வெள்ளி, 4 செப்டம்பர், 2020

சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க உத்தரவு!

 சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க உத்தரவு!

minnambalam.com :தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.     இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களுக்கு தொடர்ந்து முட்டை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா அல்லது வாரம் தோறும் மொத்தமாக வழங்குவதா என்பன உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு மாதம்தோறும் தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் விடுமுறையில் உள்ள சூழ்நிலையில், சத்துணவு திட்டத்தில் பயனடையும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு சமைத்து வழங்க முடியாத நிலை உள்ளது. மாணவ, மாணவிகளின் ஊட்டச்சத்து நிலையினை கவனத்தில் கொண்டு, கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு தலா 3.100 கிலோ அரிசியும், 1.200 கிலோ பருப்பும், உயர் தொடக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 4.650 கிலோ கிராம் அரிசியும், 1.250 கிலோ கிராம் பருப்பும் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணைபடி, மாணவ மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கியது போல் முட்டைகளையும் கொரோனா தொற்று காலம் முடியும் வரை அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் கொண்டு வழங்க ஆணையிடப்பட்டது.

சத்துணவு திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற 20,38,745 தொடக்கப்பள்ளி மாணவர்கள், 13,61,165 உயர் தொடக்க பள்ளி மாணவர்கள், 4,746 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ,- மாணவிகள் என மொத்தம் 34,04,656 பேருக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரை உரிய அத்தாட்சியுடன் அந்தந்த சத்துணவு மையங்களுக்கு நேரில் வரவழைத்து முட்டைகள் மற்றும் உணவு பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துணை ஆணையர் (கல்வி), சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் பொருட்களோடு சேர்த்து மாதம் ஒன்றுக்கு தலா10 முட்டைகள் வீதம் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு மாணவர்கள் அடிக்கடி வருவதை தவிர்க்கும் வகையில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் போதே முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும். உரிய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்” என்று அரசு அறிவித்துள்ளது.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக