ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

சசிகலா: அக்டோபரில் அபராதம்... அடுத்து விடுதலை!

/minnambalam.com : சசிகலாவின் விடுதலைக்கு அடிப்படையாக இருக்கும் அபராதத் தொகை செலுத்துதல் தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளது,சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம்சசிகலா: அக்டோபரில் அபராதம்... அடுத்து விடுதலை!

வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.       இதே வழக்கில் ஜெயலலிதாவோடு சிறையில் இருந்த நாட்கள், சிறை விதிகளின்படியான சலுகைகள், அவருக்கான விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் காரணமாக சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுதலையாவார் என்று அமமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோலவே, சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.

அதற்கான முதல் கட்டமாக சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 2014 ஆம் தேதி செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோருக்கு நான்கு வருட சிறை தண்டனை. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம், மற்ற அனைவருக்கும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

அதன் பின் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இந்த தண்டனையை 2015 மே 11 ஆம் தேதி ரத்து செய்தார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவில் உச்ச நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவரை அடுத்து குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி மூவரும் தலா பத்து கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். தண்டனைக் காலம் முடிவதற்குள் அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். இல்லையேல் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதத் தொகையை காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்த வேண்டும். அந்த தொகைக்கான வருமான ஆதாரச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் தண்டனைக் காலம் முடிய இன்னும் அக்டோபர், நவம்பர், டிசம்பர். ஜனவரி ஆகிய நான்கு மாதங்களே பாக்கியிருக்கும் நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அக்டோபர் மாதம் செலுத்த தயாராகி வருகிறார்கள்.

இதுகுறித்து சசிகலா தரப்பினரிடம் பேசியபோது, “பெங்களூருவை சேர்ந்த தகவலறியும் உரிமை ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஜூன் 6ஆம் தேதி பதிலளித்த சிறை நிர்வாகம், “குற்றவாளிகளின் விடுதலை தேதியைக் கணக்கிடுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளடங்கியுள்ளன. உதாரணமாக அபராதத் தொகை நிலையின் அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலாவின் விடுதலை குறித்து சரியான தேதியை கொடுக்க முடியவில்லை’ என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க சட்டத்துக்கு உட்பட்டு சசிகலாவுக்கான அபராதத்தொகையை அக்டோபரில் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபரில் அபராதம் செலுத்தப்பட்டு விட்டால் அதன் பின் சலுகை நாட்களைக் கணக்கிலெடுத்து விரைவில் சசிகலா விடுதலையாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சசிகலா அபராதம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அவர் மீது வருமான வரி வழக்குகள் சூடுபிடிக்கின்றன. ஆனால் சட்டத்தை திருப்திப்படுத்தும் வண்ணம் அபராதத் தொகை முறைப்படி அக்டோபரில் செலுத்தப்படும்” என்கிறார்கள்.

-வணங்காமுடி வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக