திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சாமியாரை புரட்டி எடுத்த அமெரிக்க பெண்!.. திருவண்ணாமலையில்

 அத்துமீறல்: தி.மலையில் சாமியாரை புரட்டி எடுத்த அமெரிக்க பெண்!

 மின்னம்பலம் : ஆன்மீகத் தலமாகவும்,  சித்தர்கள் வாழும் இடமாகவும் திருவண்ணாமலை அறியப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளதால் இங்கு வெளிநாட்டுப் பக்தர்களும் வந்து செல்வர். ஆன்மீக பக்தி கொண்ட பலரும் இங்கு வந்து தங்கி தியானம் குறித்தும், சாதுக்கள் குறித்தும் ஆய்வு செய்வார்கள்.   இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்து, கிரிவலப்பாதையில் உள்ள அருணாச்சலா நகரில் கடந்த 5 மாதங்களாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.  வெளிநாடு செல்ல திட்டம்

இந்த பகுதியில் ஏராளமான சாமியார்களும் வசித்து  வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சாமியாரும் வசித்து வந்துள்ளார். அமெரிக்கப் பெண் வசித்துவந்த வீட்டிற்குச் சென்று மணிகண்டன் அடிக்கடி அவரைப் பார்த்து வந்துள்ளார். அதோடு கடந்த ஒரு மாதமாக அப்பெண்ணின்  நடவடிக்கைகளை நோட்டமிட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், அவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்லும் கனவில் சாமியார் மிதந்துகொண்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நேற்று காலை அப்பெண் தங்கியிருந்த வீட்டுக்குச் சாமியார் மணிகண்டன், தங்க தாலி மற்றும் அரிவாளுடன் சென்றுள்ளார்.  அப்பெண்ணை அரிவாளைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

கராத்தே கலை தெரிந்திருந்த அமெரிக்க பெண், சாமியாரை சரமாரியாகக் தாக்கி கூச்சலிட்டுள்ளார்.  சாமியார் எடுத்து வந்த அரிவாளிலேயே அவரது தலையில் வெட்டியதாக தெரிகிறது.  சாமியார் தப்பிக்க முயன்றதால்  அவரது கையையும்  பின்னால் கட்டிப்போட்டுள்ளார் அப்பெண். இருவருக்கும் இடையேயான மோதலில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இவரது வீட்டில் தொடர்ந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது சாமியார் தவறாக நடந்து கொண்டது தெரியவந்த நிலையில், காவல் துறையினரை வரவழைத்து  ஒப்படைத்துள்ளனர்.  காயமடைந்த அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தின் போது தலையில் காயமடைந்த சாமியாரையும் சிகிச்சைக்காக போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பின்னர் திருவண்ணாமலை தாலுகா போலீசார்  அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.  விசாரணையில் சாமியார் மணிகண்டன், எனது தந்தை பெயர் மாதேஸ்வரன். சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி கிராமம். அமெரிக்கப் பெண் மீது காதலில் விழுந்ததால், அவரை மயக்கி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டேன். ஆனால் அவருக்குத் தற்காப்புக் கலைகள் தெரிந்துள்ளது.  அவர் என் தலையில் அரிவாளால் வெட்டியதால் மயங்கி விழுந்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என வாக்கு மூலம் கொடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சாமியார் மணிகண்டன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சாமியார் ஒருவர் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் திருவண்ணாமலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்று கராத்தே தெரிந்ததன் காரணமாக தன்னை காத்துக் கொண்ட அமெரிக்க பெண்ணின் செயல் பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.  2018ல், ரஷ்யாவிலிருந்து திருவண்ணாமலை வந்திருந்த ஆலினா என்ற இளம் பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக