புதன், 2 செப்டம்பர், 2020

உலக தேங்காய் தினம். ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ .. செப்டம்பர் 2 –

M
aha Laxmi
: செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம். தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

தெங்கு என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அளவுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாய் தமிழர்களோடு இரண்டற கலந்து வரும் ஒரு பொருள் தான் தேங்காய். ஆனால் இதன் பிறப்பிடம் என்னவோ இந்தோனேஷியா என்று கூறுகின்றனர். பிறந்த வீட்டை விட, புகுந்த வீடான தமிழ்நாட்டில் தான் தேங்காய்க்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தேங்காய் விளைச்சலில் தமிழகம் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்குகிறது. தென்னை மரத்தின் உச்சி முதல் பாதம் வரை அனைத்துமே லாபம் தர கூடியவைதான். இளநீர் சூட்டை தணிக்கும் பானமாகவும், தேங்காய் சமையலில் சுவைகூட்டும் பொருளாகவும், கொப்பரை லாபம் தரும் ஒன்றாகவும் விளங்குகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக