சனி, 19 செப்டம்பர், 2020

BBC : மத்திய பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 90% ஒதுக்கீடு திமுக எம்.பி திருச்சி சிவா.. Tiruchi Siva Fire Speech at Parliament

மத்திய அரசின் பல்வேறு துறை நியமனங்களில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதால், அந்தந்த மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், சமீபத்தில் வெளிவந்த ஓர் ஆய்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சொற்ப அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ளதை பட்டியலிட்டார்.“தமிழ்நாட்டில் 84 லட்சம் பேர் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்திருக்கிறார்கள். தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் என்ற நிலையில், தமிழ்நாட்டின் அளவு 7.6 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அந்த அளவு, தமிழ்நாட்டில் 13.5 சதவீதமாக உள்ளது. யுபிஎஸ்சி தேர்வுகளில் அவர்கள் நல்ல மதிப்பெண்களில் தேர்வு பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாக சுகாதார தொழிலாளர் வேலைக்கு வந்த விண்ணப்பங்களில் பல முதுநிலை பட்டதாரிகள், இளங்கலை பட்டதாரிகள், பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள்.”

“இதற்கு காரணம், படித்த கல்விக்குரிய பிரதிநிதித்துவமோ மத்திய அரசு பணியோ அவர்களுக்கு கிடைப்பதில்லை. நேற்று முன்தினம் ஒரு வெளிவந்த ஓர் ஆய்வில் கலால் மற்றும் ஜிஎஸ்டி துறையில் உள்ள பல்வேறு பணிகளுக்கு 2017ஆம் ஆண்டில் தேர்வானவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் 37 பேரில் 4 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.”

“வருமான வரித்துறையில் ஆய்வாளர் பணிக்காக தேர்வான 505 பேரில் வெகு சிலரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் எனது சொந்த ஊரில் ஒரு மத்திய பயிற்சிப்பட்டறையில் 300 அப்ரன்டைஸ்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது. இந்தப்போக்கு இளைஞர்கள் மத்தியில் ஒருவித அசெளகரியத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இது தவிர தொழில்நுட்ப கிரேட் பதவியில் 581 பேரில் 12 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் 163 பேர் பிஹாரை சேர்ந்தவர்கள், 150 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.”

“மதுரை ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தவர்களில் 651 பேரில் 11 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 10 ஆயிரத்து 659 நியமனங்களில் 100க்கும் குறைவானவர்களே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.”

“2மத்திய அரசு பணிகளில் ஏன் இந்த சமமில்லாத மாநில பிரதிநிதித்துவம் ஏற்படுகிறது? இது பற்றிய தகவலை அவையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். எனவே, மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களில் பணி நியமனங்களில், அந்தந்த மாநிலங்களில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று திருச்சி சிவா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக