வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ரெயில் கட்டணம் உயருகிறது .. 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம்

 பயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது

maalaimalar :சென்னை:  ரெயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் உறுதியாக உள்ளது.  ரெயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறை செய்து வருகிறது.   இந்த நிலையில் ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த “உபயோக கட்டணம்” ஒன்றை விதிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது.    இதனால் ரெயில் டிக்கெட் கட்டணம் சற்று உயருகிறது. ரெயில் நிலையங்களை உபயோகிக்கும் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதன் மூலம் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது:-

முக்கிய ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம்.

ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்த கட்டணம் மிக குறைந்த அளவில் இருக்கும். பயணிகளை பாதிக்கிற வகையில் இருக்காது. உலகத் தரமான வசதிகளை ரெயில்வே கொடுப்பதற்கு இது பயன் உள்ளதாக அமையும்.

இந்தியன் ரெயில்வே துறையில் 7 ஆயிரம் ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் 10 முதல் 15 சதவீத ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில் அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை இது குறித்து கூறியபோது, ரெயில் நிலைய உபயோக கட்டணம் வளர்ச்சி அடைந்த ரெயில் நிலையங்களில் மட்டுமே வசூலிக்கப்படும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக