திங்கள், 7 செப்டம்பர், 2020

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் ஆஸ்பத்திரி டாக்டர்... கர்நாடக மாநிலம்

maalaimalar.co : ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். ஆட்டோ டிரைவராக மாறிய டாக்டர் ரவிந்தீரநாத். பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதுபற்றி அறிந்த சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம் ஆகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை, ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாளே 2-வது முறையாக அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த டாக்டர் ரவீந்திரநாத் தனது வேலையை உதறினார். இதற்கு காரணம் சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வேலையை விட்டு நின்ற டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார். அங்கு தற்போது ரவீந்திரநாத் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

அந்த ஆட்டோவின் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகார து‌‌ஷ்பிரயோகத்தால் தொல்லை கொடுத்ததாக வாசகத்தை எழுதியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு திரும்பும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று மந்திரி ஸ்ரீராமுலு, டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதன்படி விரைவில் டாக்டர் ரவீந்திரநாத், மந்திர ஸ்ரீராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக