திங்கள், 14 செப்டம்பர், 2020

மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கொலை: அகிலேஷ் ஆவேசம்!

 மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கொலை: அகிலேஷ் ஆவேசம்!

minnamblam :தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு, நாட்டின் வட பகுதியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தை தேசிய அரங்கில் கவனப்படுத்தியுள்ளது.   

 தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி நள்ளிரவு மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த முருகசுந்தரம் என்பவர் காவல் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும் மருத்துவச் சேர்க்கைக்கு இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். இந்த ஆண்டும் சீட் கிடைக்காமல் போய்விடுமோ என்று மன உளைச்சலில் இருந்த ஜோதி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அறையில் படித்துக் கொண்டிருந்த ஜோதியை அவரது தாய் அறைக்குச் சென்று பார்த்த போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சமூகதளங்கள் முழுவதும் அந்த மாணவியின் தற்கொலை பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் எதிரொலித்த நிலையில் நாட்டின் தென்முனையில் நடந்த நீட் தற்கொலைக்கு வடமுனையில் இருந்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ரியாக்ட் செய்துள்ளார்.

அவர் இதுகுறித்து தனது ட்விட்டரில் நேற்று (செப்டம்பர் 13) இந்தியில் பதிவிட்டுள்ளார்.

“நீட் தேர்வுக்கு முன்னர் நேற்று மதுரையைச் சேர்ந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவி தற்கொலை செய்தியைக் கண்டு நாட்டில் குழந்தை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பமும் அதிர்ச்சியடைந்துள்ளது. அவருக்கு என் அஞ்சலி! இதற்கு யார் காரணம் என்று இதயமற்ற பாஜக சொல்ல வேண்டும். இது கொலை. இந்தக் கொலையோடு 'பேட்டி பதாவ், பேட்டி பச்சாவ்' அதாவது, ‘பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம்' என்ற மோடியின் முழக்கமும் கொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் அகிலேஷ் யாதவ்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக