திங்கள், 7 செப்டம்பர், 2020

இரு மொழிக் கொள்கையில் உறுதி: கே. பி.அன்பழகன்

 இரு மொழிக் கொள்கையில் உறுதி: கே. பி.அன்பழகன்

மின்னம்பலம் : தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் இன்று (செப்டம்பர் 7) கடிதம் எழுதியுள்ளார்.   பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அடுத்த கல்வி ஆண்டிலேயே புதிய கல்விக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.   ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாகத் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்  “புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனும் மூத்த அமைச்சர்களுடனும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை தொடர்பாகப் பரிந்துரை வழங்க உயர் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட உறுப்பினர் குழுவை முதல்வர் அமைத்தார்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சில கருத்துகளைக் கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.

புதிய கல்விக் கொள்கையில் 2035 ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் சேர்க்கையை 50  சதவிகிதமாக உயர்த்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது உயர்கல்வியின் சேர்க்கை விகிதம் 49 சதவிகிதமாக உள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள், ஆசிரியர்கள், கல்லூரி திறனை மேம்படுத்துதல், ஆய்வகங்கள் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் 2019-20 ஆம் கல்வி ஆண்டிலேயே தமிழகத்தில் உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் 50 சதவிகிதத்தை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் 2035 ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வியில் சேர்க்கை விகிதம் 65 ஆக இருக்கும்.

தேசிய அளவில் ஆசிரியர்- மாணவர் சேர்க்கை விகிதம் 1:26ஆக உள்ளது. இது தமிழகத்தில் தற்போது 1:17 ஆக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் பி.எட் பாடத்திட்டம் 2 முதன்மை பாடங்களுடன் நான்காண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் விரைவாகப் பட்டம் பெற்று ஆசிரியர் பணியில் சேர வழிவகுக்கும் என்பதால் இது வரவேற்கத்தக்கதாகும்.

அதுபோன்று தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத் தேர்வுகள் நடத்துவது என்பது கிராமப்புற மாணவர்களிடையே ஊக்கம் இழக்கச் செய்யும். மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் என்பதால் இதைத் தமிழக அரசு ஊக்குவிக்கவில்லை.

இந்த கல்விக் கொள்கையின் பிரிவு 10ல், கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்துக் குறிப்பிடப்படுகிறது. பிரிவு 10.3 ஒரு கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 587 கல்லூரிகளில் 53 கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி அதிகாரம் பெற்றவையாக உள்ளன.  மற்ற கல்லூரிகள் எல்லாம்   பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு மேம்பாடு அடைந்து வருகின்றன.   எனவே தமிழகத்தில் இதே நிலையைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்வியில் பிராந்திய மொழிகளில் பட்டப்படிப்பு வழங்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இம்முறை ஏற்கனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வெற்றிகரமாக இருமொழி  கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் காலத்திலும் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்

-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக