வெள்ளி, 25 செப்டம்பர், 2020

கொரோனா .. கர்நாடகா.. ஒரே வாரத்தில் 2 எம்பிக்கள் பலி.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு

Veerakumar - /tamil.oneindia.com : பெங்களூர்: கொரோனா பாதிப்பால் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண ராவ் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 65. கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பி நாராயண் ராவ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோசமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மனிஷ் ராய் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
மோசமான உடல்நிலை மோசமான உடல்நிலை அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாகிவிட்டது, அவரது பல உறுப்புகள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. அவர் வென்டிலேட்டர்கள் மற்றும் டயாலிசிஸ் உள்ளிட்ட பல கருவிகள் உதவியுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
டாக்டர்களின் 24 மணி கண்காணிப்பில்தான் அவர் இருந்தார். ஆனாலும் கொரோனா பாதிப்பிலிருந்தும் அதன் பக்க விளைவுகளில் இருந்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று மதியம் நாராயண ராவ் உயிரிழந்தார். இவ்வாறு மனிஷ் ராய் தெரிவித்துள்ளார். 
கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் எம். கார்ஜோல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
மேலும், கடந்த 1 வாரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 எம்பிக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்த சுரேஷ் அங்கடி மற்றும் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த, அசோக் கஸ்தி ஆகியோர் அடங்கும். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, நாடு முழுக்க வி.வி.ஐ.பிகளும் கொரோனாவுக்கு தப்ப முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர், நான்கு எம்.பி.க்கள் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.க்கள் இதுவரை கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். 
இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக