புதன், 26 ஆகஸ்ட், 2020

விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருப்பார்” - பிரேமலதா அதிரடி பேட்டி

“விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருப்பார்” - பிரேமலதா அதிரடி பேட்டி     தினத்தந்தி  : “விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது தே.மு.தி.க. நிர்வாகிகளின் விருப்பம்” என்று பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக தெரிவித்து உள்ளார். சென்னை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 68-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிறந்தநாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் உறவினர்கள்-நண்பர்கள் கலந்துகொண்டனர். ;விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கியும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலகட்டம் என்பதால் இந்த ஆண்டு பிறந்தநாள் விழாவில் விஜயகாந்தை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தோம். தொண்டர்கள் அதன்படி, அவரவர் இருப்பிடத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இப்போது வரை கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால், எதிர்காலம் என்ன? அடுத்த தேர்தலுக்கு கூட்டணியா என்ன? என்பது பற்றி செயற்குழு, பொதுக்குழு கூட்டி தான் விஜயகாந்த் அறிவிப்பார்.

காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக பேசும் போது, எல்லோருடைய விருப்பமும் விஜயகாந்த் இனிமேல் ‘கிங்’ ஆகத்தான் இருக்க வேண்டும். தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்பது தான் எல்லோருடைய கருத்தாக இருக்கிறது. தேர்தலுக்கு 3, 4 மாதங்கள் இருக்கும் போதே, அதாவது டிசம்பர், ஜனவரியிலேயே விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார்.

நடிகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்தார் என்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஒரு வழக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்டது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மக்கள் சார்பாக கேட்கிறோம். எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம். மு.க.ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா?

கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. கொரோனா தமிழகத்துக்கு மட்டும் வந்த விஷயம் அல்ல. உலகம் முழுவதும் யாரும் எதிர்பார்க்காமல் உலகத்தையே அச்சுறுத்திய ஒரு வைரசாக கொரோனா இருக்கிறது. தமிழக அரசை பொறுத்தவரை எல்லா விஷயத்திலும் நல்ல நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர். இ-பாஸ் நடைமுறை இவ்வளவு நாட்கள் கடைபிடித்தது சரி தான். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவை எளிதில் விரட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிறந்தநாளையொட்டி, விஜயகாந்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-

கருணாநிதியின் குறையாத பாசத்துக்கு பாத்திரமாக திகழ்ந்தவரும், என்றும் எனது இனிய அன்பு நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 68-வது அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அவர் நலமும், குணமும், திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

இன்பத்தில் மனநிறைவையும், துன்பத்தில் ஆறுதலையும் பகிர்ந்து கொண்டு 30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு. அருமை நண்பர் மற்றும் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:-

தமிழக அரசியல் களம் மீண்டும் முழுவீச்சில் உங்களை காண காத்திருக்கிறது. மக்கள் பணியை தொடர வாழ்த்துகள் நண்பர் விஜயகாந்த்.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக