வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

கொரோனா வைரஸ் அந்தமானை சேர்ந்த பழங்குடியினரையும் தாக்கியது

zeenews.india.co : புதுடெல்லி: இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளை மட்டுமல்ல, கொரோனா வைரஸ் நாட்டின் தொலை தூர இடங்களிலும் ஆழமாகப் பரவியுள்ளதோடு,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் க்ரேட் அந்தமான் பழங்குடியினரையும் பாதித்துள்ளது. 

குறைந்தது 10 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 6 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. தொலை தூர தீவு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக தொலைதூர தீவுக்கூட்டத்தில் உள்ள பிற பழங்குடியின மக்களின் பாதுகாப்பு குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் தீவுக்குச் சென்று பழங்குடியின உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசோதனையை மேற்கொண்டபோது இந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. நோய்தொற்று ஏற்பட்டவர்கள் போர்ட் பிளேயரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், 10 நாட்களுக்கு பிறகு, அவர்கள் மீண்டும் தங்கள் தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், அங்கே அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார்கள்.

ஒரு காலத்தில் வேட்டையை மட்டுமே வாழ்ந்த, இந்த க்ரேட் அந்தமான் பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள், தற்போது, அரசு வழங்கும் ரேஷன், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற வசதிகளைச் சார்ந்துள்ளது.

இவர்கள், மிகவும் குறைவான மக்கள் தொகை கொண்ட, மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என மத்திய அரசால் வகை படுத்தப்பட்டு, இவர்கள் சிறப்பு பிரிவில் உள்ளனர். தற்போது க்ரேட் அந்தமானிய பழங்குடி மக்கள், 50-60 பேர் மட்டுமே  உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜலசந்தி தீவில் வசிக்கின்றனர்.


புதன்கிழமை நிலவரப்படி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள COVID-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2,945 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 41 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மேலும் இரண்டு பேர் இறந்ததை அடுத்து, யூனியன் பிரதேசத்தின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை 37 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக