செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இயக்குனர் பீம்சிங் .. காலத்ததை வென்ற கலைப்படைப்புக்களின் பிதா மகன்

Abdul Samath Fayaz : ஒரு திரைப்படம் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த

வேண்டுமானால் அதன் கதைக்களம் சிறப்பாக இருக்க வேண்டும்.கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் அதுவும் இல்லை..      அந்தக் கதை எப்படி திரையில் கையாளப்படுகிறது என்பது அதைவிட முக்கியம்..    அதை கலைஞர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் தொடங்கி டெக்னிக்கல் விஷயங்கள் என ஏகப்பட்ட வேலைகள் அதில் இருக்கிறது..   அத்தனை வேலைகளையும் தூக்கி தோளில் சுமக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் இருப்பவர் அதன் இயக்குநர்..    ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் பங்கு முக்கியம். அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அவராலேயே தீர்மானிக்கப்படுகிறது.தமிழில் பல புகழ் பெற்ற இயக்குநர்கள் அந்தப் பணிகளை சிறப்பாகச் செய்திருந்தாலும் ஒருவர் மட்டும் அதில் தனித்து விளங்குகிறார். .  அருமையான இயக்குநரான பீம்சிங்கைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். திருப்பதிக்கு அருகிலுள்ள ராயல செருவு தான் பீம்சிங்கின் பிறப்பிடம்.அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானதால் சென்னைக்கு படிப்பு முடித்து ஆந்திரபிரபா பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது தான் அவரது கலையார்வம் அதிகரித்தது.

எல்லிஸ் ஆர்.டங்கனிடம் திரைத்துறை அறிவை வளர்த்துக்கொண்ட கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் தாங்கள் கற்றதை பீம்சிங்கிற்கும் கற்றுத் தர அவரது ஆரம்ப அரிச்சுவடி அங்கு தான்.பீம்சிங் முதலில் ஆர்வமானது எடிட்டிங் துறை தான்.

ஒரு சிறந்த எடிட்டரால் சிறந்த இயக்குநராக முடியும் என்ற உண்மையை நீரூபித்தவர் பீம்சிங்.ஒரு எடிட்டர் நினைத்தால் பாடாவதிப் படத்தைக் கூட தூக்கி நிறுத்த முடியும்.திரைக்கதையின் சூட்சுமம் எடிட்டிங்கில் தான் இருக்கிறது.பெருமாள் முதலியாருடன் ஏ.வி.எம்.இணைந்த பராசக்தி நடிகர் திலகத்திற்கு திருப்பு முனை என்றால் பீம்சிங்கிற்கும் அது தான் திருப்புமுனை.இங்கு தான் அவர் தனது இரு நண்பர்களைப் பெற்றார்.எப்படி நடிக்க வேண்டும் என்பதை விட வனசங்களை எப்படி டெலிவரி செய்ய வேண்டும் என்பதை நடிகர் திலகத்திற்கு கற்றுத் தந்தது பீம்சிங் தான்.அதுவரை நாடகமே உலகம் என்றிருந்த நடிகர் திலகத்திற்கு நாடகம் வேறு சினிமா வேறு என சொல்லித் தந்தவர் பீம்சிங்.நாடக மேடையில் ஆடியன்ஸூக்கு நேராக நின்றால் போதும்.சினிமாவிற்கு பல கோணங்கள். லாங் ஷாட்டிற்கு இவ்வளவு எக்ஸ்ப்ரஷன் போதும்.க்ளோஸப்பிற்கு இன்னும் கொஞ்சம்.அதிகமானாலும் சிக்கல் குறைந்தாலும் சிக்கல்.உடனே பிடிபடவில்லை.பிடிபட்டதும் அவர் வெளுத்து வாங்கியது வரலாறு.மற்றொரு நண்பர் கலைஞர்.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் பீம்சிங்கின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்.திறமையான பல இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களது வாழ்க்கைக்கு வழி காட்டியவர்.பலர் எதிர்த்தும் நடிகர் திலகத்தை அவர் தான் அறிமுகப்படுத்தினார்.திறமைகள் இருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் அஸிஸ்டெண்டாக இருந்த இளைஞர் பீம்சிங்கிற்கு தனியாக இயக்க வாய்ப்பளித்ததும் அவர் தான்.தன்னைச் சுற்றியிருந்த பல நல்ல உள்ளங்களின் உதவியால் தான் அவர் வெளி உலகிற்கு அறிமுகமானார்.அதிலொருவர் கலைஞர்.

கலைஞரின் நட்பே தனது முதல் படத்திற்கு அவருக்குத் தேவைப்பட்டது.கலைஞரது எழுத்து என்றதும் ஒரு எதிர்பார்ப்போடு படம் விற்பனையானது.ஏனோ அம்மையப்பன் எடுபடவில்லை.இதே கதையில் இன்னொரு படம் விரைவாக வெளியாக இந்தப் படம் படுத்துக்கொண்டது.சைக்கிளில் தனது மகன் லெனினை இருத்தி அம்மையப்பன் பார்க்கப்போன பீம்சிங்கிற்கு கசப்பான அனுபவங்களே பரிசாகக் கிடைத்தது.தனது காதுபடவே இவனெல்லாம் எதுக்கு டைரக்டராகி நம்மை உயிரை வாங்கிறான் என்ற விமர்சனத்தை மகன் கேள்வியாகக் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறியது கசப்பான அனுபவம் தானே.இரண்டாவது படமும் அதே கலைஞரது உதவியால்.ராஜாராணி கொஞ்சம் வித்தியாசமான படம்.நாடகம் பேஸிக் என்பதால் நடிகர் திலகத்தின் பல ஓரங்க நாடகங்கள் இருந்தும் தோல்வி.இரு தோல்விகளும் அவரை வீட்டில் முடக்கிப்போட எங்கே தவறு என மனம் சிந்திக்கத் தொடங்கியது.இரண்டாண்டு காலம் வீட்டிலேயே அது முடக்கிப்போட்டது.மெல்ல மெல்ல திருமணம் பொன்னு விளையிற பூமி என இறங்கினாலும் ஒரு வெற்றியைத் தந்தால் தான் மேற்கொண்டு இங்கே நீடிக்க முடியும் என்ற நிர்பந்தம்.பதிபக்தி அந்தக் குறையைப் போக்கியது.நடிகர் திலகத்தின் உதவியால் அந்தப் படம் பீம்சிங்கிற்கு ஒரு தெம்பைத் தந்தது.ஆனாலும் ஓஹோ என்ற பாராட்டைப் பெற்றது பாகப்பிரிவினை தான்.அதன் வெற்றிக்கு நடிகர் திலகம் காரணம் என்றாலும் பாடல்களும் இன்னொரு காரணம்.அந்த காலகட்டத்தில் நடிகர் திலகத்திற்கும் கவியரசிற்கும் கொஞ்சம் முட்டிக்கொள்ள பதிபக்தி பாடல்கள் பட்டுக்கோட்டை தான் எழுதினார்.பாகப் பிரிவினைக்கும் அவரையே நடிகர் திலகம் எழுதச் சொல்ல ஒரு தாலாட்டுப் பாடல் இழுத்துக்கொண்டே போனது.புரட்க்ஷன் மேனேஜராக இருந்த வேலுமணியின் படமிது.அவர் அவசரப்படுத்த பட்டுக்கோட்டைக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டது.அர்ஜெண்டா வேணுமா ?. கண்ணதாசன்கிட்டப் போங்க என அவர் கை விரிக்க நடிகர் திலகத்திடம் கேட்க அவரும் ஓகே சொல்ல கவிஞரிடம் ஓடிய வேலுமணி நீங்க தான் எழுதித்தரணும் என வேண்ட அப்படி எழுதித் தந்த பாடல் தான் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பாடல்.இந்தப் பாடல் நடிகர் திலகத்திற்கு பிடித்துப்போக அவரையே ரெண்டு பாட்டு எழுதச் சொல்லுங்க என்றார்.அந்த ரெண்டும் ஹிட்டாக படத்தின் வெற்றிக்கு கவிஞரும் ஒரு காரணம்.மீண்டும் பழைய நட்பு புதுப்பிக்கப்பட அதில் வெகுவாக பயணடைந்தது பீம்சிங் தான்.

அழுத்தமான கதைகள்.ஒவ்வொரு பாத்திரமும் உயிரோட்டமாக படைக்கப்பட கதைக்குத் தேவையான இடங்களில் பாடல்கள் வைக்கப்பட அந்தப் பாடல்கள் சாகா வரம் பெற ஒரு மிகப் பெரிய கூட்டணி தமிழ்த் திரையுலகில் உருவானது.கலைஞர்கள் டெக்னீஷியன்கள் என்பதைத் தாண்டி அனைவரும் நண்பர்களாக நமக்கும் காலத்தால் அழியாத படங்கள் கிடைத்தது.பீம்சிங் நடிகர் திலகம் கவியரசு மெல்லிசை மன்னர்கள் என்ற நால்வர் அணி தமிழ்த் திரையுலகிற்கு மகத்தான தங்களது பங்களிப்பைச் செய்தது.நால்வருமே ஒன்றாக அமர்ந்து தங்களது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துகொள்ள வரிசையாக வந்த ப வரிசை படங்கள் பட்டி தொட்டியெங்கும் பேசு பொருளானது.பீம்சிங்கின் பக்க பலம் அவரது யூனிட்.திருமலை மகாலிங்கம் நண்பர்கள்.நடிகர் திலகத்தின் டெடிகேஷன் என அவரது வாழ்க்கையில் வசந்தம் வீசிய காலங்கள் மறக்க முடியாதவை.

நடிகர் திலகத்திற்கு எப்போதுமே கதையை விட அவரது கேரக்டர் முக்கியம்.ஒரு இயக்குநர் தனது ஆழ் மனதில் புதைத்து வைத்த அந்தக் கேரக்டரை வெளியே எடுக்க அவர் படாத பாடுபடுவார். வெறுமனே மேலோட்டமாக அந்தப் பாத்திரத்தை விளக்கினால் விடமாட்டார்.அந்தப் பாத்திரம் என்னவெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவருக்கு விளக்கியாக வேண்டும்.அதில் கரை கண்டவர் பீம்சிங்.பாகப் பிரிவினை கண்ணைய்யா படிக்காத மேதை ரங்கன் இப்படித் தான் இருப்பான் என விளக்கியதால் தான் அவரால் அதில் வாழ முடிந்தது.ஒவ்வொரு காட்சியிலும் அந்த நுணுக்கமான நடிப்பை கொண்டு வர முடிந்தது.ரசிகனின் மனதில் வந்து அப்படியே ஒட்டிக்கொள்ள முடிந்தது.அதன் பிறகு நடிகர் திலகத்திற்கென்றே கதைகள் உருவானது.

1961ம் ஆண்டு இந்த வெற்றிக் கூட்டணி நம்மை வியக்க வைத்தது.பாசமலர் பாலும் பழமும் பாவ மன்னிப்பு என திரும்பிய பக்கமெல்லாம் இந்த நண்பர்களைப் பற்றியே பேச வைத்த ஆண்டு.கதை என எடுத்துக்கொண்டாலும் இயக்கம் என எடுத்துக்கொண்டாலும் நடிப்பென எடுத்தாலும் இசையென எடுத்தாலும் பாடல்கள் என எடுத்தாலும் இன்றும் இந்தப் படங்கள் நம்மை வியக்க வைக்கிறது.இது திட்டமிட்ட டீம் ஒர்க்.இவர்களது கவனம் முழுவதும் அந்தந்த கேரக்டர்களில் மட்டுமே இருந்தது.பீம்சிங்கின் திறமை அந்த திரைக்கதையில்.ஒரு கதையை எப்படிச் சொன்னால் எடுபடும் என்பது அவருக்கு அத்துபடி.நிறைய ஃப்ளாஷ்பேக் கொண்டு போய் கடைசியில் அழகாக அந்த முடிச்சை அவிழ்ப்பார்.பாவ மன்னிப்பில் இரு ஜோடிகளை வைத்து அவர் விளையாடினார்.மூன்று மதங்களை உள்ளே நுழைத்து ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை அவர் நகர்த்திச் சென்ற விதம் அழகாக வந்திருந்தது.காதலாக இருந்தாலும் சென்ட்டிமெண்டாக இருந்தாலும் அவைகளை கையாண்டவிதம் பல இயக்குநர்களுக்கு பாடமாக அமைந்தது.

பாசமலரில் தங்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அண்ணன்.தனக்குப் பிடிக்காதவனோடு தங்கையின் காதல் .கடுப்போடு அண்ணன் கவனிக்க அண்ணனுக்காக தனது காதலையே தியாகம் செய்யும் தங்கை.தியாகத்தில் அங்கொரு போட்டியை வைத்திருப்பார்.போட்டியில் வென்ற அண்ணன் அதற்கான விலையைத் தர அந்த க்ளைமாக்ஸ் நம்மை உலுக்கியெடுக்கும்.அதற்காக அந்த இரு திலகங்களும் தங்களையே வருத்திக்கொள்ள வைத்தது பீம்சிங்கின் திறமை.இதே அழுத்தம் பாலும் பழத்தில்.

ஒரு மருத்துவர் ஒரு நர்ஸ்.இருவரை மட்டுமே வைத்து இப்படியும் எடுக்க முடியும் என நிரூபித்தவர் பீம்சிங்.அவர்களை தம்பதிகளாக்கி பிரித்து இணைத்து என பல பரிமாணங்களைக் காட்ட அந்த கலைஞர்களை பாத்திரத்திலேயே வாழ விட்டிருப்பார்.

பீம்சிங்கின் வெற்றிக்கு இன்னொரு காரணம் அவர் வைக்கும் கேமிரா கோணங்கள்.ஆரம்பம் முதலே அவரது நிழலாக இருக்கும் ஒளிப்பதிவாளர் விட்டல்.நடிகர் திலகம் எப்படி தன்னை வெளிப்படுத்துவார் என்பதை யூகித்து அதற்கேற்ப கோணங்களை கச்சிதமாக அமைப்பார்.அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் பொஸிஷன் அசத்தலாக வந்திருக்கும்.பாசமலரில் ஒரு காட்சி.ஜெமினிக்கும் நடிகர் திலகத்திற்கும் வாக்குவாதம்.ஆபீஸ் அறைக் கதவை மட்டும் காட்டுவார்.பட்டென திறந்து வெளியேறும் ஜெமினி அறைவாங்கியிருப்பார்.அடுத்த காட்சி ஒரு தொழிலாளர் படையோடு வருவார்.நடிகர் திலகத்தின் ஒவ்வொரு ஆங்கிளிலும் ஹாலிவுட் தரமிருக்கும்.அவரது டயலாக் டெலிவரிக்கு ஏற்ப காமிரா கோணங்கள்.க்ளோஸப் மிட் ஷாட் பேக் ஷாட் என செதுக்கியிருப்பார்.ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இந்தக் காட்சி சிறந்த உதாரணம்.

படித்தால் மட்டும் போதுமா பாகப் பிரிவினை போலவே குடும்ப உறவுகளின் மகத்துவத்தைச் சொன்ன படம்.தந்தை மகன் உறவு தாய் மகன் உறவு இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மட்டுமல்ல அண்ணன் தம்பி உறவுகளும் கணவன் மனைவி உறவுகளும் அழகாக அலசப்பட்ட படம்.தனி மனித உணர்வுகள் எப்படியெல்லாம் அடுத்தவரை பாதிக்கிறது என்பதை உளவியல் ரீதியில் அலசியது இந்தப் படம்.சிக்கலான கதையை போரடிக்காமல் கொண்டு போவது சாதாரண விஷயமல்ல.பீம்சிங் படங்களில் காமெடிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்.ஆனாலும் தொய்வில்லாமல் நகரும்படி திரைக்கதையை அமைத்திருப்பார்.பாடல்களை அவர் படமாக்கும் விதம் இன்னொரு சிறப்பு.நடிகர் திலகம் ஏற்கனவே ஹோம் ஒர்க் செய்திருந்தாலும் அதை இன்னும் அழகாக்கி அவரது உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் அளித்தது பீம்சிங்கின் மகத்தான பணி.உதாரணத்திற்கு சாந்தி படத்தின் யாரந்த நிலவு.

அட்டகாசமான பாடலை அவர் எடுத்துத் தந்த விதம் அருமையாக வந்திருக்கும்.அந்த இரவு நேர ஏகாந்தமான வேளையில் அப்படியே அவரை பாடிக்கொண்டு நடக்கவிட்டு கேமிரா எந்தவித தொந்தரவும் செய்யாமல் பின் தொடர்வது அழகு.அந்த லைட்டிங்ஸில் அந்தப் பாடல் இன்னும் மெருகேறியிருக்கும்.பாலும் பழத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் பாவமன்னிப்பு காலங்களில் அவள் வசந்தம் பார் மகளே பார் சோகம் படித்தால் மட்டும் போதுமா அண்ணன் காட்டிய வழியம்மா பாடல்களின் கேமிரா கோணங்களும் படமாக்கியிருப்பார் விதமும் சிறப்பானவை.

பீம்சிங் அயராத உழைப்பாளி.தமிழில் அவர் பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தபோது தான் இந்தியில் பல வெற்றிப் படங்களைத் தந்தார்.ஆயி ஃபிர் ஸே தனது ராஜா ராணி டப்பிங்.மேய்ன் ரஹூங்கீ களத்தூர் கண்ணம்மா.வீரப்பாவிற்காக அவரது ஆலய மணி ஆத்மியாக இதன் சிக்கல்களை ஏற்கனவே பார்த்தோம். காந்தான் பாகப்பிரிவினை என அதே பரபரப்பு அங்கும். பாசமலரின் அதே கதை ராக்கியாக அஷோக் குமார் வஹீதா ரஹ்மான் ஜோடியை வைத்து ஃபிலிம்ஃபேர் விருது வாங்கித் தந்தார்.64 ல் பூஜா கே பூல் அஷோக் நந்தா ஜோடியில்.இது ஏ.வி.எம்மின் குமுதத்திற்காக.கௌரி என்றொரு படம்.துணைவன் படத்தை சப்கா சாதீயாக்கி ராஜேஷ்கன்னா ஷர்மிளா ஜோடி.அதே ராஜேஷை வைத்து ஜோரு கா குலாம்.தர்மேந்திராவிற்கு வாழ்வளித்த லோஃபர்.ராஜேஷை பின்னுக்குத் தள்ளி முன்னேற வைத்த படம்.சஞ்சீவ் குமாருக்கு பெயர் வாங்கித் தந்த நயா தின் நய் ராத். தமிழில் வெற்றி பெற்ற நவராத்திரி.இந்திக்குப் போய் வெற்றிக்கொடி நாட்டுவது அவ்வளவு எளிதல்ல.அதிகமான இந்திப் படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் பீம்சிங் தான்.அதுபோக மலையாளம் தெலுங்கு கன்னடம் என தனது முத்திரையை அவர் பதிக்கத் தவரவில்லை.ராகம், நிறைகுடம், ஸ்நேகம் என அவரது மலையாளப் படங்கள் சிறப்பானவை.

பொதுவாக நாவல்கள் படமானால் பலத்த அடிவாங்கும். அல்லது கெட்ட பெயர் வாங்கும்.ஆனால் ஜெயகாந்தனின் கதைகளை சிதைக்காமல் எடுத்த ஒரே இயக்குநர் பீம்சிங் தான்.அவரது சில நேரக்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், கருணை உள்ளம் என எந்தப் படமும் சோடை போனதில்லை.கடைசியாக கருணை உள்ளத்தை அவர் இயக்கினார்.இது ஒரு சிறந்த படம்.ஸ்ரீகாந்த் விஜயகுமார் கே.ஆர்.விஜயா முக்கோண காதல் கதை. இயக்கி முடிக்கும்போது தான் அவர் உடல் நிலை சரியில்லாமல் போனது.படம் ரிலீஸானபோது அதைக் காண அவர் இல்லை.

தமிழ்த் திரையுலகில் நீண்ட கால அனுபவம்.நாற்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரை சுறுசுறுப்பாக இயங்கியவர்.சாகா வரம் பெற்ற பல படங்களுக்குச் சொந்தக்காரர்.தான் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு எளிமையானவர்.      நல்ல கணவர்.கிருஷ்ணனின் சகோதரியை மணந்து எட்டு குழந்தைகளுக்குச் சொந்தக்காரர்.நடிகை சுகுமாரியை மணந்து ஒரு வாரிசையும் தந்தவர்.  நடிகர் திலகத்தின் திறமைகளை முழுதாக வெளியே கொண்டு வந்து போட்டவர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட பீம்சிங்கை தமிழ்த் திரையுலகம் அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

- Abdul Samath Fayaz

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக