வெள்ளி, 11 செப்டம்பர், 2020

தமிழக அரசுக்கு மத்திய அரசு விரிக்கும் வஞ்சக வலை: ஜெ.ஜெயரஞ்சன்

ின்னம்பலம் : நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

இன்றைய வீடியோவில் பல்கலைக் கழகங்கள், தேர்வுகள் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு மற்றும் சர்ச்சைகள் குறித்து ஜெ.ஜெயரஞ்சன் விரிவாக பேசியுள்ளார்.

தேர்வுகள் மூலம் புதைந்து கிடக்கும் அரசியலால் மாணவர்கள் பழிகெடா ஆகிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், “இறுதி ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள், இவர்கள் தேர்ச்சி ஆகாதவர்கள் என முடிவெடுக்க வேண்டியது பல்கலைக் கழகங்கள் தான்.

தேர்ச்சி ஆகாதவர்களுக்கு மீண்டும் தேர்வு வைத்து தேர்ச்சி பெற்றால், அவர்கள் பட்டம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று பல்கலைக் கழகத்தின் செனட்டும், சிண்டிகேட்டும் தான் முடிவு செய்யும், அதன் பின் மாநில ஆளுநரிடம் அனுமதி பெற்று பட்டம் வழங்கப்படும்.

இதற்கு மாநில அரசின் அனுமதியோ, முத்திரையோ தேவை கிடையாது. இவ்விவகாரத்தில் மாநில அரசின் பொறுப்பு , நிர்வாக ரீதியாக எடுக்கக் கூடிய முடிவுகள், நிதி ஆதாரங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே உண்டு. அதைத் தவிரக் கல்வி தொடர்பான பொறுப்பு அனைத்தும் பல்கலைக் கழகத்தின் செனட், சிண்டிகேட், வேந்தர் (ஆளுநர்) ஆகியோருக்குத் தான் இருக்கிறது. இந்த சூழலில் தான் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா காலத்தில் முதல்வர் யாரெல்லாம் பணம் செலுத்தினார்களோ அவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து என்று அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் ஆளுபவர்களின் தேர்வாக அண்ணா பல்கலைக்குத் துணை வேந்தராக வந்திருக்கக் கூடிய சூரப்பா, தேர்வு நடத்தாமல் பட்டம் கொடுக்க முடியாது, அப்படிக் கொடுத்தால் ஏஐசிடிஇ அண்ணா பல்கலையின் அங்கீகாரத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும் என்று கருத்து தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பதற்கு உரிமையுடைய ஆளுநர், அரசு ஏன் இதில் தலையிடுகிறது. பல்கலைக் கழகங்கள் முடிவு செய்யட்டும், அரசு எந்தெந்த காரணங்களுக்காக இம்முடிவை எடுத்தது என்று கேள்வி எழுப்பி அரியர் ரத்து தொடர்பாகக் கையெழுத்திட்டாரா என்ற விஷயங்கள் எல்லாம் நடக்கவில்லை. நடந்த மாதிரி பொதுவெளியில் எதுவும் இல்லை.

ஆனால் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் துணைவேந்தர் கூறியது போல், ’நீங்கள் தன்னிச்சையாக எந்தவிதமான சட்டத்துக்கும் உட்படாமல் ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள். அப்படியானால் அந்த பட்டத்தையோ, பல்கலையின் அங்கீகாரத்தையோ மீறி பரிசீலனை செய்வோம் என யுஜிசி சொல்வதற்கான ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என்று யோசித்தார்களா என்பதும் தெரியவில்லை.

தற்போது முதல்வராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு பல ஊன்றுகோல்களைப் பயன்படுத்தி நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு ஆட்சி செய்து வருகிறார். ஓவ்வொரு நாளும் ஊன்றுகோல்களைப் பயன்படுத்தும் போது, என்ன நடக்கும் என்பது அவருக்கும் தெரியும், அனைவருக்கும் தெரியும்.

பொம்மலாட்டம் நிகழ்த்தும் போது ஒரு வட்டத்துக்குள், ஆடும் போது அதற்கான வலைகள் தானாகவே பின்னப்படும், அந்த வலைகளை யார் பின்னாடி பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் பொம்மலாட்டத்தை நிகழ்த்துவார்கள். இது எல்லாருக்கும் பொருந்தும். இந்நிலையில் இதுபோன்ற வலையில் மாணவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. இந்த சூழலில் ஆளுநர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது.

இப்போது தேர்வு எழுதாத மாணவர்கள் முதல்வரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து தள்ளலாம் இது ஆரோக்கியமான விஷயமல்ல. நாளை நீதிமன்றம் இந்த டிகிரி செல்லாது என்று சொல்லும் போது மாணவர்களுடைய வாழ்க்கை பொறுப்பை முதல்வர்தான் ஏற்க வேண்டும். மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல முடிவை எடுத்து, அவர்களின் வாழ்க்கையில் யாரும் விளையாடாத அளவுக்குக் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் உள்ளது. அதே போல, மாணவர்களின் வாழ்க்கையில் பல்கலைக் கழக துணை வேந்தர்களாக இருக்கக் கூடியவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. அவரவர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மாணவர்களின் வாழ்க்கையை சூரையாடிவிட கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ வடிவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக