ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

விரதம் பூஜை அபிசேகம் வேண்டுதல் சாபவிமோசனம் புராணங்கள் எல்லாம் கோயில் பூசகர்களாலும் பார்ப்பனர்களாலும் புனையப்பட்ட பொய்கள் . .. யாழ்ப்பாணம் திரு ந.ச. கந்தையாபிள்ளை

Dhinakaran Chelliah

: விரதமோ விரதம் சமீபத்திய பதிவு ஒன்றில் மச்ச புராணத்தின் ஆங்கிலப் பதிப்பின், எழுபதாவது அத்தியாயத்தை அப்படியே தந்திருந்தேன். அதைத் தமிழில் எழுதுவதற்கு விருப்பமில்லை,  அந்த அளவிற்கு ஆபாசமாய் இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அந்த அத்தியாயத்தின் தமிழாக்கப் பகுதியை யாழ்பாணத்து நவாலியூர் திரு.ந.சி.கந்தையாபிள்ளை  அவர்கள் எழுதிய “ஆரிய வேதங்கள்” எனும் நூலில் வாசிக்க நேர்ந்தது.    இந்த நூல் 1947 ல் ஆண்டு பதிப்பு ஆகும். அதாவது, பிரம்மாவிற்கும் சிவனுக்கும் சம்பாஷணை நடக்கிறது. பிரம்மா, சாதாரண மானுடப் பெண்மனிகளின் நடத்தையும் அவர்களது கடமைகளைப் விவரிக்கும்படி சிவனிடம் கேட்கிறார் அதற்கு சிவபெருமான்,மேற்சொன்ன யுகங்களில் கிருஷ்ணனுக்கு 16000 மனைவிகள் உண்டு. இவர்கள் தேவலோக கன்னிகைகள். ஒரு சமயம் நாரத முனிவரை வணங்காத பாவத்தினால் அவரது சாபத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். தேவ கன்னிகளாக இருந்த இந்தப் பெண்கள் சாதரண மானுடப் பெண்களாக பிறப்பெடுக்கிறார்கள்.


சாபத்தின்படி,விபச்சாரிகளாக வாழ்க்கை நடத்தும் இவர்கள்,தங்களது நிலைக்கான காரணத்தையும், மறுபடி எப்போது நாராயணனின் மனைவி அந்தஸ்தைப் பெற முடியும் என்பதை Dalbhya எனும் ரிஷியைச் சந்தித்து முறையிடுகின்றனர்.    

 இப்பெண்களின் அழுகையை கேட்ட Dalbhya ரிஷி அவர்களது சாப விமோசனத்திற்கான விரதம் பற்றி இந்திரனின் சம்பவத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்; விரதம் ஒழுங்காக கடைப்படிக்கப்பட்டால்,
அடுத்த ஜென்மத்தில் அவர்கள் கிருஷ்ணனை பதியாக வரிக்க முடியும் என்கிறார்.

இனி யாழ்பாணத்து கந்தையாபிள்ளை அவர்களின் நூலில் உள்ளவை:

“புராணங்கள் என்பன கோயிற் பூசகராலும், பிராமணராலும் பொது மக்களின் அறிவை மழுக்கித் தாம் நல்வாழ்வு அடையும்படி எழுதி வைக்கப்பட்ட பொல்லாத பொய் நூல்கள். எடுத்துக்காட்டாக இங்கு ஒன்று தருகின்றோம், இது மச்ச புராணத்தில் (Matsya Puranam),சிவன் கூறியதாகச் சொல்லப்படுகிறது.”

“இராக்கதர், அசுர ர், தைத்தியர், தானவர் ஒரு புறமும் தேவர்கள் ஒரு புறமுமாகவும் புரிந்த போரில் ஆயிரக் கணக்கான தானவர் அசுரர் முதலானோர் மாண்டனர். இந்திரன் தானவர் ஆதியோரின் மனைவியரைப் நோக்கி பின்வருமாறு கூறுகிறான்;

நீங்கள் அரசரையும் உங்கள் எசமானரையும் சூத்திரரையும் ஒரே வகையாகக் கருதி ஒழுக வேண்டும். வரிய ஆடவராயினும் போதுமான பொருள் கொண்டு வந்தால் அவர்களுடன் கூடி குலாவ வேண்டும்; கெம்பீரமாக வருபவர்களுக்கு மட்டும் போகம் கொடுத்தல் ஆகாது.

நீங்கள் பிதிர்களையும் தேவர்களையும் வழிபடும்போது, பொன், தானியம், பசு, நிலம முதலியவைகளை பிராமணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். பிராமணர் சொல்வது போல எல்லோரும் கேட்டு ஒழுக வேண்டும்.

நீங்கள் கடைத்தேற வேண்டுமாயின், கட்டாயமாக ஒழுக வேண்டிய சில விதிகளைக் கூறுகிறேன். வாழ்க்கையின் துன்பக் கடலைத் தாண்டுவதற்கு வேதங்களைக் கற்றறிந்தவர் வகுத்துள்ள சட்டம் வருமாறு:

பெண்காளாகிய நீவிர் ஞாயிறு கிழமைகளில் மூலிகைகள் அவித்த நீரில் நீராட வேண்டும்.
பின்பு ஒவ்வொரு அவயங்களுக்கும் நான் கூறும் தனித்தனி நாமங்களைக் கூறி வணங்குதல் வேண்டும். வேதாந்தம் அறிந்த கட்டழகனாகிய பிராமணனைச் சந்தனம், பூ, தூபம்,உணவு வகைகளை வைத்து வழிபடவேண்டும்.புன்பு பிராமணருக்குப் பச்சை அரிசியையும், வெண்ணெயும் கொடுத்து மகாதேவா எனப் போற்றி வணங்க வேண்டும். முன் கூறிய வேதாந்தம் அறிந்த பிராமணனுக்கு நல்ல விருந்து இட்டு, அவனைக் காமனாகக் கருதி வழிபட வேண்டும். அப்பிராமணனுக்குப் போகத்தில் எப்படி இச்சையோ, அப்படியெல்லாம் புன் முறுவலோடு அவனைத் திருப்தி பண்ண வேண்டும். இவை தவிர இவ்விரதம் பிடிப்பவள் பதின்மூன்று மாதம் பிராமணருக்குப் பச்சையரிசியும், வெண்ணெயும் கொடுத்து வர வேண்டும். விரதம் முடிவில் பிரமணனுக்கு மெத்தை தலையணை, படுக்கைக்கு விரிக்கும் துப்பட்டா, விளக்கு, மிதியடி, குடை,செருப்பு, பாய் முதலியவைகளைத் தானமாக வழங்க வேண்டும்.

பின்பு பிராமணனையும் மனைவியையும் அழைத்துப் பொன்மாலை, மோதிரம், வஸ்திரம், வளையல், தூபம், பூமாலை, சந்தனம் முதலியவைகளைக் கொடுத்து அவர்களைக் கனம் பண்ணி வழிபட வேண்டும்.பின் தங்கத்தினால் கண்வைத்த காமன், ரதியின் சிலைகளை தட்டில் வைத்து, இணிப்புப் பண்டங்கள், பால்மாடு, வெண்கலப் பாத்திரங்கள், கரும்பு இவைகளை வைத்துக் கொடுக்க வேண்டும்.(சாமியாடியாக வரும் பரோட்டா சூரியின் அப்பா,கருப்பு கேட்பதாகக் கூறும் பேன்ட் சட்டை, பேட்டா செப்பல்,ரேபான் கிளாஸ் ... இந்தக் காமெடி ஞாபகம் வரணும்).அப்போது விஷ்ணு மகிழ்ந்து வேண்டியவைகளைக் கொடுப்பார்.
பின்பு அவனைச் சுற்றி வந்து கும்பிட்டு அவனை
வீட்டிற்கு அனுப்ப வேண்டும். படுக்கை முதலியவைகளை அவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அது முதல் பிரதி ஞாயிற்றுக் கிழமை தோறும் கூடிச் சுகம் அனுபவிக்க வரும் பிராமணனை மரியாதை செய்து கனம் பண்ண வேண்டும். இப்படிப் பதிமூன்று மாதங்களுக்கு அவனைத் திருப்தி பண்ண வேண்டும். அந்தப் பிராமணனின் விருப்பத்தின் பெயரில் இன்னொருவன் வந்தால் ஐம்பத்தெட்டு லீலைகளாலும் அவனை மகிழ்விக்க வேண்டும்.
விபசாரிகளுக்கு பாவம் உண்டாக்காத அரிய விரதத்தைப் பற்றி உங்களுக்குச் சொன்னேன்.
இதனையே இந்திரன் தானவர்களின் மனைவியருக்குச் சொன்னான்.

ஓ அழகிய பெண்களே! நீங்கள் இவ்விரதம் பாவங்களை ஓட்டிப் பல நன்மைகளைத் தரவல்லது. நீங்கள் நான் சொன்ன வண்ணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அமாவாசையின் பின் ஆறாவது நாள் கடைப்பிடிக்கும் விரதத்தில் பிராமணரைப் பக்தியோடு வழிபட வேண்டும். வழி படுகின்றவன் படுக்கைக்குப் போகுமுன் பசு மூத்திரங் குடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பிராமணருக்கு விருந்திட வேண்டும். பின்பு அவர்களுக்குப் பொன்னாற் செய்த தாமரைப் பூ கொடுக்க வேண்டும், அதோடு ஒரு சிவப்புப் பட்டாடையும் தானம் பண்ண வேண்டும்.

மேற் சொன்ன விரதத்தை கடைப்பிடிப்போர் மஹாதேவனை அடைவார்கள், தேவர்களால் புகழப்படுவார்கள், இறுதியில் விஷ்ணு லோகத்தில் இடம் பிடிப்பார்கள்.”

இன்று இந்த விரதத்தை யாரிடமாவது சொன்னால்,அவர் அடிவாங்காமல் தப்பிப்பது சிரமம்.இவ்வகை நீதியையும் விரதத்தையும் கடவுளே சொன்னார் எனக் கூறும் புராண நூல்களைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

இனி யாராவது விரதம்,பூசை,அபிஷேகம்,பரிகாரம்,வேண்டுதல்,
சாப விமோசனம், எனக் கூறினால் இந்தப் புராணத்தில் கூறப்பட்டுள்ள விரதம் ஞாபகம் வந்தால், அதுவே இந்தப் பதிவிற்கான வெற்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக