ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

ஜெகத்ரட்சகனுக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது. ஆனாலும் கண்காணிப்பிலேயே இருக்கிறார்

minnambalam : திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய அரக்கோணம் தொகுதி எம்பியுமான ஜெகத்ரட்சகனும், அவரது மனைவியும் கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி வியாழக் கிழமை கொரோனா தொற்று காரணமாக சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.        ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு அரசியல்வாதிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வது, நிவாரணப் பொருட்கள் வழங்குவது என்று மக்களுடன் இருந்தனர். இவர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.      ஜெகத்ரட்சகனின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது. கஸ்தூரிபா நகரில் அமைந்திருக்கும் ஜெகத்ரட்சகனின் வீட்டில் வழக்கமாக அவர் காலை வாக்கிங் சென்றுவிட்டு வருவதற்குள்ளாகவே அவரை சந்திக்க பலரும் காத்திருப்பார்கள். வீட்டுக்குள் சென்றதுமே வாசலில் ஹாலுக்கு முன்னதாக அமைந்திருக்கும் போர்டிகோவில் பலர் காத்திருப்பார்கள்.

கொரோனா காலத்திலும் ஜெகத்ரட்சகனை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அவர் வாக்கிங் சென்றுவிட்டு வரும்போதே அவரது ஆழ்வார்கள் ஆய்வு மையத்தால் ஈர்க்கப்படும் ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், கட்சி எல்லை தாண்டிய அரசியல் வட்டாரத்தினர், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அவரது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், சீட் கேட்க சிபாரிசுக்கு வருபவர்கள் என்று தினந்தோறும் ஒரு கூட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

சில நூறு கோடிகள் கூட வேண்டாம், சில பத்து கோடிகள் வைத்திருப்போரே... பி.ஏ. செயலாளர், பாதுகாப்பு அதிகாரி அது இது என தங்களைச் சுற்றி வளையம் அமைத்துக் கொண்டு தங்களை சந்திக்க பல கட்டுப்பாடுகளை வைத்திருப்பார்கள். ஏழு கடல், ஏழு மலை தாண்டி அந்த தேவ மலரைப் பறித்தாலும் பறித்துவிடலாம்... அவர்களைச் சந்தித்துவிட முடியாது. ஆனால் சில ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரராக அறியப்பட்ட ஜெகத்ரட்சகன் இப்படி எவ்வித கட்டுப்பாட்டு வளையங்களையும் தன்னைச் சுற்றி இருக்க அனுமதிக்க மாட்டார். எளிய குடும்பத்தில் பிறந்து இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருப்பதால், தன்னை சந்திக்க வந்த யாரையும் தவிர்க்க மாட்டார்.

ஒவ்வொருவரையும் பார்த்து அவர்களின் கோரிக்கை என்னவென்று கேட்டு அதைத் தன்னால் தீர்க்க உதவ முடிந்தால் உடனடியாக உதவுவார். இல்லையென்றால் அதற்கான வழிமுறைகளை சொல்லியனுப்புவார். வாசலைத் தாண்டி ஹாலுக்குள் சென்றால் அங்கேயும் ஒரு பத்து பேர் அமர்ந்திருப்பார்கள். பிசினஸ் மேன்கள், உறவினர்கள் போன்றோராக இருக்கும் அவர்களிடமும் பேசிவிட்டு, அடுத்து குளித்துவிட்டு டைனிங் ஹாலுக்கு செல்வார். அங்கேயும் சிலர் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் ஜெகத்ரட்சகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களிடமும் சாப்பிட்டுக் கொண்டே பேசிவிட்டுதான் வெளியே புறப்படுவார் ஜெகத்ரட்சகன்.


“யாரால் எப்படி தொற்று வரும் என்று கணிக்க முடியாது. அதனால் ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்களை சந்திக்காதீர்கள். கொஞ்சம் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளுங்கள்” என்று ஜெகத்ரட்சகனின் நலம் விரும்பிகள் அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? ‘நான் என்னை தனிமைப்படுத்திக்கிட்டா என்னை உதவினு தேடி வர்றங்க யாருமில்லாம தனிமைப்பட்டு போயிடுவாங்க. இந்த நேரத்துலதான் அவங்களுக்கு உதவியே தேவைப்படும். அப்புறம் எப்படித் தவிர்க்குறது? நான் முன்னெச்சரிக்கையோடுதான் இருக்கேன்” என்று சொல்லி அவர்களை சமாளித்து வந்தார் ஜெகத்ரட்சகன்.

இந்நிலையில்தான் ஆகஸ்டு 27 ஆம் தேதி வியாழக் கிழமை ஜெகத்ரட்சகனுக்கு லேசான காய்ச்சல் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. அவரது மனைவிக்கும் இதே போன்ற காய்ச்சல். உடனடியாக தனது மருத்துவமனையான ரேலா மருத்துவமனையின் மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார் ஜெகத்ரட்சகன். உடனடியாக அங்கே அனுமதிக்கப்பட்டு கொரோனா சோதனை மேற்கொண்டதில் இருவருக்குமே கொரோனா தொற்று பாசிட்டிவ் என தெரியவந்தது.

உடனடியாக ஜெகத்ரட்சகனுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று சிடி ஸ்கேன் மூலம் சோதனை மேற்கொண்டனர் ரேலா மருத்துவர்கள். அதில் நுரையீரல் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. இருப்பினும் மருத்துவமனையிலேயே கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அட்வைஸ்படி மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள் ஜெகத்ரட்சகனும், அவரது மனைவியும்.

இன்று (ஆகஸ்டு 30) நிலவரப்படி ஜெகத்ரட்சகனுக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது. ஆனாலும் கண்காணிப்பிலேயே இருங்கள் என்ற மருத்துவர்களின் அக்கறைக் கட்டளையையை ஏற்று மருத்துவமனையிலேயே இருக்கிறார் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்களின் பாசுரங்களை மெல்ல தியானித்தபடியே இருக்கிறார் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர்.

-ஆரா

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக