திங்கள், 31 ஆகஸ்ட், 2020

பிராசந் பூஷனுக்கு வெறும் ஒரு ரூபாய் அபராதம் ! அபராதத்தை கட்ட தயார்.பிரஷாந்த் பூஷண் பேட்டி!

டெல்லி: 1 ரூபாய் அபராதத்தை கட்ட தயார், மரியாதையுடன் அபராதத்தை கட்ட தயார், என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.அதே சமயம் இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வேன், என்று பிரஷாந்த் பூஷண் கூறியுள்ளார். மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தண்டனை வழங்கப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இவருக்கான தண்டனை அப்போது வழங்கப்படவில்லை. மன்னிப்பு கேட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இவருக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் இவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். /tamil.oneindia.com

 நக்கீரன் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்யுள்ள தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் இருந்ததையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் செயல்பாடு பற்றியும் ட்விட்டரில் பிரசாந்த் பூஷண் விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக்கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாந்த் பூஷணை குற்றவாளி எனக் கடந்த 20 -ஆம் தேதி அறிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 -ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது.      

அவர் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு அரை மணிநேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மீண்டும் விசாரணை தொடங்கியபோதும், தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறினார். இந்நிலையில், அவருக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பிரசாந்த் பூஷண் வரும் செப்டம்பர் 15 -ஆம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அவர் அபராதத்தைச் செலுத்தவில்லை எனில், மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது மூன்று வருடம் வழக்கறிஞராக பணியாற்றத் தடை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள பிரசாந்த் பூஷண், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஒரு ரூபாய் அபராதத்தைச் செலுத்துவேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக