வெள்ளி, 4 செப்டம்பர், 2020

சமத்துவபுரம் குறித்து எதிர்மறையான கருத்து ஆங்காங்கே விதைக்கப்படுகிறது

 Suriya Krishnamoorthy : சமீப காலமாக சமத்துவபுரம் குறித்து எதிர்மறையான கருத்து ஆங்காங்கே விதைக்கப்படுகிறது. கலைஞரின் பெருமைமிகு சாதனைகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது இழிவு செய்வார்கள், அதன் தொடர்ச்சியாக தற்போது சமத்துவபுரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்று காலை, ஒரு முற்போக்கு குழுவில் இது தொடர்பான விவாதம் ஒன்று எழுந்தது. அதில்

வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றுக்கு இரண்டு பகுதிகளாக விளக்கம் அளித்தேன். எதிர்காலத்தில் அந்த விளக்கத்திற்கான தேவை அதிகமாகும் என்பதால், இங்கே பதிவு செய்கிறேன். விளக்கம் - 1 (from my experience) சமத்துவபுரத்தில் இருக்கிற என் பெரியப்பா வீட்டில் சில காலம் வளர்ந்தவன் என்கிற முறையில் மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் பலவும் எனக்கு அந்நியமாகத்தான் தெரிகிறது.

 1) கட்சிக்காரர்களுக்கே வீடுகள் ஒதுக்கப்பட்டது -

அரசியலில் இது இயல்பு என்றாலும், பல ஊர்களில் திமுக காரர்கள் சொல்லுவது, ஆட்சி தான் நம்மதுன்னு பேரு, வீடு ஒதுக்குனாலும், கடன் தள்ளுபடின்னாலும் மொதல்ல அவங்களுக்கு தான் நடக்குது.
ஆகவே இந்த குற்றச்சாட்டெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

சமத்துவபுரத்தில் எத்தனையோ அதிமுக வீடுகளையும், கொடிக்கம்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

2) ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டுள்ளது -

இல்லை, நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல் இங்கே யாருக்கும் தெரியாமல் இல்லை. settlement area வுக்கு நடுவில் எங்கிருந்து போய் நிலத்தை கையகப்படுத்துவீர்கள். அப்படியும் தாண்டி எங்கெல்லாம் சாத்தியப்பட்டதோ அங்கெல்லாம் ஊருக்கு மத்தியில் தான் கட்டப்பட்டது. நான் வளர்ந்த பம்பப்படையூர் சமத்துவபுரம் அதற்கொரு சான்று. பணி நிமித்தம் சுற்றித்திரிந்து பட்டீஸ்வரம் சமத்துவபுரம், கல்லக்குடி அருகில் ஓர் சமத்துவபுரம் இப்படி என் நேரடி அனுபவத்திலிருந்தே ஊருக்கு மத்தியில் இருக்கும் சமத்துவப்புரங்களின் பட்டியலை கொடுக்க முடியும்.

3) பட்டியலினத்தவர் மட்டுமே வாழ்கிற இடம் எப்படி சமத்துவபுரமாகும் -

இல்லை தவறான தகவல், அதற்கும் நானே சாட்சி. எங்கள் பெரியப்பா வீட்டிற்கு அடுத்த வீடு பார்ப்பனர் வீடு. எல்லா சாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து தான் ஒதுக்கப்பட்டது. பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

4) டாய்லெட் இருக்கும் தண்ணீர் வராது -

சமத்துவபுரத்தில் ஒவ்வொரு வீடுகளுமே தனிக்கழிவறை கொண்ட வீடுகள் தான். ஒவ்வொரு சமத்துவபுரமும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய பகுதி தான்.

பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வரவில்லை என்பதெல்லாம்


சமத்துவபுரத்தின் சிக்கல் மட்டுமல்ல, நாட்டில் பெரும்பாலான பொதுக்கழிப்பிடங்களின் நிலை அதுதான். அவற்றைக் கொண்டு சமத்துவபுரத்தை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.

5) பஸ் போக்குவரத்து சரியாக இல்லை, நூலகம் இருக்கும் நூல்கள் இருக்காது -

இவைவும் சமத்துவபுரத்திற்கு மட்டுமேயான சிக்கல் இல்லை, இயற்கையாக அமைந்த பல ஊர்களுக்குமே கூட இந்தச் சிக்கல் உண்டு. மேலும் எல்லா சமத்துவபுரத்திலும் இந்த பிரச்சனை இருப்பதாகவும் சொல்லமுடியாது. என் நேரடி அனுபவத்திலிருந்து நான் மேலே குறிப்பிட்ட மூன்று சமத்துவபுரங்களிலும் இந்த சிக்கல் கிடையாது.

6)நிதி ஒதுக்கவில்லை / நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது -

சமத்துவபுரம் போன்ற கட்டுமானங்கள் பெரும்பாலும் long term / one time investment தான். கட்டிமுடிக்கப்பட்ட எந்த சமத்துவபுரமும் அதன் உள்ளாட்சி அமைப்பின் ஆளுகைக்கு வந்துவிட்ட பிறகு அதற்கென்று என்ன நிதி ஒதுக்க வேண்டும் என்று புரியவில்லை.

புதிதாக சமத்துவபுரங்களை உருவாக்க நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினால், அதற்கு உரிய தரவுகளைக்கொண்டு விவாதிக்கலாம்.

7) அம்மையார் ஜெ கட்டிய யாத்ரி நிவாஸ், டெல்லியில் உள்ள எம்பசி போல எவ்வளவு தரமாக இருக்கிறது, சமத்துவபுரம் அந்த தரத்தில் இல்லையே-

டெல்லியில இருக்குற embassy கணக்காக, ஸ்ரீரங்கத்துல "யாத்ரி நிவாஸ்" கட்டிய அம்மையார்.

சமத்துவபுரம் என்றோ அல்லது வேற ஏதோ ஒரு பெயரிலோ, எல்லாரும் ஓரிடத்தில் வாழ ஒரு குடிசை கூட கட்டிக்கொடுக்கவில்லை.

அம்மையார் யாத்ரி நிவாஸ் கணக்காக, சமத்துவபுரத்தையும் கட்டிக்கொடுத்திருந்தால் மெச்சியிருக்கலாம்.

8)இடவசதி பத்தவில்லை - ஆமாம் நெருக்கடி இருக்கும் தான். ஆனால் தாராளமாக 3 - 4 பேர் வாழ முடியும்.

****************

விளக்கம் - 2 ( from some documented facts)

(ஒதுக்குப்புறமாக இருக்கிறது, நிதி ஒதுக்கவில்லை, பராமரிப்பு இல்லை, பட்டியலின மக்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இதில் பதில் கிடைக்கக்கூடும்)

// வீட்டின் உரிமை பெண்ணுக்கு, பொதுச்சுடுகாட்டுக்கு உத்திரவாத பத்திரம் - இப்படி முற்போக்குத் திட்டம் வேறு இருந்தால் சொல்லுங்கள் //

1) ஒரு தொகுப்பில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை - 100.

2) முதல் சமத்துவபுரம் - 1997 திட்ட மதிப்பீட்டில் மேலக்கோட்டையில் கட்டப்பட்டது.

3) ஒரு வீட்டை உருவாக்க திட்டச்செலவு - 35000 (1997 - 98 ஆம் ஆண்டில்)

1997 ஆம் ஆண்டில் திட்ட அறிவிப்பின் போது ஒதுக்கப்பட்டத் தொகை - 35கோடி.

4) திட்டச் செயலாக்கம் - ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில்

5) பரப்பளவு -

அ) ஒரு சமத்துவபுரம் குறைந்தபட்சம் 8 முதல் 9 ஏக்கர் வரை இருக்க வேண்டும்.

ஆ) ஒவ்வொரு வீட்டின் பரப்பளவும் - 5 சென்ட் என்கிற அளவில் இருக்க வேண்டும்.

இ) ஒவ்வொரு வீட்டின் கட்டுமானப் பகுதியும் குறைந்தபட்சம் - 260 சதுர அடி இருக்க வேண்டும்.

7) இடம் தேர்வு செய்வதற்கு கருத வேண்டிய அம்சங்கள் (முக்கியமானவை மட்டும்) -

அ) முன்னர் கட்டப்பட்ட சமத்துவபுரம் அமைந்துள்ள block தவிர்க்கப்பட வேண்டும்

ஆ) பேருந்து வசதி உள்ள பொதுச்சாலைக்கு அருகில் அமையப்பெற்றிருக்க வேண்டும்.

இ) அருகாமை குடியிருப்புகள் குறைந்தப்பட்சம் 1 முதல் 2 கிலோமீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஈ) சதுப்பு நிலம், பாறைப்பகுதி, மலைப்பகுதி, HT power line போகிற இடங்கள், வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதி போன்றவை தேர்வு செய்யப்படக்கூடாது.

உ) ஆட்சியபனைக்கு உரிய புறம்போக்கு இடங்களான ஏரி / குளம் / வாய்க்கால் போன்றவை பயன்படுத்தப்படக்கூடாது.

8) கட்டுமானப் பணிகளுக்கான காலம் - 12 மாதங்களில் நிறைவு செய்ய வேண்டும்.

9) சமத்துவபுரத்தில் இருக்க வேண்டிய வசதிகள்.

அ) முழுமையான மின்வசதி, தெருவிளக்குகள் உட்பட.

ஆ) அனைத்து வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். (வறட்சிப்பகுதிகளில் குறைந்தபட்சம் ஐந்து வீடுகளுக்கு ஒரு பொதுக்குழாய் அமைத்திருக்க வேண்டும்)

இ) அனைத்து சமத்துவபுரங்களிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட வேண்டும்.

ஈ) தெருக்களில் அமைக்கப்படும் சாலை விரிவான கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்பட வேண்டும் (7m width)

உ) நியாயவிலைக் கடை

ஊ) சமுதாயக்கூடம்

எ) தொடக்கநிலை சுகாதாரக்கூடம்

ஏ) நூலகம் மற்றும் பல.

10) கட்டுமான அம்சங்கள்

அ) அனைத்து வீடுகளிலும் தனிக் கழிப்பறை வசதி (along with proper disposal network / septic tank with soak pit)

ஆ) வெள்ளத்தடுப்புக்காக தளம் 1 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும்.

11) பயனாளர்கள் தேர்ந்தெடுப்பு -

இது முழுக்க முழுக்க வர்க்கம், சாதி மற்றும் மாற்றுத்திறன் அடிப்படையில் ஒதுக்கப்படுவது.

அ) screen 1 - வறுமைக்கோட்டின் அடிப்படையில் பயனாளர்கள் பிரிக்கப்படுவர்

ஆ) screen 2 - பொருளாதாரத்தில் நலிவடைந்தோரில், சாதி ரீதியாக இடங்கள் ஒதுக்கப்படும்.

பட்டியலினத்தவர் - 40வீடுகள்
BC - 25 வீடுகள்
MBC - 25 வீடுகள்
others - 10 வீடுகள்.

இ) screen 3 - ஒவ்வொரு பிரிவிலும் 3% மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

சமத்துவபுரத்திலும் சாதிரீதியாக குழுமுவதைத் தடுக்க - எந்த எந்த பிரிவினருக்கு எந்த எந்த வீடுகள் என்பதையும் முன்வரையறை செய்தார்கள்.

for each 20 house, this will be the order

SCs - 2,4,7,10,12,14,17,20,
BCs - 1,5,9,11,15.
MBCs - 3,6,13,16,19.
others - 8,18.

12) பட்டா விவகாரம்.

வீட்டின் உரிமை பெண் பெயரில் தான் இருக்கும். (குடும்பத்தலைவி இல்லாதபோது மகள் உள்ளிடை வேறு வாய்ப்பில்லாத போது தான் ஆண் பெயரில் பட்டா வழங்கப்படும்)

12) உத்திரவாத பத்திரம்.

பயனாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உத்திரவாதப் பத்திரம் அளிக்க வேண்டும். அதில் உள்ள அம்சங்கள்.

அ) 15 ஆண்டுகள் வீட்டை விற்கக்கூடாது (பின்னர் 30 ஆண்டுகள் என்று மாற்றப்பட்டது)

ஆ) சாதி / மதத் தலைவர்கள் சிலைகளை நிறுவக்கூடாது.

இ) பொதுச்சுடுகாட்டை பயன்படுத்த வேண்டும்.

உ) சாதி பாகுபாடு இல்லாமல் பொது வசதிகளை பயன்படுத்த வேண்டும்.

இ) தனி வழிபாட்டு இடங்களை அமைக்கக்கூடாது.

13) last but not least - ஒவ்வொரு சமத்துவபுர முகப்பிலும் பெரியார் சிலை அமைக்கப்படும்.

சமத்துவபுரம் குறித்த ஆணைகள் பெரும்பாலும், "inorder to promote social justice and thanthai periyar's message on social equality..." என்று தான் தொடங்கியது.

Ref 1- G.O (Ms) No. 59 | dated 14/07/2009. | Dept. of Rural development and panjayat raj.

Ref 2 - paper titled, " TN : Samathuvapuram - towards spatial equality" from Madras University. @2002

**********************

சமத்துவபுரம் என்பதை கொண்டாடுவதன் அடிப்படை, எல்லோரும் கூடி வாழ்கின்ற இடம். கிராமங்களுக்குள் ஒரு நகர இயல்பை உருவாக்குவதற்கான முயற்சி என்கிற தத்துவ அடிப்படை தான் முதல் காரணம்.

இரண்டாவது காரணம் வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு வீடும், நிலமும் கிடைக்கிறதென்பது.

இந்த அடிப்படையிலிருந்து தான் சமத்துவபுரத்தின் மீதான விமர்சனங்களை அணுக வேண்டும் என்று நினைக்கிறேன்.

1 கருத்து:

  1. இது ஒரு நல்ல திட்டம். உலகத்திற்கு ஒரு வழிகாட்டியாக திட்டம். சகோதர த்தை வலியுறுத்தும் ஒரே அரசு திட்டம். ஈடு இணையற்ற ஒருமையை வலியுறுத்தும் திட்டம். கலைஞர் சமுதாய நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதற்கும் ஏற்றத்தாழ்வை சமன் படுத்த முயற்சித்தார் என்பதற்கும் ஆதாரமாக விளங்கும் திட்டம்.

    பதிலளிநீக்கு