ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

எஸ்.பி.பியைக் காப்பாற்ற முடியாதது ஏன்?

 எஸ்.பி.பியைக் காப்பாற்ற முடியாதது ஏன்?

minnambalam :எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 52 நாட்கள் சிகிச்சை அளித்த பின்னரும் அவரை காப்பாற்ற முடியாதது ஏன் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.   பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 52 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் நேற்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.     எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்று அவருக்கு சிகிச்சை அளித்த எம்.ஜி.எம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைத் துறை மருத்துவத் தலைவர் டாக்டர் சபாநாயகம் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் கடந்த மாதம் வரை அவருக்கு உடலில் வேறு எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக சர்க்கரை நோயோ அல்லது வாழ்க்கை முறை சார்ந்த வேறு பிரச்சினைகளோ இல்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது வயது காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வலியுறுத்தினோம்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த மூன்று நாட்கள் வரை அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதன் பின்னர் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்தது. இதனால் ஆகஸ்ட் 9ஆம் தேதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. பின்னர் நுரையீரலில் தொற்று தீவிரமாக பரவியதால், ஆகஸ்ட் 13ஆம் தேதி அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அடுத்த நாளில் எக்மோ சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி முறையில் 12 முறை கலந்து ஆலோசித்தோம். ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டதன் பயனாக, அவருக்கு நினைவு திரும்பியது. இதனால் பிறர் பேசுவதை உணர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சைகைகள் மூலம் பதில் அளிக்க தொடங்கினார். தனது மகன், மகளை பார்த்தபோது ‘லவ் யூ ஆல்’ என கைப்பட எழுதி கொடுத்தார்.

மேலும், அவரது திருமண நாளான செப்டம்பர் 5ஆம் தேதி அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்து கேக் வெட்டியதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பார்த்து ரசித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வாய் வழியே திட உணவுகளை உட்கொள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை முதலே அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மூளையில் ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 48 மணி நேரம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உயர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர போராடினோம். இருப்பினும் அது பலன் அளிக்கவில்லை. அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழப்பு ஏற்பட்டதால், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக