சனி, 5 செப்டம்பர், 2020

ஸ்டாலினைப் புறக்கணிக்கும் பொன்முடி? மாசெக்கள் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள்

 மாசெக்கள் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள்: ஸ்டாலினைப் புறக்கணிக்கும் பொன்முடி

minnambalam :  திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும், பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அதை ஒட்டிய அடுத்த சில மாற்றங்கள் திமுகவில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக நேருவுக்கு இணை: பொன்முடியின் போர்க்கொடி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

செப்டம்பர் 9 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். இதுபோலவே தற்போது திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மாவட்ட அரசியலிலிருந்து உயர்த்தப்பட்டு கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வந்தன. அதேநேரம் பொன்முடி தனக்குத் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதை விரும்பவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

“நேருவும் பொன்முடியும் 1989 ஆம் ஆண்டில் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சரானவர்கள். அப்போதுகூட அமைச்சரவைப் பட்டியல் படி பார்த்தால் நேருவை விட பொன்முடியை உயர்த்தியே வைத்திருந்தார் கலைஞர். இந்த நிலையில் தனக்கு இணையாகவே வளர்ந்துவந்த நேரு தலைமை கழக முதன்மைச் செயலாளராக இருக்கும் நிலையில்... தான் எப்படி துணைப் பொதுச் செயலாளராக இருக்கமுடியும் என்று பொன்முடி கேட்கிறார். எனவே தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் என்ற பதவியை இரண்டாக்கி அதில் ஒன்றை நேருவுக்கும் ஒன்றை தனக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் பொன்முடியின் கோரிக்கை” என்கிறார்கள் பொன்முடியின் ஆதரவாளர்கள்!

இது தொடர்பாக இந்த வாரத் தொடக்கத்தில் சென்னை சென்று ஸ்டாலினை சந்தித்தார் பொன்முடி. அப்போது அவரிடம் நேரடியாகவே இந்த விஷயங்களைப் பேசியிருக்கிறார். கே.என்.நேரு தற்போது வகித்து வரும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கு இரு நபர்களை நியமிக்கும் எண்ணம் ஸ்டாலினிடம் இல்லை. அவர் பொன்முடியிடம், “இப்போதைக்கு துணைப் பொதுச் செயலாளரா வாங்க. மத்ததைப் பாத்துக்கலாம்’ என்று சொல்லியனுப்பிவிட்டார். அதிருப்தியோடே வெளியே வந்திருக்கிறார் பொன்முடி. தனக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி என ஸ்டாலின் முடிவெடுத்ததற்குப் பின்னணியாக இருப்பது எ.வ.வேலுதான் என்று கருதுகிறார் பொன்முடி. இதுபற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘அந்த வேலுவை தலைவர்கிட்ட கொண்டு போய் நெருக்கமாக்கினதே நான் தான். ஆனா இன்னிக்கு அவர்தான் எனக்கு என்ன பதவினு தீர்மானிக்கிறாரு’ என்று கோபமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 3 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலியில் நடந்திருக்கிறது. கூட்டத்தில் சில மாசெக்களை பேசச் சொன்ன ஸ்டாலின்... ‘அடுத்து பொன்முடி பேசுங்க’ என்றதும் அவர் இணையவில்லை. விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரான பொன்முடியைத் தேடியிருக்கிறார் ஸ்டாலின். சூம் ஆப்பில் பொன்முடியின் அலுவலகப் பெயரோடு ஐடி வந்தும் பொன்முடியைக் காணவில்லை. அப்போது செஞ்சி மஸ்தானிடம், ‘பொன்முடி இன்னும் வரலையா? சரி நீங்க சொல்லுங்க’ என்று அந்த விஷயத்தைக் கடந்து போய்விட்டார்.

தலைமைக் கழகத்தில் தான் கேட்ட பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் பொன்முடி மாசெக்கள் காணொலிக் கூட்டத்தில் வீட்டில் இருந்தும் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள் விழுப்புரம் திமுகவில் ஒரு பகுதியினர். பொன்முடி ஆதரவாளர்களோ இணைய இணைப்பு சிக்கலாகியிருக்கும் என்கிறார்கள். மாசெக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சில மாசெக்களிடம், ‘கூட்டத்தில் பொன்முடி கலந்துகொண்டாரா?’ என்று நாம் விசாரித்தபோது, “அவர் பெயரும் ஐடியும் வந்தது. ஆனால் முகத்தைப் பார்க்கவில்லை” என்றனர். திமுக ஐடி விங்கில் விசாரித்தபோது, “பொன்முடி மாசெக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை சார். இதப் பத்தி தலைவரும் விசாரிச்சிருக்காரு” என்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி விழுப்புரம் மத்திய மாவட்டத்தில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக மற்றும் விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை இணைந்து ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை,எளிய மக்கள் என 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கும் விழா நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் புகழேந்தி ,பொருளாளர் ஜனகராஜ் , துணைச் செயலாளர் புஷ்பராஜ், நகரப் பொறுப்பாளர் சக்கரை மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த நிகழ்வுக்கும் பொன்முடி வரவில்லை. தன் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம சிகாமணியிடம், ‘நீயே பாத்துக்க’ என்று சொல்லிவிட்டார்.

இதுபோலவே இளைஞர் அணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு, மாற்றுத் திறனாளிகளுக்கு தானியங்கி இயந்திரம் வழங்கும் நிகழ்வு என நேற்று விழுப்புரத்தில் நடந்த எந்த திமுக நிகழ்விலும் பொன்முடி பங்கேற்கவில்லை. தன்னை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்பதால் ஸ்டாலினையும் பொன்முடி புறக்கணிக்கிறாரா என்ற கேள்வியும் விழுப்புரம் திமுகவினரிடையே எழுந்துள்ளது.

மேலும் எம்.பி. கௌதம சிகாமணி தனது ஃபேஸ்புக் பதிவில் நேற்று, “கழகத்தலைவர் அவர்களின் அறிக்கைக்கிணங்க , முத்தமிழ்அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர். க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைக்கிணங்க திருக்கோவிலூர் தொகுதியைச் சேர்ந்த தனது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த 90 சதவிகித மாற்றுத் திறனாளிகளான 8 நபர்களுக்கு ரூ 5 லட்சம் மதிப்புள்ள தானியங்கி நான்கு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் சென்னையில் துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கி மகிழ்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் பொன்முடியை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் என்றே குறிப்பிடவில்லை. கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது இல்லை எனினும் கௌதம சிகாமணியின் இந்தப் பதிவு திமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் கோபத்தின் அடுத்த கட்டம் என்ன ஆகும் என்பதே திமுகவுக்குள் தற்போதைய ஹாட்.

-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக