வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சசிகலா வருவதற்குள் பொதுக்குழு? அதிமுக திடீர் ஆலோசனை!

 சசிகலா வருவதற்குள் பொதுக்குழு?  அதிமுக திடீர் ஆலோசனை!

minnambalam :அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் நேற்று மதியம் போன் செய்யப்பட்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.   இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப் போவதாக தகவல்கள் வந்தாலும், அதற்கெல்லாம் இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதன் அவசியம் என்ன ?

அண்ணா பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 13 ஆம் தேதி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், ‘அம்மா இல்லா துணிச்சலில் இன்னும் 8 மாதங்களில் நாங்களே ஆளுங்கட்சி’ என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் தீயசக்தியான தி.மு.க.வை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விடாமல் செய்கிற ஆற்றல் அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நமக்குத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நேரம் நெருங்குகிறது.  அவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான உறுதி ஏற்கும் தினமாக அண்ணாவின் பிறந்தநாளை அமைத்துக்கொள்வோம். அன்றைய தினத்தில் கழக அமைப்பு ரீதியான அனைத்து பகுதிகளிலும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்’என்று அறிவிப்பு வெளியிட்டார் தினகரன். அதாவது தன்னை திமுகவோடு சேர்த்து வைத்துப் பேசும் தற்போதைய அதிமுக நிர்வாகிகளுக்கு தனது லட்சியமே திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் என்று அந்த அறிவிப்பு மூலம் சொல்லியிருக்கிறார் தினகரன். இது அதிமுகவுக்குள் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதைவிட சசிகலாவை ஜனவரி 27 ஆம் தேதிக்கு மேல் சிறையில் வைத்திருக்க முடியாது என்று சிறைத் துறை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டது. சசிகலாதரப்பினரோ ஜனவரி வரைக்கும் ஆகாது...இந்த வருடத்திலேயே சசிகலா ரிலீஸ் ஆவார் என்று சொல்லி அதற்கான வரவேற்பு ஏற்பாடுகளிலும் இறங்கிவிட்டனர்.

இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவை சசிகலாவின் விடுதலைக்கு முன்பே கூட்டி விட வேண்டும் என்ற திட்டத்தில்தான் இன்றைய அதிமுக ஆலோசனைக் குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சசிகலா விடுதலை பெற்று வெளியே வந்தால் அவரை யார் யார் சென்று சந்திப்பார்கள் என்பது அதிமுகவுக்குள் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. எடப்பாடியே போய் சென்று சசிகலாவை சந்தித்தாலும் சந்திக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்னின்ன அமைச்சர்கள் போவார்கள் என்று அவரவர் வட்டாரத்தில் இருந்து யூகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென கூட்டப்பட்டுள்ள இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா வருவது பற்றியும் அதிமுக பொதுக்குழு கூட்டப்படுவது பற்றியும் விவாதிக்கப்படலாம் என்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் தரப்பில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக