திரிகா ஆதரிப்பார் என்ற நிலைமை இருக்கவில்லை.

அதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் விடுதலைப் புலிகள் முன்னால் உகந்த திட்டத்தை முன்வைப்பதை கஷ்டமாக்கின. அத்துடன் தாங்கள் சமஷ்டி முறைக்கு இணக்கம் தெரிவிப்பதாக கூறியிருந்தால்  கொழும்பிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் முயற்சிகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்திருக்கும் என்று விடுதலைப் புலிகள் நம்புவது கஷ்டமாக இருந்தது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியவில்லை. ஆனால், அவ்வாறு இரண்டு தரப்புக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்த்துவைக்கக் கூடிய இந்தியா மற்றும் ஏனைய சக்திகளுக்கு நெருக்கமாக எம்மால் பணியாற்ற முடிந்திருக்கும்.

இலங்கை நெருக்கடிக்கு சமஷ்டி ஒரு தீர்வு என்று பிரபாகரனை எம்மால் நம்பவைக்க முடியாமல் போனது இரண்டாவது காரணம். பிரபாகரனும் பெருமளவு விடயங்களை பேசுவதற்கு நாம் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உண்மையிலேயே பிரபாகரனை அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவர் நானாக தான் இருக்க வேண்டும். சில வெளிநாட்டவர்கள் பிரபாகரனை சந்தித்தார்கள். அந்த சந்திப்புகள் உலகை பற்றியே ஒரு தவறான நோக்கை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். வெளியுலகை அவர் விளங்கிக்கொள்ளவில்லை. மேலும், பல வெளிநாட்டவர்கள் பிரபாகரனை சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரும் விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவரை நம்பவைப்பது எளிதாக இருந்திருக்கும். சமாதான இணக்கத் தீர்வு ஒன்று தேவையானால் இரு தரப்பும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

கேள்வி: பிரபாகரன் என்ற தனிநபரை பற்றி கூறுங்கள்?

பதில்: பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை நீண்டகாலம் ஒரு சிறந்த வீராப்புடைய இராணுவ தலைவராக இருந்தார். உலகில் சொந்த விமானப்படையையும் கடற்படையையும் நிறுவிய அரசு அல்லாத தரப்பாக புலிகள் மாத்திரமே இருந்தனர்.

ஆனால், அவரின் அரசியல் விளக்கப்பாடு துரதிர்ஷ்டவசமாக இதைவிட பெருமளவு குறைவானதாகவே இருந்தது. இவருக்கு தென்னிலங்கை, இந்தியா மற்றும் வெளியுலகம் குறித்த இணக்கப்பாடு பெரிதாக இல்லை.

புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்தில் இருந்த பலர் அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். நெருக்கடிக்கு தீர்வொன்றை காண்பதைக் காட்டிலும் விட்டுக்கொடாத ஒரு தலைவராக இருக்குமாறு அவருக்கு கூறினார்கள்.

சகல வாக்குறுதிகளையும் அவர் காப்பாற்றினார் என்பதை நாம் கூறத்தான் வேண்டும். எங்கெல்லாம் வாக்குறுதி அளித்தாரோ அங்கெல்லாம் இராணுவ நடவடிக்கையை நிறுத்தினார். அவரது படைகள் மீது அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தது. பாலசிங்கம் தான் அவரது பிரதான ஆலோசகரும் நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கினார். பாலசிங்கத்தின் அறிவுரைகளை பிரபாகரன் கேட்டு நடக்கும் வரை அநேகமாக சகல விடயங்களுமே சரியான திசையில் சென்றன. ஆனால், பாலசிங்கத்தின் அறிவுரைகளை கேட்காத சந்தர்ப்பங்களில், எல்லாமே பிழையாகிப்போனது.

நல்ல சமையல்காரர்

அவரது தனிப்பட்ட ஆளுமை என்று வரும்போது நல்ல சுவையான சமையல்காரர். நாம் இருவரும் சேர்ந்து நல்ல உணவுகளை சாப்பிட்டிருக்கின்றோம். ஆனால், அவர் மிகவும் ஜாக்கிரதையான பேர்வழி. அவருக்கு நெருக்கமாக போவதென்பது சுலபமானதல்ல.

பாலசிங்கத்தின் அறிவுரைகளை பிரபாகரன் முழுமையாக கேட்டிருந்தால் பல்வேறு விடயங்கள் வித்தியாசமானவையாக இருந்திருக்கும்.

விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தை இழக்கப்போகிறார்கள் என்று பாலசிங்கம் என்னிடம் கூறினார். பாலசிங்கத்தின் முயற்சிகளை பிரபாகரன் ஆட்சேபித்த காரணத்தால் வடக்கையும் கூட இழக்கவேண்டி வந்தது.

பாலசிங்கத்தை பொறுத்தவரை விடுதலைப் புலிகள் புதிய இராணுவ தந்திரோபாயத்துக்கு முயற்சிக்காமல் சமாதான முயற்சிகளை தொடர வேண்டும் என்று பாலசிங்கம் நினைத்தார். பாலசிங்கத்தின் அறிவுரைகளை விடுதலைப் புலிகள் கேட்டு நடந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலை எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும் என்று நிச்சயமாக கூறுவேன். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கில் தமிழர்கள் ஓரளவு சுயாட்சியை அனுபவித்திருப்பார்கள்.

கேள்வி: பிரபாகரனும் சரணடைந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா

பதில்: என்னிடம் அது பற்றிய எந்த தகவலும் இல்லை. 2009 மே 18 அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்கான அறிகுறிகளே தெரிந்தன. நாம் முன்வைத்த யோசனையினால் அந்த நேரத்தில் பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் என்று நம்பினேன்.

எமது யோசனையை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியன ஆதரித்தன. அது ஒரு வலிமையான யோசனை. நீங்கள் போரில் தோற்றுக்கொண்டு போகிறீர்கள் வெற்றிப் பெறுவதற்கு எந்த வழியும் இல்லை என்று பிரபாகரனிடம் கூறினோம்.

ஒவ்வொரு போராளியும் பதிவு செய்யப்பட்டு கப்பல் மூலம் தெற்கிற்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதே எமது யோசனையாகும்.

சரணடைந்த பிறகு எவருமே கொடுமைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. அந்த யோசனை பயனளிக்கும் என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், அதை 2009 ஏப்ரலில் பிரபாகரன் நிராகரித்து விட்டார்.

ஆனால், விடுதலைப் புலிகளின் எந்த முக்கிய தலைவர்களும் உயிர் தப்பவில்லை. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மரணமடைந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக