ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வாக்குவங்கி எத்தனை சதவிகிதம்? திமுக நடத்திய ஆய்வு முடிவு!

மின்னம்பலம் : தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே தொடருமா அல்லது அதில் சில மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து, அரசியல் நகர்வுகளை ஒட்டி கணிப்புகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்பதை      தனது கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கும் பாஜக அதை பல மாநிலங்களில் செயல்படுத்தவும் முனைந்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய அளவில் காங்கிரஸ் இன்னும் ‘கொஞ்சம் பலத்தோடு’ இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கருதுகிறது பாஜக. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்கி வைக்க வேண்டும் என திமுகவுக்கு பாஜக அழுத்தம் தருவதாகவும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் வருகின்றன.     

ஆனால் இப்போது வரை தமிழகத்தில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியது, கூட்டணி என்று அறிவித்துவிட்டு காங்கிரஸுக்கான இடங்களிலும் திமுகவே போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த அறிக்கைப் பிரச்சினை டெல்லி வரை எதிரொலித்தது. சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் டெல்லியில் இருந்துகொண்டே திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு புறக்கணித்தார். இதன் மூலம் திமுக காங்கிரஸ் கூட்டணி மேலும் ஒரு ரிஸ்க்கை சந்தித்தது.

இந்த சூழலில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக சட்டமன்றத் தொகுதிகள் தரக் கூடாது என்றும், கடந்த 2011 இல் 63, 2016 இல் 41 என சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அள்ளிக் கொடுத்ததால், காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது என திமுக நிர்வாகிகள் தலைமையிடம் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் குறைந்த தொகுதிகளையே கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஸ்டாலினை வலியுறுத்துகிறார்கள்.

இந்த நிலையில்தான் திமுகவுக்காக தேர்தல் உத்தி வகுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுக கூட்டணிக் கட்சிகளின் பலம் என்ன என்ற ஆய்விலும் இறங்கியது. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய ஆய்வின் அடிப்படையாக இதுவும் இடம்பெற்றுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 4.37 சதவிகித வாக்குகளே பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6.4 சதவிகித வாக்குகள் பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 12.76 ஆக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஐபேக் நடத்திய ஆய்வில்.... காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் 8% ஆக இருக்கிறது என தெரியவந்துள்ளது. இதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் ஐபேக் ரிப்போர்ட்டாக தெரிவித்துள்ளது. எனவே 8% வாக்குகளை காங்கிரஸ் வைத்துள்ள நிலையில், அதற்கேற்ப தனது அரசியல் நிலைப்பாடுகளை அமைப்பது பற்றிய ஆலோசனைகள் திமுக தலைமையில் தீவிரமாகியுள்ளன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக