செவ்வாய், 1 செப்டம்பர், 2020

மைனஸ் 24% வீழ்ச்சி: பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்!

மின்னம்பலம் : இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மைனஸ் 23.9% அதாவது 24 சதவிகிதம் சரிந்துவிட்டதாக இந்திய அரசின் புள்ளியல் துறை தகவல் வெளியிட்டது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதாரச் சீரழிவு என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாதாளத்துக்குச் சென்ற ஜிடிபி பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். “பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்திய தாக்குதலின் விளைவாகத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது மிக மோசமானது. பொருளாதாரத்தின் அழிவு 2016 ல் பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் இருந்து தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு கொள்கை முடிவும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி, முறைசாரா துறையைத் தாக்கி பொருளாதாரத்தை மத்திய அரசு அழிப்பதாகக் கூறினார். இதற்கான எல்லா அறிகுறிகளைக் குறிப்பிட்டு எச்சரித்தும் மத்திய அரசு புறக்கணித்தது என்று கூறியுள்ளார்.

இன்று (செப்டம்பர் 1) காணொலி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “இதுபோன்ற ஒரு சூழ்நிலை குறித்து வல்லுநர்கள் அரசாங்கத்தை பல முறை எச்சரித்தார்கள். ஆனால் அரசு கேட்கவில்லை. இப்போது அடைந்த பொருளாதார வீழ்ச்சியை சமாளித்து எழுவதற்கு பல மாதங்கள் ஆகக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்தப் பொருளாதார வீழ்ச்சி கடவுளின் செயலான கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்னரே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எச்சரித்திருந்தார். ஆனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஜிடிபி வீழ்ச்சி அடைந்துகொண்டிருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி- மார்ச்சில் ஜிடிபி 3.1% ஆக இருந்தது. இது கடந்த எட்டு ஆண்டு காலத்தில் மிக மெதுவான வளர்ச்சியாக குறிப்பிடப்பட்டது. எனவே கொரோனாவுக்கு முன்பே பின்னோக்கித் தள்ளப்பட்ட பொருளாதாரம் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதாளத்தில் வீழ்ந்திருக்கிறது.

இதற்கிடையே பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு என்ன ஆயிற்று என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். மோடி அறிவித்த தொகுப்பு என்பது வெறும் ஷோதான் என்பதை இன்றைய நிலைமை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக