ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஆளுநர்? ஹெச்.ராஜாவின் நம்பிக்கை!.. கேரளாவுக்கு?

minnambalam :பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று (செப்டம்பர் 26) அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து யாரும் இடம்பெறவில்லை.பாஜகவுக்கு தேசிய அளவில் 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், இணையதள இளைஞர் பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து தேசிய செயலாளராக ஹெச்.ராஜா, இளைஞரணி தேசிய துணைத் தலைவராக ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்டோர் பதவி வகித்து வந்தார்கள். நேற்றைய பட்டியலில் இவர்களின் பெயர் உட்பட தமிழகத்தில் இருந்து வேறு யார் பெயரும் இடம்பெறவில்லை.

தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்பது அரசியல் ரீதியான விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிர்வாகிகள் பட்டியலால், கட்சி அளவிலும் தமிழகத்தை டெல்லி தலைமை புறக்கணிக்கிறதோ என்ற மனப்பான்மை பாஜகவினர் இடையிலேயே ஏற்பட்டிருக்கிறது.

தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்துக்கு இடமில்லாதது ஏன் என்று பாஜக தரப்பில் விசாரித்தபோது, “இந்த பட்டியல் முடிவானது அல்ல. அடுத்த பட்டியல் வரலாம். வட இந்தியாவில் கூட சில மாநிலங்களில் இதுமாதிரி நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாக அர்த்தமில்லை” என்கின்றனர்.

ஹெச்.ராஜாவுக்கு தேசிய செயலாளர் பதவி மீண்டும் தரப்படாதது பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “பாஜகவில் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார் ஹெச்.ராஜா. அவரை கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கும் ஒரு யோசனையும் பாஜக மேலிடத்தில் இருக்கிறது. ஏற்கனவே தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது போல ராஜாவை கேரள ஆளுநராக நியமிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ராஜாவின் கடினமான அணுகுமுறை கம்யூனிஸ்டுகள் அதிகமுள்ள கேரளாவுக்கு சரியாக வரும் என்றும் கருதுகிறது பாஜக. ராஜாவும் இந்த நம்பிக்கையில் இருக்கிறார். அதனால்தான் தனக்கு கட்சிப் பதவி இல்லையென்ற போதிலும் கூட தேசிய அளவில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு உடனடியாக வாழ்த்து சொல்லியிருக்கிறார் ராஜா”என்கிறார்கள்ஆளுநர்?  ஹெச்.ராஜாவின் நம்பிக்கை!.

-வேந்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக