செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பாஜகவில் கு.க. செல்வம்: வெளிச்சத்துக்கு வரும் 'ஆயிரம் விளக்கு' பின்னணி!

மின்னம்பலம் :சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு நியமனத்துக்குப் பிறகு பல சீனியர்கள், பகுதிச் செயலாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதற்காகவே சிற்றரசு கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் சென்னை மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்துக்கு ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வான கு.க. செல்வம் வரவில்லை.அந்தக் கூட்டத்திலேயே, ‘என்ன கு.க. செல்வத்தைக் காணோம்?’ என்று திமுக நிர்வாகிகள் பேசிக் கொண்டனர். ஆனால், ‘ஜெ. அன்பழகன் இருந்தபோது நடத்துற பல கூட்டங்களுக்கே அவர் வர மாட்டாரு. இந்த நேரத்துல ஏன் வெளியே வரணும்னு கூட நினைச்சிருக்கலாம். கூடவே அவருக்கு இன்னும் கோபம் தீர்ந்திருக்காது’ என்று அன்பகத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன.அந்தக் கூட்டத்தில் பேசிய பகுதிச் செயலாளர் அண்ணாநகர் ராமலிங்கம், “நாங்கல்லாம் 1960 கள்லேர்ந்து கட்சியில இருக்கோம். மாநாடுகளுக்கு நான் உழைச்சத பாராட்டி கலைஞர் கொடுத்த சான்றிதழ்களை எல்லாம் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். நான் பகுதிச் செயலாளரா இருக்கேன். சீனியர் பகுதிச் செயலாளரா இருக்கேன். அந்தப் பதவி வேணும், இந்தப் பதவி வேணும்னு நினைச்சது கிடையாது.
தலைவர் கொடுக்கும் பணியை செய்யணும். அதுதான் என் நோக்கம். எனக்கு வயசாயிடுச்சு. என்னை மாவட்டச் செயலாளரா போடுங்கனு நான் கேட்கலை. ஆனால் என் மாவட்டத்துல ஒருத்தரை மாவட்டச் செயலாளரா போடும்போது, என் வயசை மதிச்சு, என் அனுபவத்தை மதிச்சு, ‘நீங்க என்ன நினைக்கிறீங்க?’னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே? தலைவர் சொன்னா நான் மறுக்கப் போறதில்ல. எதிர்க்கப் போறதில்ல. ஆனா இவங்களை எல்லாம் என்ன கேக்கறதுன்னு நினைச்சு நியமிச்சது கொஞ்சம் வருத்தம்தான். என்னைப் போல சீனியர் பகுதிச் செயலாளர்களுக்கு வருத்தம்தான். ஆனால் தலைவர் சொல்லிட்டாரு. தலைவரை முதல்வராக்குவதே என் லட்சியம்” என்று பேசினார்.

கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே திருவல்லிக்கேணி காமராஜ், சேப்பாக்கம் மதன் ஆகிய பகுதிச் செயலாளர்கள் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டனர். சீனியர் பகுதிச் செயலாளர் மயிலை வேலு பேசுகையில், “தலைவர் வீடு என் பகுதியில், என் தொகுதியில் வருது. இதுவரை நம் தொகுதி கூட்டணிக்கே பலமுறை போய்விட்டது. இம்முறை திமுகவே நின்று ஜெயித்து தலைவர் தொகுதியை திமுக தொகுதியாக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்திருக்கிறோம். ஒரு ஆலோசனை நடத்தியிருக்கலாம். வருத்தம் வருத்தமாக இருந்தாலும் தேர்தல் பணியை இது பாதிக்காது. ஒரு பெரிய மாவட்டத்துக்கு சிற்றரசுவை போட்டிருக்காரு. சிற்றரசுக்கு எங்க ஒத்துழைப்பைக் கொடுப்போம் தலைவருக்காக ஒத்துழைப்பு கொடுப்போம்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு பேசும்போது, “எனக்கு இந்தப் பதவியை தலைவரும், உதயா அண்ணனும்தான் கொடுத்திருக்காங்க. எல்லாரோட ஒத்துழைப்பால எல்லா தொகுதியையும் நாம ஜெயிக்க வைக்கணும், இனிமே ஐபேக்ல என்னன்ன செய்யச் சொல்றாங்களோ அதைத்தான் நாம செய்யணும். அவங்க சொல்றதை நான் உங்ககிட்ட சொல்லுவேன். அதைத்தான் நாம செய்யணும். உங்க எல்லாருடைய ஒத்துழைப்பும் வேணும்” என்று அந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார் சிற்றரசு.

கூட்டம் முடிந்ததும் கு.க. செல்வத்துக்கு போன் போட்டு, “ஏண்ணே கூட்டத்துக்கு வரலை?” என்று கேட்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதுபற்றி அவர்களிடம் பேசினோம்.

“கு.க. செல்வம் அதிமுகவுலேர்ந்து வந்தவர். திமுகவுல அவருக்கு மேல சீனியர் நிறைய பேர் இருக்காங்க. அவங்களை போட்டிருந்தா கூட அவருக்கு பிரச்சினை இல்ல. அவரால குறை சொல்லவும் முடியாது. ஆனா ஆயிரம் விளக்கு தொகுதியில செல்வம் கார்ல பின் சீட்ல உட்கார்ந்து வந்தவரு சிற்றரசு. அண்ணே... அண்ணேனு பழகுவாப்ல. இப்ப நான் என்ன பண்ணனும்? அவர் கார் பின்னால போகணுமானு செல்வம் கேட்கிறாரு. அதுமட்டுமல்ல... மாவட்டச் செயலாளர் பதவி இல்லாம போனதைப் பத்தி கூட அவருக்கு கவலை இல்ல. வர்ற சட்டமன்றத் தேர்தல்ல ஆயிரம் விளக்குல உதயநிதி அல்லது சிற்றரசு நிற்பதாக செல்வத்துக்கு உறுதியான தகவல் கிடைச்சிருக்கு. அதனாலதான் இனி திமுகவுல ஒண்ணும் இல்லைனு முடிவு பண்ணி பாஜகவுக்குப் போய்விட்டார். அவரோடு இன்னும் சிலரும் போவார்கள்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக