சனி, 22 ஆகஸ்ட், 2020

சந்தனுவும் ரட்டன் டாடாவும் .. அன்பினால் .. உண்டான பிணைப்பு

பாண்டியன் சுந்தரம் : · இந்தியாவின் முன்னணி தொழிலதிபர். மிகப்பெரும்
கோடீஸ்வரர்களில் ஒருவர் ரத்தன் டாடா.இவரது டாடா நிறுவனத்தில் வேலை பார்ப்பதே பெரும் கவுரவம் என்று நினைப்பவர்கள் இந்தியாவில் அநேகர். இந்த டாடாவின் தோள்களில் கை போட்டுப் பேசும் அளவு இவருக்கு நெருக்கமானவர் இன்று யார் தெரியுமா? இவரது 27 வயது உதவியாளர் தான்! இவ்வளவு இளம் வயதில் எப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார்? இதன் பின்னே ஒரு அடிபட்ட சாலை நாய் இருக்கிறது! காரிருள் சூழ்ந்த இரவு நேரம். ஆங்காங்கு ஒன்றிரண்டு தெருவிளக்குகள்
மட்டுமே கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அந்த 22 வயது இளைஞர் வீட்டுக்கு அவசரம் அவசரமாக விரைந்து கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சாலையின் நடுவே ஒரு அழகிய நாய் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் செத்துக் கிடந்தது. அதைப் பார்த்ததும் மனம் கலங்கிப் போனவர், அதை சாலையின் ஓரமாக ஒதுக்கிப் போடலாம் என விரைய முனைந்தபோது..

ஒளியை உமிழ்ந்தபடி சாலையின் நடுவே ஒரு கார் விரைந்து வந்து கொண்டு இருந்தது. கண நேரம்தான்..  சட்டென சாலையின் ஓரம் ஒதுங்கி நின்றார் அந்த இளைஞர். இல்லை என்றால் நாயுடன் சேர்ந்து அவரும் துள்ளத் துடிக்க இறந்து போயிருக்க வேண்டியவர்தான்..

"தேங்க் காட்"என்று உச்சரித்தபடியே சுதாரிப்பதற்குள் அந்தக் கார், இறந்துபோன அந்த நாயின் மேல் ஏறிக்
கடந்து சென்றது.

ஏற்கனவே இறந்து போயிருந்த அந்த நாய் மேலும் காரின் சக்கரங்கள் ஏற, இன்னும் நசுங்கி சின்னாபின்னமாகி சிதறிப் போனது. ஓவென்று சப்தமிட்டு கதறி அழுதார் அந்த இளைஞர்.

அழுகையின் ஊடே நெருங்கி இறந்துபோன அந்த நாயின் உடல் பாகங்களை சாலையில் ஓரத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார்... மனதில் ரத்தக்கொதிப்பு.. கைகளிலோ ரத்தப் பிசுபிசுப்பு..

அந்த இளைஞர் பெயர் சாந்தனு நாயுடு.
சம்பவம் நடந்தது மும்பையின் நகரச்
சாலையில்..

2014-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த கையோடு, டாடா குழுமத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள் அவை. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த வேளையில் அந்தச்சோக நிகழ்வை தன் கண்களால் பார்க்க நேர்ந்தது...

வீடு திரும்பியும் அதே சிந்தனையாக இருந்தார் சாந்தனு. தன் அப்பா, அம்மாவிடம் தான் கண்ட காட்சியின் வேதனையைப் பகிர்ந்து கொண்டு மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்தார். 'இப்படி சாலையில் அடிபடும் நாய்களைக் காப்பாற்ற வழியே இல்லையா?'-இதே சிந்தனைதான் அன்று இரவு அவரைத் தூங்க விடாமல் செய்தது.

பொழுது புலர்ந்தது. சாந்தனுவும் அவரது நண்பர்களும் அங்குள்ள ஒரு பூங்காவில் தினசரி காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். அன்று நண்பர்களைச் சந்தித்தபோது முன் இரவு
சாலையில் நாய் அடிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டு, இதற்கு ஏதாவது செய்ய முடியாதா என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒவ்வொருவர் ஒவ்வொரு யோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள். எதுவும் உருப்படியாக இல்லை. திடீரென்று சாந்தனுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

நாய்களின் கழுத்தில் பொருந்தக் கூடியது போன்ற ஒளிரும் பட்டைகளைத் தயாரித்து, அவற்றை நாய்களின் கழுத்தில் தொங்கவிட்டால், எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் அதன் ஒளிரும் தன்மையைக் கண்டு, நிறுத்தி விடுவார்கள் அல்லவா? அதன் மூலம் நாய்களை இறப்பிலிருந்து பெருமளவு காப்பாற்றி விடலாம் அல்லவா?

நண்பர்களை இப்படி ஒரு ஒளிரும் பட்டையை தயாரித்துத் தர முடியுமா என்று கேட்டார் சாந்தனு. இரண்டு நண்பர்கள் முடியும் என்று நம்பிக்கை தந்தார்கள்.

அதன்படி அவர்களும் நாய்களின் கழுத்தில் கட்டக்கூடிய ஒளிபொருந்திய பட்டைகளைத் தயாரித்தனர்.

அதை அந்தப் பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு அணிவித்தார் சாந்தனு. இது பலன் அளிக்குமா இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒவ்வொரு நாள் காலை கண் விழிக்கும்போதும், உங்கள் ஒளிரும் பட்டை காரணமாக நாய் காப்பாற்றப்பட்டது என்ற தகவல் வரும்
சாந்தனுவுக்கு. கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்த நிலையில் நிறையப்பேர் சாந்தனுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதே மாதிரி பட்டை தங்களுக்கும் வேண்டும் என்று கூறினார்கள். டாட்டா குழுமம் நியூஸ்லெட்டர் என்ற பெயரில் ஒரு செய்தி ஏட்டை வெளியிட்டு வந்தது. அதிலும் ஒளிரும் பட்டை பற்றி தகவல் வெளியாகியிருந்தது.

டாட்டா குழுமத் தலைவர் ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால் நிறைய நாய்களைத் தன் வீட்டில் வளர்த்து வருகிறார்.

நியூஸ்லெட்டரில் ஒளிரும் பட்டைகள் பற்றி வெளியாகியிருந்த செய்தியைப் பார்த்த ரத்தன் டாட்டா தங்களுடைய நாய்களுக்கும் அம்மாதிரி பட்டைகள் வாங்கி மாட்டுங்கள் என்று தங்கள் ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவருக்கோ நாய்களைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கோ யார் அந்த ஒளிரும் பட்டைகளைத் தயாரிக்கிறார்கள் என்று தெரியாது.

சாந்தனு எண்ணுக்குத் தொலைபேசியில் பேசி ஒளிரும் பட்டைகள் தேவை என கூறினார்கள். சாந்தனுவும் தன்னை டாட்டா குழுமத்தில் வேலை பார்ப்பதாக காட்டிக் கொள்ளவில்லை.

டாட்டா குழுமம் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிறைய நாய்களுக்கான ஒளிரும் பட்டைகள் கேட்டு ஆர்டர்கள் குவிந்தது. ஆனால் சாந்தனுவிடமோ நண்பர்களிடமோ அவற்றைத் தயாரிக்க போதுமான நிதி இல்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் விழித்தார்கள். சிலரிடம் நன்கொடை கேட்டுப் பெறலாம் என்று முயற்சி செய்தனர். எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர எவரும் அதற்கு முன் வரவில்லை.

இதை அறிந்த சாந்தனுவின் அப்பா ஒரு யோசனை தெரிவித்தார். நாய்களை விரும்பும் ரத்தன் டாடாவிடம் ஏன் நிதி உதவி கேட்கக் கூடாது என்று சாந்தனுவை அழைத்துக் கேட்டார்.

முதலில் "அதெல்லாம் சரியாக இருக்காது. நான் இதில் ஈடுபட்டு இருக்கிறேன் என்பதே அவருக்குத் தெரியாது. மேலும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே இம்மாதிரி செய்வது சரியான செயல் அல்ல" என்று மறுத்தார் சாந்தனு.

பிறகு 'ஏன் அவரிடம் கேட்கக் கூடாது?' என்ற எண்ணம் ஒரு நாள் திடீரென்று சாந்தனுவுக்குத் தோன்றியது. பல நிறுவனங்களுக்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கிற ரத்தன் டாட்டாவுக்கு நேரில் சந்தித்து சிரமம் தரக்கூடாது என்று எண்ணி அவருக்கு கைப்பட ஒரு கடிதம் எழுதினார்.

இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் டாடா 83 வயதிலும் பரபரப்பான மனிதர்.
அவர் எங்கே தன்னுடைய கடிதத்தை பார்க்க, படிக்கப் போகிறார் என்றே எண்ணியிருந்தார் சாந்தனு.

ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாந்தனு முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. ரத்தன் டாடா கையெழுத்திட்ட கடிதம்! அதைத் திறந்து பார்த்தபோது அவர் 'சாந்தனு! உன்னுடைய வேலையை நேசிக்கிறேன். என்னை நேரில் வந்து சந்திக்கவும்' என அதில் தெரிவித்து இருந்தார்.

ஆனால், அதை நம்ப முடியவில்லை,
சாந்தனுவால்.'எவ்வளவு பெரிய தொழிலதிபர் அவர்! எவ்வளவு வேலைகள் அவருக்கு! அவரா? அவரா எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்? என்னால் நம்ப முடியவில்லையே... ஆனாலும் கையில் கடிதம் இருக்கிறது. நம்பித்தான் ஆகவேண்டும்'என்று வியந்து வியந்து மாய்ந்து போனார் சாந்தனு.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து சாந்தனு மும்பையில் ரத்தன் டாடா அலுவலகத்தில் அவரைச் சந்தித்தார். "உன்னுடைய இந்தச் செயல் என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது" என்றார். பிறகு அவர் தன்னுடைய நாய்கள் உள்ள இடத்துக்கு சாந்தனுவை அழைத்துச் சென்று எல்லா நாய்களையும் காண்பித்தார். சாந்தனுவின் ஒளிரும் நாய்ப் பட்டை திட்டத்துக்கு நிதி உதவியும் செய்தார்.

தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் போல அல்லாமல் நெருங்கிய நண்பன் போல சாந்தனுவிடம் பழக ஆரம்பித்தார் ரத்தன் டாடா. அதன் பிறகு மேல்படிப்பு படிக்க வெளிநாடு செல்ல விரும்பிய சாந்தனு டாட்டா குழுமத்திலிருந்து விலகினார்.

அதைச் சொல்லிக் கொள்ள ரத்தன் டாடாவிடம் வந்த சாந்தனு "நான் பட்டமேற்படிப்புக்காகச் செல்கிறேன். அதை முடித்து விட்டு வந்ததும் என்னுடைய வாழ்க்கையை டாடா அறக்கட்டளைக்காக அர்ப்பணிப்பேன்" என்று கூறினார். அதை அவரும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.

சாந்தனு படித்து முடித்து இந்தியா திரும்பியதும் ரத்தன் டாடா அவருக்கு ஒரு நாள் போன் செய்தார். “இங்கே என்னுடைய அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளது. எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

சாந்தனு என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு வினாடி விழித்தார். மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு ஒரு சில நிமிடங்கள் கழித்து 'யெஸ்'சொன்னார்.

"அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கி 18 மாதங்கள் கடந்துவிட்டன, அவர் என்னை அதிகம் நம்புகிறார். இவை எல்லாம் கனவுதானா என்று இப்போது நானே என்னுடைய கையை கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்… எனது வயதினர் சரியான நண்பர், வழிகாட்டி, பாஸ் வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு அந்த மூவரும் ஒருவராக ரத்தன் டாடா கிடைத்துள்ளார். என் அதிர்ஷ்டத்தை என்னாலே நம்பமுடியவில்லை” என 'ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே' என்ற முகநூல் பக்கத்தில் ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக