வெள்ளி, 18 செப்டம்பர், 2020

காரைக்கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா.. கலைஞரின் கார் டிரைவர்..!

 விகடன் :   கண்கலங்கும் கலைஞரின் கார் டிரைவர்..! கலைஞரை
சுமந்துகொண்டு, கோட்டைக்கும் அறிவாலயத்துக்கும் கோபாலபுரத்துக்குமாக ஓடிக் களைத்த கார், தற்போது கனத்த மௌனத்துடன் கோபாலபுரம் இல்லத்தின் வாசலோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கே தொடங்கி விடும் #கலைஞரின்_நாட்கள். நள்ளிரவு வரை விழித்திருந்து

உழைப்பார். அவருக்கு கார் டிரைவராக இருப்பது என்பது, கிட்டத்தட்ட இதேபோல விழித்திருந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு. சஞ்சீவி அப்படித்தான் இருந்தார். ஓய்வின்றி உழைத்த கலைஞருக்கு ஓட்டுநராகப் பணிபுரிந்த முதியவர் சஞ்சீவி, கலைஞருடனான கார்ப் பயணங்கள் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்... 

‘‘சிறுவயதிலிருந்தே தி.மு.க-வினருடன் எனக்குப் பழக்கம் உண்டு. என்றாலும், 1975-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பேராசிரியர் அன்பழகனிடம் கார் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது மிசா காலம். கட்சியினர் அனைவரும் கைதாகிச் சிறை சென்றுவிட்டனர். கட்சி ஆபீஸில் ஓட்டுநர் பணியைத் தொடர்ந்தேன். மிசா காலத்துக்குப் பிறகு கலைஞருக்கு அறிமுகமாகி, அவரின் பிரத்யேக கார் ஓட்டுநராகப் பணிபுரிய ஆரம்பித்தேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர், கலைஞருக்கும் கார்களுக்குமான நெருக்கம் குறித்துப் பேசத் தொடங்கினார் ‘அம்பாசிடர் கார்தான் கலைஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். 1976 தொடங்கி 1996 வரையிலும் அம்பாசிடர் காரில்தான் வலம் வந்தார்.

அதன்பிறகு ஏறி இறங்க வசதியாக இருக்கிறது என்ற காரணத்தினால், டாடா சுமோவுக்கு மாறினார். அவருக்கு முதுகுவலி பிரச்னை ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபிறகு, சஃபாரி காருக்கு மாறினார். புதிதாக வாங்கிய சஃபாரி காரை, டி.வி.எஸ் நிறுவனத்தில் கொடுத்து அவர் பயணிப்பதற்கு ஏற்ற வகையில், சில மாற்றங்களைச் செய்து பயன்படுத்தினோம்.

இறுதி நாள்களில் அவர் வீல் சேருக்கு மாறியபோது, அவருக்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜப்பான் நாட்டுத் தயாரிப்பான ‘டொயோடா ஆல்ஃபர்டு’ காரைப் பயன்படுத்தினார். எத்தனை கார்களுக்கு மாறிவிட்டாலும்கூட, ‘அம்பாசிடர் கார் சொகுசு... எதிலுமே இல்லைய்யா’ என்று அடிக்கடி சொல்வார். பொதுவாக கார்ப் பயணங்களின்போது, வேகமாகப் பயணிப்பது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 120 கி.மீ வேகத்தில்கூட பல சமயங்களில் காரை ஓட்டியிருக்கிறேன்.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே, சாப்பாடு, பிஸ்கட், சீரகத் தண்ணீர், மோர், ஃப்ளாஸ்க் நிறைய காபி என உணவுப் பொருள்களில் ஆரம்பித்து விக்ஸ் வரை அன்றைய தினத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குடும்பத்தினரே கூடையில் எடுத்துவந்து காரினுள் வைத்துவிடுவார்கள். தினசரிகள், இதழ்கள் போன்றவற்றை நான் அடுக்கி எடுத்துவந்து காரினுள் வைத்துவிடுவேன். பயணத்தின்போதே பேப்பர் மற்றும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுத்துக்கொள்வார். பெரும்பாலான சமயங்களில், காரில் அவருடன் கட்சியின் சீனியர் தலைவர்கள் பலரும் பயணிப்பார்கள். அவர்களுடன் கட்சி விஷயங்களைப் பேசியபடியே வருவார்.
அவர், வெங்காய பக்கோடா விரும்பிச் சாப்பிடுவார். வெளி உணவுப் பொருட்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். சாலையோரங்களில் தொண்டர்கள் கூட்டமாக நின்று கையசைத்தால், காரை நிறுத்திப் பதில் வணக்கம் செலுத்துவார். சிக்னல்களில் கார் நின்றுகொண்டிருக்கும்போது, காரினுள் கலைஞர் இருப்பதைப் பார்த்துப் பரவசப்பட்டு காருக்கு அருகே வரும் தொண்டர்களைத் தவிர்க்காமல் கைகுலுக்கிச் செல்வார். பயணங்களின்போது வேறு யாரும் கூட இல்லாமல் எப்போதாவது ஓய்வாக இருந்தால், பழைய சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பார்.
அவரால் நடமாட முடிந்த காலம்வரை தினமும் அதிகாலையிலேயே எழுந்து, நடைப்பயிற்சிக்காக அறிவாலயம் செல்வார். அப்போது காரினுள் ஏறியதும் ரேடியோ நியூஸ் கேட்பார். அறிவாலயத்தில் அவரின் செல்ல நாய்க் குட்டி அவரது வருகைக்காகக் காத்திருக்கும். நாய்க்கு பிஸ்கட் போட்டு விட்டு, அதை செல்லமாகக் கொஞ்சியபடிச் சாதாரண லுங்கி, பனியனில் அறிவாலயத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.
என் மகன் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்த கலைஞர் வந்திருந்தபோது, எனக்கு ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு வந்திருந்தது. அவர் முன்பாக வரத் தயங்கி, நின்றிருந்தேன். என்னைத் தேடிப்பார்த்தவர், பின்னவர் விவரமறிந்து ‘சஞ்சீவி என்ற மருந்தின் பெயரை வைத்திருப்பவனுக்கே இப்படி ஆகிவிட்டதே...’ என்று நகைச்சுவையாகக் கூறினார். ‘சஞ்சீவி பணம், காசு சேர்க்கவில்லை என்றாலும், நட்பைச் சேர்த்து வைத்திருக்கிறான் என்பது திருமணத்துக்கு வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தாலே தெரிகிறது’ என்று பாராட்டிப் பேசினார்.
காரில் ஏறும்போதே ,
‘சாப்பிட்டீர்களா?’ என்று விசாரிப்பார்.
டிரைவர்தானே என்ற அலட்சியம் இல்லாமல், சக நண்பர் போலவே கருதிப் பழகுவார். காரில் ஏறியதும், ‘கிளம்புய்யா சஞ்சீவி...’ என்று கரகரத்த குரலில் கட்டளை யிடுவார். இப்போது அவர் இல்லை. கார் மட்டும் கோபாலபுரத்தில் தனித்து நிற்கிறது. ‘காரைக் கிளப்பு சஞ்சீவி...’ என்ற தலைவர் கலைஞரின் கரகரத்த குரல் மீண்டும் கேட்டுவிடாதா என ஏங்கி நிற்கிறேன்...’’ என்று கண் கலங்குகிறார்





  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக