புதன், 30 செப்டம்பர், 2020

இந்தியாவில் இருந்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியேறுகிறது

Vivekanadan T : இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: ---சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி அறிவிப்பு 
ஏற்று கொள்ளமுடியாது வேதனையான செய்தி இது....சர்வதேச மனித உரிமை அமைப்பை வெளியேற்ற செய்வது மோசமான நிலைமையில் சர்வாதிகாரத்தின் கோரா பிடியில் இந்த தேசம் மாட்டி இருக்கி

றது என்று பொருள் ....
பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மை சமூகத்தவரின் மீதான, ஒடுக்கப்பட்டவர்களின் மீதான கொடூர தாக்குதலை இந்த அமைப்பு கண்டித்து அறிக்கை விட்டு இருந்தது....அதை விட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருந்த மனித உரிமை மீறல்கள், இந்த ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தில் வெளிப்படையாக பிஜேபி மற்றும் டெல்லி காவல் துறையை வன்மையாக கண்டித்து இருந்த நிலையில், அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது...
இதுகுறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, “ கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அமைப்பின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது தற்செயலானது அல்ல. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன. காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான். அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர இந்த அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை, மறுப்பையே, எதிர்ப்பையே உறையச் செய்ய முயற்சி நடக்கிறது.
எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல் குற்றம் செய்யும் நிறுவனங்கள்போன்று மனித உரிமை அமைப்புகளை நடத்துவது, எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவது என்பது விமர்சனக் குரல்களை ஒடுக்கும் ஒரு வகையான அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்குவதாகும்.
அம்னெஸ்டி அமைப்பு சர்வதேச சட்டம், இந்தியச் சட்டங்களுக்கு உடன்பட்டே முறைசார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு லட்சம் இந்தியர்கள்தான் இதில் நன்கொடை பங்களிப்பு செய்தனர். எனவே இவை அந்நிய நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடையது அல்ல. சட்டரீதியான நிதித் திரட்டலை அரசு தற்போது நிதி மோசடியாகச் சித்தரிக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் அரசின் செயலின்மையையோ மீறல்களையோ சுட்டிக்காட்டினால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. அம்னெஸ்டி அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்குக் காரணம்” எனக் கூறியுள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக