புதன், 23 செப்டம்பர், 2020

அதிமுகவுடன் சசிகலா-டி.டி.வி இணைப்பு முயற்சி: பாஜக மும்முரம் .. கட்சித் தலைமை முடிவு அடிப்படையில் இணைப்பு?

tamil.indianexpress.com : மே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் முயற்சியாக, வி.கே.சசிகலா தலைமையிலான அணியை அதிமுக கட்சியோடு இணைப்பதற்கான செயல்பாடுகளை பாஜக மேற்கொண்டுவருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு பொதுச் செயலாளர் டி.டிவி தினகரன் டெல்லிக்கு பயணம் செய்தார். அங்கு, பாஜகவின் உயர் தலைவர்களை தினகரன் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு முறை ஆட்சியில் இருந்த அதிமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக என்ற கடுமையான சவாலை எதிர்கொள்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.  ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியதில் பாஜக முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது. ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக  இருந்த சசிகலா ஓரங்கக்கட்டப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

பேச்சுவார்த்தை பலனளிக்கும் பொருட்டு, சிறையில் இருந்து சசிகலா விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தினகரனுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக மேலிட வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்றும், முக்கிய பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தினகரன்  கோரியதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆட்சி அதிகாரம் இருக்கும் என்றும், கட்சியை வழிநடத்தும் பொறுப்பு சசிகலாவிடம் செல்லும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதிமுக- வின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், “மேற்கண்ட அதிகாரப் பிரிவு பெரும்பாலான கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்றதாக இருக்கும்”  என்று தெரிவித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக மத்திய தலைமை இணைப்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“அம்மாவின் (ஜெயலலிதாவின்) மறைவுக்குப் பின் கட்சியில் கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர் இல்லை என்பதை உறுதிசெய்ததில் பாஜக வெற்றி பெற்றது என்றே கூறலாம். சிறையில் இருந்து வெளியேறுவதில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படாமல் இருக்க சசிகலா தரப்பு இந்த நிர்பந்ததத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். எடப்பாடியும் சசிகலா உதவியுடன்,  வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்த இணைப்பு அனைவருக்கு ஒரு சாத்தியமான சூழலை ஏற்படுத்தி தருவதால், முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளது, ”என்று அமைச்சர் தெரிவித்தார்.

சசிகலாவை அணுகுவதற்கான முடிவை நியாயப்படுத்திய பாஜக மூத்த மாநிலத் தலைவர் ஒருவர், “அதிமுக அணி ஒன்றிணைந்து திமுகவை போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தனது தண்டனையை சசிகலா அனுபவித்து விட்டார். இனி, அரசியலில் அவர் தீண்டத்தகாதவர் அல்ல” என்றார்.

பிப்ரவரி 2017 இல், வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவு, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் பங்கு குறித்தும் அதிமுக, பாஜக முன்பு சுட்டிக்காட்டியிருந்தன. மூத்த அமைச்சர் இது குறித்து கூறுகையில், ” முந்தைய கருத்துக்கள்,  தற்போதைய  இணைப்புக்கு பெரிய தடையாக இருக்கும் எனக் கருதவில்லை. அம்மாவின் மரணம் குறித்து முறையான விசாரணைகள் நடைபெற்றது” என்றும் தெரிவித்தார்.

டி.டி.வி தினகரனுக்கும் சில நிர்ப்பந்தங்கள் உண்டு. ஜெயலலிதாவின் கோட்டையாக கருதப்படும்  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும், மாநிலம் முழுவதும் ஒரு பெரியக் கூட்டத்தை கவரும் தன்மையும் அவருக்கு உண்டு.  இருப்பினும், டெல்லி காவல்துறையினரும், அமலாக்கத்தால் இயக்குனரகமும் பண மோசடி வழக்கில் தினகரனை  விசாரித்து வருகிறது.

அம்மா மக்கள் கட்சி பொருளாளரும், சசிகலாவின் தீவிர  விசுவாசியுமான வெற்றிவேல் கூறுகையில் “கட்சித் தலைமை முடிவு அடிப்படையில் இணைப்பு சாத்தியமாகும்” என்று தெரிவித்தார்.

அதிமுக தனது செல்வாக்கை முற்றிலும் இழந்துவிட்டது. சின்னம்மா (சசிகலா) மற்றும் தினகரன் போன்ற தலைவர்களால் மட்டுமே கட்சியை புதுப்பிக்க முடியும் … இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்” என்று தெரிவித்தார். தினகரனின், திடீர் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டார்.

அரசியல் களத்தில் எங்களின் நிரந்தர எதிரி திமுக தான். பாஜக அல்ல. தோல்வியை எதிர்கொண்டால் தற்போதைய அதிமுக தலைமை வீழ்ச்சியடையும். முதல்வர் வேட்பாளராக போட்டியிட அங்கு பெரிய தலைவர் இல்லை என்று வெற்றிவேல் மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக