வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை .. பேட்டி வீடியோ

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் : (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் எட்டாவது கட்டுரை.) தமிழ்வழியில் கல்வி பயில்வது குறித்து எண்ணற்ற ஆண்டுகளாக அவ்வப்போது விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழில் மட்டுமே படிப்பதால் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்க நேரிடும் என்று ஒரு தரப்பினரும், தாய்மொழியில் படித்ததால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வந்தவர்கள் ஏராளம் என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுவதுண்டு.

இவ்வாறு தமிழ்வழி கல்வியில் படித்து சிறந்தவர்களுக்கு உதாரணமாக, உள்நாட்டு தலைவர்கள் ஏராளமானோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.  ஆனால், அதே பின்புலத்துடன் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சாதித்து காட்டியவர்கள் பொதுவெளியில் அதிகம் தென்படுவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் தமிழரான மெய்ய மெய்யப்பன்.

தன்னம்பிக்கை அளிக்கும் அவரது வெற்றிக்கதையையும், நானோ டெக்னாலஜி துறையில் அவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்தும், 'நாசாவில் வேலை செய்பவர்களில் பாதி பேர் இந்தியர்கள்' என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

யார் இந்த மெய்ய மெய்யப்பன்?

தமிழகத்தின் காரைக்குடியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெய்ய மெய்யப்பன் அங்குள்ள பிரபல பள்ளியொன்றில் தமிழ்வழியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவுடன், திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இரசாயன பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்தின் பர்மிங்காமில் அதே பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பின்பு 1979இல் அமெரிக்காவுக்கு சென்று முனைவர் பட்டம் பெற்றார்.

நாசா

ரசாயன பொறியியல் துறையில் தனது உயர்கல்வி முழுவதையும் பயின்று முடித்த மெய்யப்பன், வேலையை தேட தொடங்கியபோது அக்காலக்கட்டத்தில் நிலவிய பொருளாதார மந்தநிலையின் காரணமாக கடும் சவாலாக சூழ்நிலை நிலவியது. எனினும், இடைவிடாது போராடிய இவருக்கு, சம்பந்தமே இல்லாத மின்பொறியியல் துறைசார்ந்த வேலையே கிடைத்தது.

எனினும், துளியும் சளைக்காத மெய்யப்பன் மிக குறுகிய காலத்திலேயே அந்த துறையில் திறமையை வளர்த்துக்கொண்டு சுமார் 12 ஆண்டுகள் ஒரே நிறுவனத்திலேயே வேலை செய்தார். இவற்றிற்கிடையே அமெரிக்க குடியுரிமையையும் பெற்றார்.

இதேபோன்று வாழ்க்கையில் பல்வேறு தொடர்பற்ற திருப்புமுனைகளை சந்தித்த மெய்யப்பன் அவற்றை சரியாக பயன்படுத்தியதன் காரணமாக, கடந்த 24 ஆண்டுகளாக நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

குறிப்பாக, கலிஃபோர்னியாவிலுள்ள நாசாவின் ஏம்ஸ் ஆய்வு நிலையத்தின் நானோ டெக்னாலஜி ஆய்வு பிரிவின் தலைமை விஞ்ஞானியாக கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் நானோ தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவர்

ரசாயன பொறியியல் துறையில் இளங்கலை முதல் முனைவர்பட்ட ஆய்வு வரை முடித்த மெய்ய மெய்யப்பன், அதனுடன் தொடர்பற்ற மின்பொறியியல் துறையில் 12 ஆண்டுகாலம் பணியாற்றியதை போல, அவர் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் நானோ தொழில்நுட்பம் குறித்து அவர் கல்வி பயின்றதே இல்லை என்பது வியப்புக்குரியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக