செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இந்தியாவில் பிச்சைகாரர்களே இல்லை என்று மெக்காலே பிரபு கூறியதாக பச்சை பொய்.. அப்துல்கலாமையே நம்ப வைத்தபார்ப்பனர்கள்

    எஸ். நீலகண்டன்
   25. 07. 2012 தேயிட்ட துக்ளக் வார இதழ் (Vol. XLIII - No. 28) பக்கம் 31-32இல் ‘அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் நமக்குத் தேவையா’ என்பது பற்றித் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் போராசிரியர் ஆர். சேதுராமன் கட்டுரைத் தொடர் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அதில் 2.2.1835இல் மெக்காலே பிரபு பிரிட்டீஸ் பாராளுமன்றத்தில் பேசியது என்று கீழ்வரும் மேற்கோள்களைக் காட்டியிருக்கிறார். ‘இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நான் சென்று பார்த்திருக்கிறேன். பிச்சைக்காரர் எவரும் என் கண்ணில் படவில்லை. அதே போலத்தான் திருடனும் தென்படவில்லை. இப்படிப்பட்ட அரிய காட்சியை இந்த நாட்டில்தான் பார்க்கிறேன். வாய்மையையும், மரபையும் உயிரெனப் போற்றும் பண்பாளர்களை இங்கே நான் காண்கிறேன். மக்களின் ஆற்றல் அளவிடற்கரியது. இப்படிப்பட்ட சூழலில் நாம் இந்தியாவை வெல்வது என்பது நடக்காத காரியம்.’

‘இந்த நாட்டின் முதுகெழும்பாக விளங்கும், மண்ணின் மணம் கமழும் ஸ்திரத்தன்மையை உடைத்தெறிந்தாலன்றி அவர்களை நம் வசப்படுத்த முடியாது. அவர்களுடைய பெருமை மிக்க கல்வி முறையை வேரறுக்க வேண்டும். ஆங்கிலமும், மேலை நாட்டு நாகரிகமும் உயர்ந்தது என்று இந்தியர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும். தங்களின் தனித்தன்மை அனைத்தையும் மறந்து, நம்மையே சுற்றிவரச் செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்குப் பணிவார்கள்.’

இந்த மேற்கோள்களும், மெக்காலே பிரபுவின் படமும் அடங்கிய ஒரு புகைப்படத்தொகுப்பை அமெரிக்காவில் குடியேறியிருக்கும் தமிழர் ஒருவரிடமிருந்து ஏழெட்டாண்டுகளுக்கு முன் முதலில் மின்னஞ்சல் மூலம் பெற்றேன். அந்த மேற்கோள் உண்மைதான் என்று என்னை நம்பச் செய்யுமளவுக்கு அந்த மின்னஞ்சல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் அது அப்போது ஜனாதிபதியாகவிருந்த அப்துல்கலாமையே நம்ப வைத்திருக்கிறது. இந்தியாவின் கலாசாரம், மரபுகள், கல்வி முறைகள் போன்றவை மிக உயர்ந் தவை. அவற்றை பிரிட்டீஸார் இருட்ட டிப்புச் செய்துவிட்டனர் என்று எண்ணவைக்கும் வகையில் அது அமைந்திருந் தது. சிறிது காலம் கழித்து அந்த மின்னஞ்சலிலிருக்கும் மேற்கோள் அமெரிக்காவில் இயங்கும் ஒரு இந்திய வலதுசாரி மதவாத இயக்கத்தால் போலியாகத் தயாரிக்கப்பட்டுச் சுற்றில் விடப்பட்டிருக்கிறது என்றும் அதை நம்ப வேண்டாம் என்றும் மற்றோரு மின்னஞ் சல் அந்த நண்பரிடமிருந்தே வந்தது. அது போலி என்பதை விளக்கும் கட்டுரைகளை உலகளாவிய வலையில் கீழ்வரும் சுட்டிகளில் காணலாம்:

http://koenraadelst.bharatvani.org/articles/hinduism/macaulay.html

http://sundayposts.blogspot.in/2008/01/lord-macaulays-quote-on-india.html

http://satyameva-jayate.org/2007/06/26/clearing-the-dust-off-macaulays-quote/

http://www.dandavats.com/?p=4104

எனினும் அந்தப் போலியான மேற்கோளைக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் மீண்டும் மீண்டும் சுற்றில் விடப்பட்டு, மற்ற நண்பர்களிடமிருந்து நானே அதைப் பெற்றிருக்கிறேன். அது போலியானது என்று அதை எனக்கனுப்பிய என் நண்பர்களுக்குத் தெரிவித்துமிருக்கிறேன். அதே மேற்கோளை பேரா. சேதுராமன் தன்னுடைய துக்ளக் கட்டுரையில் காட்டியிருந்ததால், துக்ளக்கின் ‘டியர் மிஸ்டர் துக்ளக்’ (ஆசிரியருக்குக் கடிதங்கள்) பகுதிக்கு, அதன் போலித்தன்மையைத் தெரிவித்து 25. 07. 2012 அன்று கடிதம் எழுதினேன். மேற்கோளின் உண்மையான மூலம் அவரிடம் இருக்குமானால், அதோடு ஒப்பிட்டு மேற்கோளை மெய்ப்பிக்கலாமென்றும், இல்லையெனில் அதைத் திருப்பிப் பெறுவதுதான் சரியான வழிமுறையென்றும் தெரிவித்திருந்தேன். துக்ளக் என் கடிதத்தை இதுவரை வெளியிடவுமில்லை. அந்த மேற்கோளைப் பற்றிய ஐயம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கவுமில்லை.

அந்த மேற்கோள் போலியானது என்பதைக் கீழ் வரும் காரணங்களால் எளிதில் அறிந்துகொள்ளலாம். 1. 2. 2. 1835 இல்தான் மெக்காலே பிரபு, இந்தியாவில் அப்போதைய பிரிட்டீஸ் இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் (இன்றைய கோல்கட்டாவில்) தன் புகழ்பெற்ற இந்தியக் கல்வி பற்றிய குறிப்பை (விவீஸீutமீs ஷீஸீ மிஸீபீவீணீஸீ ணிபீuநீணீtவீஷீஸீ) வெளியிட்டார். எனவே, அந்த தினத்தில் அவர் பிரிட்டீஸ் பார்லிமெண்டில் பேசியிருக்க வாய்ப்பேயில்லை. 2. அவருடைய எழுத்துக்கள், பேச்சுக்களடங்கிய எந்த நூலிலும் இந்த மேற்கோள் காணக் கிடைக்கவில்லை என்று உலகளாவிய வலையில் முதலில் காட்டியிருக்கும் வலைத்தளம் தெரிவிக்கிறது. 3. 1833இல்தான் அவர் பிரிட்டீஸ் பார்லிமெண்டில் இந்தியாவுக்குப் பொதுவான சட்டங்களை இயற்ற வேண்டுமென்று வாதிட்டார். அதனடிப்படையில் இந்தியக் குற்றவியல் சட்டத்தை (Indian Penal Code) வரையும் பொறுப்பு அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது. இந்தியக் குற்றவியல் வழக்குகளைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர், இந்தியாவில் திருடர்களே இல்லையென்று சொல்லியிருக்கவே முடியாது. 4. அவருடைய கல்வி பற்றிய குறிப்பிலேயே, அப்போதைய மேற்கத்திய நாடுகளின் புத்தகசாலைகளிலிருந்த ஓர் அலமாரியிலிருக்கும் நூல்களிலுல்ல அறிவியலளவுக்குகூட அரபி, வடமொழி நூல்களிலிருக்கும் அறிவியல் இல்லை என்னும் அகம்பாவமான அறிவிப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டவர், இந்தியாவின் கல்விமுறை பெருமைமிக்கது என்று எவ்வாறு கூறியிருக்க முடியும்? 5. இந்தியாவில் 1746-48; 1748-54; 1757-63வரை நடந்த கர்நாடகப் போர்கள், 1757இல் நடந்த பிளாஸி யுத்தம் ஆகியவை நடந்த காலத்தில் இந்தியர்களை பிரிட்டீஸார் வெல்ல வேண்டுமானால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மெக்காலே பிரபு அறிவுரை வழங்கியிருந்தால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே இருக்கும். 1830களில் பிரிட்டீஸார் இந்தியாவைக் கிட்டத்தட்ட முழுமையாக வென்றுவிட்டார்கள். அதனால்தான் 1833இல் பிரிட்டீஸ் இந்தியா முழுமைக்குமான சட்டத்தைப் பிரிட்டீஸ் பார்லிமெண்டு இயற்றியது. அந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டவர், 1835ல் இந்தியர்களை மூளைச் சலவை செய்தாலொழியப் பிரிட்டீஸாரால் இந்தியாவை வெல்ல முடியாது என்று கூறியிருப்பாரா?

மெக்காலே பிரபுவின் இந்தியக் கல்வி பற்றிய குறிப்பு, அப்போதைய கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்கால் 1835இலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில்தான் ஆங்கில வழிக் கல்வி மூலம், அனைத்து மாணவர்களுக்கும் மேற்கத்திய அறிவியல், சமூகவியல், புவியியல் ஆகியவற்றைப் படிப்பிக்கும் கல்விமுறை அமலுக்கு வந்தது. அதனால் நன்மை விளைந்ததா, இல்லையா என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதனால் நம் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். நம் மரபு வழிக் கல்வியில் மகாவித்வான் திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ்மாகடல் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் கல்வி பயின்ற மாட்சி, நம் பெரும் பேற்றால் உ. வே. சா. அவர்களாலேயே எழுதப் பெற்றுப் புத்தக வடிவில் கிடைக்கிறது. தமிழ் இலக்கியங்களையும் தத்துவங்களையும் அறிந்துகொள்ள அந்தக் குருகுலக் கல்விமுறை, அதில் அக்கரைகொண்டிருந்த மாணவர்களுக்கு மிகவும் உதவியிருக்கும். அதுபோலவே, வடமொழிக் குருகுலங்கள், அரபி மதரஸாக்கள் அவற்றில் அக்கரைகொண்டிருந்த மாணவர்களுக்கு அவர்களின் இலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்பித்திருக்கும். ஆனால் சாதாரண மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய கல்வியை அக்காலத்தின் மரபு வழிக் கல்வி கற்றுக் கொடுக்கவில்லை என்று நான் நம்புகிறேன். மன்னர் ஔரங்கஸிப்பின் ஆசிரியர் தனக்கு ஓய்வூதியம் கேட்டபோது, அந்த ஆசிரியர் தனக்குப் பயனுள்ள வகையில் வரலாறு, நில இயல், மற்ற இயல்களைப் போதிக்கவில்லை என்று குறை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மன்னர் பெற்ற கல்வியே அந்த நிலையிலிருந்திருந்தால், சாமானியர்களுக்கு அந்நாட்களில் எந்த வகைக் கல்வி கிடைத்திருக்கும்? 13ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டுவரை, ஸ்பெயினின் டோலடோ நகரில் தொன்மை, மற்றும் அக்காலத்திய அறிவுசார் நூல்களைப் பல மதத்தினரின் பல மொழிகளிலிருந்தும் மொழிபெயர்த்து, அந்த மொழிபெயர்ப்புகளை ஐரோப்பாவின் பல பல்கலைக்கழகங்களும் பிரதியெடுத்துக் கொண்டது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடந்ததாகத் தெரியவில்லை. எனவே 1830களில் இந்தியக் குருகுல முறைகளில் படித்தவர்கள் அவர்கள் பயின்ற பகுதிகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்களே தவிர, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பரந்த, விரிவான, ஒரு முழுமையான கல்வியறிவைப் பெறவில்லை என்று நான் நம்புகிறேன்.

மெக்காலே வகுத்துக் கொடுத்த கல்விமுறைதான் நமக்கு இப்போது நடைமுறையிலிருக்கும் அறிவியல், சமூகவியல், புவியியல், சட்டங்கள், தொழில் கல்வி போன்றவற்றைப் பெரும்பாலான மாணவர்கள் அறிந்துகொள்ள உதவியிருக்கிறது என்பது என் கருத்து. உ. வே. சா. பெற்ற கல்வியைத்தான் அனைத்து மாணவர்களும் பெற்றிருக்க வேண்டும் என்று நம் கல்விக் கொள்கையை அமைத்திருந்தால், அது இந்தியாவைத் தேக்கத்தில்தான் தள்ளியிருக்கும் என்பதும் என் கருத்து. பேரா. ஆர். சேதுராமன் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார். அது அவர் உரிமை.

ஆனால் அதை வலியுறுத்த அவர் காட்டியிருக்கும் மேற்கோள்கள் போலியானது என்று ஐயுறுவதற்கு ஆதாரங்கள் இருப்பதால் அதன் மூலத்தை வெளிப்படுத்தி, அதை மெய்ப்பிக்க வேண்டும்; இல்லையெனில், அதைத் திரும்பப்பெற வேண்டும். அதுதான் சரியான வழிமுறை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ooo

எஸ். நீலகண்டன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ஒரு நகரமும் ஒரு கிராமமும் நூலின் ஆசிரியர்.

எஸ். நீலகண்டன்.   //m-dinamalar-com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக