செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கொரோனா தடுப்பு மருந்து: சீனாவின் முதல் தடுப்பு மருந்துக்கு படைப்புரிமை வீடியோ

BBC : சீனாவில் கண்டறியப்பட்டுள்ள முதல் கொரோனா தடுப்பு மருந்துக்குரிய படைப்புரிமைக்கு (பேட்டன்ட்) அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.>சீனாவை சேர்ந்த கான்சினோ பயோலொஜிக்ஸ் (CanSino Biologics) என்ற மருந்து நிறுவனம் அந்த நாட்டின் ராணுவ மருத்துவ அறிவியல் மையத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு, தேசிய அறிவுசார் சொத்து ஆணையம் படைப்புரிமை வழங்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான "பீப்பிள்ஸ் டெய்லி" செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்துக்காக கடந்த மார்ச் 18ஆம் தேதி படைப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு ஆகஸ்டு 11ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் காப்புரிமை ஆவணங்கள் தெரிவிப்பதாக பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து எப்படி செயல்படுகிறது?

"Ad5-nCoV" என அழைக்கப்படும் இந்த தடுப்பு மருந்து, நோவல் கொரோனா வைரஸின் மரபணுப் பொருளை மனித உடலில் அறிமுகப்படுத்த சளிக்கு காரணமாக இருக்கும் பலவீனமான வைரஸைப் பயன்படுத்துகிறது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு அதை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்க உடலைப் பயிற்றுவிப்பதே இந்த தடுப்பு மருந்தின் குறிக்கோளாக உள்ளதாக கூறப்படுகிறது. "இந்த தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையானது, இது பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்றும் கண்டறிந்துள்ளதாக, கடந்த மாதம் லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிகளவிலான தன்னார்வலர்களை கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனை தற்சமயம் நடத்தப்பட்டு வருகிறது" என்று பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே பிரிட்டன் மற்றும் ரஷ்யாவிலும் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையே நிறைவுறாத நிலையில் இதற்கு படைப்புரிமை வழங்கப்பட்டுள்ளது, தடுப்பு மருந்தின் நீண்டகால பாதுகாப்பு, பக்கவிளைவுகள், உற்பத்தி குறித்த கேள்விகளை எழுப்புவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்னதாக, கடந்த வாரம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்திருந்தார்.

மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு ரஷ்ய அரசு அனுமதி வழங்கியது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் அப்போது தெரிவித்திருந்தார்.

தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த புதின், பெருமளவில் இந்த தடுப்பு மருந்து விரைவில் உற்பத்தி செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

இருப்பினும், தடுப்பு மருந்து தயாரிப்பதில் ரஷ்யாவின் வேகத்திற்கு மேற்குலக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே ஆய்வாளர்கள் சில நடைமுறைகளைப் புறந்தள்ளி இவ்வளவு வேகம் காட்டுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக