சனி, 26 செப்டம்பர், 2020

விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் போக்குவரத்தை முடக்கி போராட்டம் ..

BBC : இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விவசாயம் தொடர்புடைய மூன்று மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்று முதல் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, விவசாயிகளும் அவர்கள் தொடர்புடைய அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டார்கள். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தபோதும், அதன் பல அம்சங்கள், விவசாயிகளின் நேரடி வருவாயை பாதிக்கும் என்று விவசாயிகளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் தெரிவித்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் அடிப்படையில் விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதுடன் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசும் மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அங்குள்ள எதிர்கட்சியான ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் சமீபத்தில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பஞ்சாபில் ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்கட்சியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மசோதாவுக்கு எதிரான அலை அங்கு அதிகமாகவே காணப்பட்டது. தனது மனைவியும் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் டிராக்டரில் அமர்ந்திருக்க, அவரது கணவர் சுக்பீர் சிங் பாதல் டிராக்டரை ஓட்டியபடி விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஹரியாணா மாநிலத்திலும் விவாசயிகள் போராட்டம் கடுமையாக இருந்தது. பல நகரங்களில் இந்த போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விவசாயிகள்

டெல்லி எல்லையில் போராட்டம்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதன் அருகே உள்ள நொய்டாவை இணைக்கும் எல்லை பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் தவிர்க்க மாற்று வழயில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

டிராக்டர் ஓட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய தேஜஸ்வி

பிஹார் மாநிலத்திலும் விவசாயிகள் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக காணப்பட்டது. அங்கு எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், டிராக்டர் ஓட்டியபடி பாட்னா வீதிகளில் வலம் வந்து விவசாயிகள் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

டிராக்டரின் கூரை மீது அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் அமர்ந்திருந்தார். அவர்களின் டிராக்டரைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் நடந்தும், டிராக்டர்களிலும் பின்தொடர்ந்தனர்.

ராட்டத்தின்போது, ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் சிலர் எருமை மாடுகளில் சவாரி செய்தபடி வந்தனர்.

ஜன அதிகாரம் கட்சித் தலைவர் பப்பு யாதவ், தமது ஆதரவாளர்களுடன் பாட்னாவின் தக்பங்களா சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, சிலர் பிஹார் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மசோதாவை நிறைவேற்றிய இந்திய அரசுக்கு ஆதரவாகவும், அதற்கு உறுதுணையாக இருந்ததாக மாநில அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஹாரில் 30 விவசாயிகள் அமைப்பை அங்கமாகக் கொண்ட அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு, மதுபானி உள்பட பல ரயில் நிலையங்களுக்குள் சென்று ரயில்கள் அவ்வழியே செல்லாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த குழுவின் தலைவர் அசோக் பிரசாத் சிங், நாட்டின் முதுகெலும்பான விவாசியகள் பாதிக்கும் வகையில் நடக்க வேண்டாம். அதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.

விவசாயி

உத்தர பிரதேசத்திலும் போராட்டம்

லக்னெள நகரில் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய போராட்டம், பகுதி, பகுதியாக பல நகரங்களுக்கும் விரிவடைந்தது. அங்குள்ள ஃபாஸியாபாத் நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள், இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

விவசாயி

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சி, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றின் தொண்டர்களும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மீரட், பாக்பட், முஸாஃபர்நகர் ஆகிய இடங்களில் விவசாயிகள் டிராக்டர் வாகனங்களுடன் வந்து சாலையின் குறுக்கே அவற்றை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்திலும் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. எனினும், ராஜஸ்தானில் போராட்டங்கள் வலுவுடன் காணப்படாதபோதும், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் பல இடங்களில் தர்னாவில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக