செவ்வாய், 29 செப்டம்பர், 2020

போராடும் பன்னீர்: பொதுக்குழுவுக்குத் தயாராகும் எடப்பாடி

  போராடும் பன்னீர்: பொதுக்குழுவுக்குத் தயாராகும் எடப்பாடி

minnambalam :அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று ( செப்டம்பர் 28) அக்கட்சியின் தலைமை நிலையத்தில் சமூக இடைவெளியின்படி நடந்தது. உணவு இடைவெளி கூட இல்லாமல் 5 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

செயற் குழு கூட்டத்துக்காக தலைமைக் கழகத்துக்கு வரும் முன்பு ஒபிஎஸ் ஆதரவாளர்கள், அவரது வீட்டுக்கு வெளியில் மக்களை நிற்கவைத்து வரவேற்றார்கள், கட்சி அலுவலகம் முன்பும் ஒபிஎஸ் படத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள்.    அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி நகர் சத்யா தலைமையில் மக்களைக் கூட்டி வரவேற்பு கொடுத்து நிரந்தர முதல்வரே என்று கோஷத்துடன் அலுவலகம் உள்ளே அழைத்துபோனார்கள்.

செயற் குழு கூடும் முன்பே வெளியில் இப்படி இரு பிரிவாக இருக்கிறதே உள்ளே எப்படியிருக்கும் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தது போலவே செயற்குழுவில் அரங்கேறியுள்ளது.

செயற் குழு கூட்டத்திற்கு 295 பேருக்கு அழைப்பு கொடுத்ததில் 280 பேர் கலந்துக்கொண்டார்கள்.

கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் வாசித்தார்.

தொடங்கி வைத்த கே.பி.முனுசாமி

அவைத் தலைவர் மதுசூதனன் பேசியபிறகு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது,

“நாம் இப்போது வருகிற சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக கூடியிருக்கிறோம். இங்கே பலருக்கும் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நல்ல அபிப்ராயம் இருக்கிறது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் அண்ணனுக்கு மட்டும் இதில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை நாம் பேசித் தீர்க்க வேண்டும். சகோதரர் எடப்பாடி பழனிசாமியை நாம் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார்.


தூபமிட்ட செங்கோட்டையன்

அப்போது முதன் முதலாக எழுந்த அமைச்சர் செங்கோட்டையன், “எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் ஒருங்கிணைப்பாளர் அண்ணனுக்கு வருத்தம் இருக்கிறது என்றால்... எடப்பாடியை அறிவிக்க வேண்டாம் என்கிறாரா? அப்படியே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வில்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள். நான்கு ஆண்டு காலம் முதல்வராக இருந்த ஒருவருக்கு பதிலாக இன்னொருவரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால்... இதுவரை ஆட்சி நடத்திய முதல்வர் சரியில்லை, ஆட்சி சரியில்லை என்று நாமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப் போகிறோமா? அப்படி நாம் மாற்றினால் அதுவே தோல்விக்கு முதல் வழியாக அமைந்துவிடும். எனவே மக்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோரை கருதி இயற்கை நீதிப்படி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும்” என்று ஆரம்பித்து வைக்க....முதல்வர் எடப்பாடியின் ஆதரவாளர்கள் பயங்கரமாக கைதட்டினார்கள். அமைதிக்கு பெயர் போன செங்கோட்டையனா இப்படி என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

பிரேக் போட்ட வைத்திலிங்கம்

அப்போது வைத்திலிங்கம் எழுந்து, “இப்போதே முதல்வர் வேட்பாளர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்பதில் என்ன அவசரம். நாம் எல்லாரும் நம்மை தலைவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால் தொண்டர்கள் என்பவர்களையே நாம் மறந்துவிட்டோம். முதலில் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்போம்” என்று கூறினார்.

அமைச்சர்கள் எடப்பாடி பின்னால்...

அப்போதுதான் அமைச்சர் தங்கமணி எழுந்து, “இப்போதைய முதல்வர் மிக சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இதை நமது துணை முதல்வரே வெளிப்படையாக பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். இப்படி இருக்க இன்றே இப்போதே முதல்வர் எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதுதான் கட்சிக்கு நல்லது” என்று அழுத்தம் திருத்தமாகவே கூறினார். இதை ஒட்டி பலரும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இவர்களில் அமைச்சர் ஜெயக்குமாரில் ஆரம்பித்து திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், காமராஜ் என்று பல்வேறு அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் எடப்பாடிக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர். அமைச்சர்களில் பெரும்பாலானோர் எடப்பாடிக்குதான் ஆதரவு அளித்தனர்.

நியூட்ரல் மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட மனோஜ் பாண்டியன், “இப்போது நமக்கு இரட்டை இலைதான் முக்கியம். ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன். எடப்பாடி குடிமராமத்து நாயகன். இருவரும் இணைந்து இரட்டை இலையை வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று நியூட்ரல் நிலைக்கு மாறிவிட்டார்.

அவ்வப்போது எடப்பாடியை விமர்சிக்கும் அமைச்சர் சி.வி. சண்முகம் கூட, “கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எடப்பாடியை தவிர வேறு யாராவது முதல்வராக இருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது” என்று பேசினார்.

ஆனால் ஓ.பன்னீர் ஆதரவாளரான ஜெ.சி.டி. பிரபாகரன் எழுந்து, “இப்பவே என்ன அவசரம்? தேர்தல் எப்போது வருகிறது? அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம்?” என்று கேட்டார்.

ஓபிஎஸ் கேட்ட கேள்விகள்

அவர்களை எல்லாம் அமைதிப்படுத்திவிட்டு ஓ.பன்னீர் பேச ஆரம்பித்தார்.

“அணிகள் இணையும்போது நீங்கள் இரண்டரை ஆண்டு, அதன்பின் நான் முதல்வராக இருக்கவேண்டும் என்றுதான் இணைந்தோம், ஆனால் நீங்கள் முதல்வர் ஆனபிறகு என்னை ஓரம்கட்டிவிட்டிங்க,. சரி ஆட்சியை காவுகொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது நடைபெறும் ஆட்சிக்கு மட்டும் துணை முதல்வராக ஏற்றுக்கொண்டேன். நான் துணை முதல்வர் என்பது இந்த ஆட்சிக்கு மட்டும்தான். ஆனால் நீங்கள் என்னை மிகவும் திட்டமிட்டு அவமானப்படுத்தினீர்கள். யாருக்கு யார் ஒத்துழைக்கவில்லை?

இதற்கு உதாரணம்...இங்கே இருக்கிறாரே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அவர் என்னை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் பேட்டிகள் கொடுத்தார்.

முதலில் இவர் (ராஜேந்திரபாலாஜி) ரொம்ப மோசமா பேசிக்கிட்டிருக்காரு. அவரை நாம மாவட்டச் செயலாளர் பதவியிலேர்ந்து எடுக்கணும்னு சிஎம் சொன்னாரு. நான் உடனே கையெழுத்து போட்டேன். மூன்று மாதம் கழிச்சு அவரையே மறுபடியும் பொறுப்பாளராக போட்டுருவோம்னு சொன்னாரு. அதுக்கும் நான் கையெழுத்து போட்டேன்.

திருப்பி கொஞ்ச நாள் கழிச்சு விருதுநகர் மாவட்டத்தை ரெண்டாக பிரிச்சு ஒன்றை ராஜேந்திரபாலாஜிக்கும், இன்னொன்றை ரவி என்பவருக்கும் (முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி) கொடுத்துவிடலாம் என்று சொல்லி கையெழுத்து கேட்டார். நான் கையெழுத்து போடவில்லை. (அந்த ரவியை தன் கையில் வைத்துக்கொண்டு முழு மாவட்டத்தையும் நிர்வாகம் செய்ய நினைத்தார் ராஜேந்திரபாலாஜி என்று கருதுகிறார் பன்னீர்)

நான் கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மூன்றாவது நாளே ராஜேந்திரபாலாஜி பேட்டி கொடுக்கிறார், ‘எடப்பாடியார்தான் அடுத்த முதல்வர், அவரை மையமாக வைத்தே தேர்தலை சந்திப்போம்’னு பேட்டி கொடுக்கிறார். இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் வைத்து அவமானப்படுத்த முயற்சி செய்கிறீர்கள், பதவிக்காக உங்கள் பின்னால் வருகிறவர்களை உணர்ந்துகொள்ளுங்கள்” என்று ஓபிஎஸ் சொன்னபோது இபிஎஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. ராஜேந்திரபாலாஜியும் எதுவும் பேசவில்லை.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “நான் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர். இந்த ஆட்சி காலத்துக்குதான் துணை முதல்வர். எனவே அடுத்த தேர்தலில் நான் ஏன் முதல்வர் வேட்பாளர் ஆகக் கூடாது” என்று கேட்டார்.

நான் இல்லையென்றால் பலர் சிறையில்-எடப்பாடி

அப்போது எடப்பாடி பழனிசாமி, “அப்படி ஒரு அக்ரிமெண்ட் எதுவும் போடவில்லை, எனக்கு ஆட்சி மேல் விருப்பம் இல்லை. கட்சி மீது உள்ள அக்கறையால், கட்சி நலன் கருதிதான் உங்களை சேர்த்துக் கொண்டேன், அப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டிருந்தால் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன்.

பதவி மீது எனக்கு விருப்பம் இல்லை, பதவியைக் கொடுத்தார்கள், அதன் பிறகு பல நெருக்கடிகள், பல சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிவருகிறேன், இல்லை என்றால் திமுக ஆட்சியைப் பிடித்து, இங்கே இருப்பவர்கள் பலர் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளியிருப்பார்கள். உங்களையெல்லாம் நான் காப்பாத்திட்டிருக்கேன். நீங்களும் (ஒபிஎஸ்) ஆட்சிக்கும் கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள்தான் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள்” என்றபோது ஒபிஎஸ் குறுக்கிட்டார்.

“ஆட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை, அப்போது என்னை 40 எம்.எல்.ஏ.க்களோடு வெளியில் வரசொன்னார்கள். ஆனால் அதை நான் செய்யாமல் ஆட்சியைக் காப்பாற்றியிருக்கிறேன். என்னை முதல்வராக அடையாளம் காட்டியது புரட்சித் தலைவி அம்மா, உங்களை முதல்வராகியது சசிகலா” என்றதும், கோபமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“உங்களையும் முதல்வராகியது சசிகலாதான், என்னையும் முதல்வராகியதும் சசிகலாதான்”என்றார்.

மேலும், “கொரோனா காலத்திலும் சிறப்பாக ஆட்சியை நடத்திவருகிறேன், நான் சிறப்பாக செயல்படுவதை இந்திய பிரதமரே என்னைப் பாராட்டியுள்ளார். முதல்வர் பதவிக்கு விரும்பி வரவில்லை.எனக்குக் கொடுத்ததை வைத்துக்கொண்டு பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளை சந்தித்து ஆட்சியைக் காப்பாற்றிவருகிறேன்” என்று உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசிய எடப்பாடி பழனிசாமியை கே.பி. முனுசாமி சமாதானப்படுத்தினார்.

அப்போது எடப்பாடி, “ அண்ணா, நான் தொண்டர்களை மதிக்கிறேன். பொதுக்குழுவைக் கூட்டுங்கள். அங்கே நான் தொண்டர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.

அதன் பிறகான சலசலப்புகளுக்குப் பிறகு இருவரையும் அறைக்கு அழைத்துச் சென்று பேசிய கே.பி. முனுசாமி வெளியே வந்து அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டார்

-வணங்காமுடி, வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக