ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

சாரு நிவேதிதா : ஒரு பாடகரின் மறைவை உங்கள் சொந்த துக்கமாக மாற்றுவது.. ?

 charunivedita.online  : 140. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்…"2020-0 9-26       இதை எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்.  மனம் பதற்றமடையும்.  என் மீது கோபம் வரும்.  அது உங்களுக்கும் அனாவசியம்.  எனக்கும் தேவையற்ற பிரச்சினை.  இதை எழுதுவது எழுத்தாளர்களுக்கு மட்டுமே.  மனசு கேட்காமல்தான் எழுதுகிறேன்.  அதுவும் இன்னும் நாலே மணி நேரத்தில் கோபி கிருஷ்ணன் பற்றிய உரை இருக்கிறது.  மூன்று மணி நேரம் பேச வேண்டும்.  அப்படிப்பட்ட நிலையில் இதை எழுதுகிறேன். 

நீங்களெல்லாம் (எழுத்தாளர்கள்) ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரியும் புஷ்பா தங்கதுரை மாதிரியும் அல்லது நம்முடைய காவிய நாயகி ரமணி சந்திரன் அம்மாள் மாதிரியும் எழுதுவதில்லை.  கவிஞர்களாகிய நீங்கள் ஏன் கவிஞர் விவேகா மாதிரி எழுதாமல் தர்மு சிவராமு மாதிரியும் பாரதி மாதிரியும் பாப்லோ நெரூதா மாதிரியும் ரில்கே மாதிரியும் எழுதுகிறீர்கள்?  இது ஒன்றுதான் என் சந்தேகம்.  இதற்கு பதில் தெரியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது.  ஏதோ ஒரு கலை உன்னதத்தை நோக்கித்தானே உங்கள் பயணம்?  அதனால்தானே ராஜேஷ்குமாரும் வேண்டாம் விவேகாவும் வேண்டாம் என்று இந்தப் பாதையில் துணிந்தீர்கள்?  அதுவும் எப்படிப்பட்ட பாதை?  வழியில் ஒவ்வொரு முக்கிலும் ரத்தக் காட்டேரி நின்று கொண்டிருக்கும் பாதை.  முதல் பலி பாரதி.  அடுத்தது புதுமைப்பித்தன்.  அடுத்தது ஜி. நாகராஜன்.  அடுத்தது ஆத்மாநாம்.  அடுத்தது தர்மு சிவராமு.  அடுத்தது கோபி கிருஷ்ணன்.  ஒன்றா ரெண்டா, சொல்லிக் கொண்டே போகலாம்.  எழுத ஆரம்பித்தாலே பிச்சைப் பாத்திரத்தைக் கையில் கொடுக்கும் பாதை இது.  இருந்தும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கிறீர்கள்.  உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 

ஆனால் இது என்ன, எப்போது பார்த்தாலும் காமன்மேனோடு சேர்ந்து கொண்டு கும்மாளம் போடுகிறீர்கள், ஒப்பாரி வைக்கிறீர்கள்?  அதுதானே எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது.  கொஞ்சம் விளக்குங்களேன்.  ஜனரஞ்சகத்துக்கும் இலக்கியத்துக்கும் நடுவில் நின்று கொண்டிருந்த சுஜாதாவே ஜனரஞ்சகத்தில் ஆழமாகக் கால் ஊன்றாத காலத்தில் கணையாழியில் சிவாஜியின் நடிப்பைப் பற்றிப் பலவாறாகக் கிண்டல் அடித்திருக்கிறார்.  கண்ணதாசன், பீம்சிங், வாலி, ஸ்ரீதர்  யாருமே தப்பவில்லை.  நார்நாராகக் கிழித்திருக்கிறார். 

ஒரு ஆள் இருந்தார்.  அவர் வண்டியில் போனால் பெண்கள் சமையலை அப்படியே நிறுத்தி விட்டுத் தெருவுக்கு வந்து அவர் வண்டியின் பின்னாலேயே ஓடுவார்கள்.  அவர் மேடையில் பாடினால் அதைக் கேட்க மரமெல்லாம் மனிதத் தலையாக இருக்கும்.  பலமுறை விளக்குக் கம்பத்தில் மின்சாரம் அடித்து செத்திருக்கிறார்கள்.  இப்போது ராஜாவைக் கொண்டாடுவதை விடப் பத்து இருபது மடங்கு அதிகமாகக் கொண்டாடினார்கள், தொழுதார்கள்.  இப்போது அவர் பெயர் யாருக்காவது தெரியுமா?  நான் யாரைச் சொல்கிறேன் என்றாவது உங்களால் யூகிக்க முடிகிறதா?  தங்கத் தட்டில் சாப்பிட்டார் ஐயா?  அத்தனை பணம்!  Entertainment.  பாடகர்.  ஆனால் தியாகய்யர் அப்படி அல்ல.  அவர் க்ரியேட்டர்.  அவர் கவிஞர்.  அவர் உஞ்சவிருத்திக்குப் போனால் அவரைக் கடவுளின் அவதாரமாகக் கருதி அவர் பாதங்களை நீரினால் சுத்தப்படுத்தி பாத பூஜை செய்து அரிசி கொடுத்தார்கள்.  இந்த ஆழ்வார்ப்பேட்டை சினிமாக்காரர் சொல்வது போல் அவர் பிச்சை எடுக்கவில்லை.   

என் குழப்பம் சந்தேகம் எல்லாம் என்னவென்றால், ஒரு பக்கம் புதுமைப்பித்தன் பாரதி என்று உச்சத்தில் நிற்கிறீர்கள்.  இன்னொரு பக்கம் சினிமா பாட்டு என்ற மட்டரகப் பொழுதுபோக்கில் கிடக்கிறீர்கள்.  கிடங்கள்.  ஆட்சேபணையே இல்லை.  நானும் அவ்வப்போது கிடப்பேன்.  ஆனால் இதுவே சுவாசம் என்கிறீர்கள்.  என் உயிரே போய் விட்டது என்கிறீர்கள்.  என் வாழ்க்கையே போய் விட்டது என்கிறீர்கள்.  என் ஆன்மாவே கரைந்து விட்டது என்கிறீர்கள்.  அப்படியானால் ரஜினி மட்டும் அவர் அரசியலில் இறங்கலாமா வேண்டாமா என்பது பற்றி இன்னும் கடவுள் அவருக்கு answer தரவில்லை என்று சொன்னால் கிண்டல் அடிக்காதீர்கள்.  அவருக்கு ஒரு நியாயம்.  உங்களுக்கு ஒரு நியாயமா? 

எழவு வீட்டில் ஏகடியம் பேசக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவன் அல்ல நான்.  ஆனால் ஒரு பாடகரின் மறைவை  உங்கள் சொந்த துக்கமாக மாற்றுவது எது?  சொல்லுங்கள்.  நானும் உங்கள் துக்கத்தோடு சேர்ந்து கொள்கிறேன்.  பாமரர்களைப் போலவே காமன்மேன்களைப் போலவே உங்களுக்கும் சினிமாதான் உயிர்மூச்சு.  சினிமாதான் உங்கள் மதம்.  கலை உன்னதம் என்று சொல்வதெல்லாம் வெறும் பகட்டு.  உங்களையும் பாமரரையும் பிரிப்பது கலை ரசனை அல்ல. 

தி. ஜானகிராமனோ, எம்.வி. வெங்கட்ராமோ, க.நா.சு.வோ, ஆதவனோ, ந. பிச்சமூர்த்தியோ, கு.ப. ராஜகோபாலனோ, சுந்தர ராமசாமியோ, புதுமைப்பித்தனோ யாருமே இப்படி வெகுஜன ரசனை சார்ந்த, பாமர ரசனை சார்ந்த பிரமுகர்கள் காலமாகும்போது இப்படி “என் உயிர் போச்சே” என அழுததில்லையே?  ஆனானப்பட்ட காந்திக்கே அவர்கள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?  காரணம், அப்போது தி. ஜானகிராமனின் ரசனை அரியக்குடி ராமானுஜ அய்யங்காராக  இருந்தது.  சினிமாவின் டம்குடப்பாவாக இல்லை.  அது சரி, ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு நித்யானந்த பரமஹம்ஸா வரும்போது தி. ஜானகிராமனுக்கு இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?  நடத்துங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக