திங்கள், 10 ஆகஸ்ட், 2020

முருகனின் உண்மை கதை .. உள்ளது உள்ளபடி .. ஆதார பூர்வமான பதிவு

Karthikeyan Fastura :  முருகனின் வரலாற்றை தமிழ் இலக்கியங்கள்
எப்படி பதிவு செய்கின்றன என்று தேடிப்பார்த்ததில் கிடைத்தவை. கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தாலும் படித்துவிடுங்கள்.        முருகனை பற்றிய உண்மை கதை. ஐந்து வகை தமிழர் திணைகளுள் முதன்மையானது குறிஞ்சி திணை. திணை என்றால் பெரும்நிலம். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சித் திணையில் வாழ்ந்த மக்கள் குன்றக்குறவர்கள் ஆவர் . இவர்கள் ஐவனம், தினை ஆகிய தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்தவர்கள் . குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகு. முருகுக்கு நெடுவேள், சேய் போன்ற பெயர்களும் உண்டு. முருகுவை 'சேயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

அப்போது இருந்த முருக வழிபாடு நாம் இப்போது நடத்தும் குலதெய்வ வழிபாடு போன்றே நடந்துள்ளது. அன்று காட்டுவாசிகளாக இருந்த மக்களில் பெண்களுக்கு என்ன மனோவியாதி தோன்றியதென தெரியவில்லை. முருகு ஏறிவிட்டது, பெண்ணை பிடித்து ஆட்டுவிக்கிறது என்று அதனை ஆற்றுப்படுத்தும் வகையில் விழாக்கள் எடுக்கப்பட்டன. குறிஞ்சி நிலத்தில் செந்தினையை நீரோடு கலந்து நீர்விழாவி வணங்கும் முறை இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு எனப்படும். வயதிற்கு வந்த இளம்பெண்களை பற்றிக்கொண்டதாகவும் அதை விலக்கிட நடக்கும் சடங்காகவும் நடந்தது. குறிஞ்சி மக்களின் பழங்குடி சடங்கு. இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் 'முருகன்' என்று அழைத்தனர். 

மலையில் உறைந்து இன்றளவிற்கும் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் புரியும் தெய்வமாக பார்க்கிறார்கள். பின்பு இந்த வழக்கம் மலைகள் இருக்கும் இடங்களெல்லாம் பரவியது. அங்கங்கு மக்கள் தங்கள் இறைவனை நிர்மாணித்தார்கள். எல்லாமே மலைக்காடுகளில் நிர்மாணிக்கப்பட்ட சிறு சிறு கோவில்கள். கதைகள் பிற்பாடு தான் சேர்க்கப்பட்டது.

முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் ( அகநானூறு 22:11); முருகு அயர்தல் ( குறிஞ்சி: 362:1); வெறி ( ஐங்குறுநூறு 243:2;. 273:4-5; பரிபாடல் 5:15); வெறியாடல் (Aka. 182: 7-18); வெறியாட்டு (தொல்காப்பியம் 63,109). என்பார்கள். ஐங்குறுநூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடலைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. அதைப் பற்றியும், வேலனைப் பற்றியும் நற்றிணை , குறுந்தொகை , அகநானுறு , முருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டு உள்ளன.

வெறியாட்டில் ஆலய பூசாரியே வேலன் என்பவராக உள்ளார். அவர் முருகனின் வேலினை கையில் கொண்டு இருப்பார்.

கழுத்தில் பச்சை நிற இலைகளினால் ஆன மாலை, நாரை, காட்டு மல்லிகை மற்றும் வெண்தழை அதாவது வெள்ளை இலைகளையும் மாலைப் போல அணிந்து கொண்டு அவர் மீது முருகன் ஆக்ரமித்துக் கொண்டு உள்ளது போல சாமியாடி நடனம் ஆடுவார். அவருடைய மார்பு முழுவதும் சந்தானம் பூசப்பட்டு இருக்கும் (Muruku. 190-193). அப்படி சாமி ஆடுபவரை படிமட்டன் என்பார்கள். அந்த விழாவைக் கொண்டாடும் இடத்தை வெறியார்களம் (Muruku. 222; Kurunci 53:3; 360:1; Aka. 98:18-19;114: 1-2) என்பார்கள். அந்த விழா நடு இரவில் வீடுகளில் உள்ள முற்றம், அதாவது வீடுகளுக்குள் உள்ள திறந்த வெளிக் கூடத்தில் நடக்கும். அதில் ஒருபுறத்தில் கடல் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி அலங்கரித்து இருப்பார்கள் (C Aka. 138:10; Narr. 268:8-9).

அதன் ஒரு பக்கத்தில் சேவல் கொடி நடப்பட்டு இருக்கும். அந்தக் கொடி மரத்தின் மீது மலர் மாலைகளினால் அலங்கரித்து, மணம் மிக்க வாசனைபொருட்களை ஏற்றி வைத்து இருப்பார்கள். அது முருகனை வரவேற்று அமரச் செய்யும் இடம் ஆகும். கடம்பு அமர் நெடுவேல் என்று பெரும்பாணாற்றுபடையிலும் "புலவரை அறியட புகழ் புட்ட கடம்பு அமர்ந்து" என்று பரிபாடலிலும் சொல்லப்படுகிறது.

அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டு உள்ள ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை தினை என்ற தானியத்துடன் கலந்து, அதை பரப்பி வைத்து, பலி எனும் பெயரில் மாமிசத்தைப் படைப்பார்கள். பாடல்களை பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் முருகனைப் போற்றி பாடுவார்கள். மலர்களைத் தூவியும் அவரை வணங்குவார்கள்

சங்க இலக்கியங்களில் இப்படி தான் எழுதியிருக்கிறார்கள்.

இதன்படி பார்க்கையில் முருகன் குறிஞ்சி நிலத்தை சேர்ந்த கற்பனை தெய்வம். இளம்பெண்களை மனோவசியம் செய்கிறது. அதை விழா எடுத்து மாமிசபடையல் வைத்து, சாமியாடி ஓட்டுகிறார்கள். அவரோட வாகனம் மயில், யானை. அவரோட கொடி சேவல். ஆடை பச்சை, மஞ்சள் நிறம். அந்த மலைப் பகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், பசி பட்டினி இல்லாமல், எந்த விதமான நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், நிலவளம் செழுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் வேண்டிக் கொள்வார்கள்.

பிற்பாடு பிராமணர்கள் அரசனை கைக்குள் போட்டுகொண்டு உள்ளே வந்தவுடன் அசைவ முருகனை சைவ முருகனாக மாற்றி தமிழ் மந்திரங்கள் சமஸ்கிருதமாக மாறி, பூசாரிகளிடம் இருந்து ஐயர்களிடம் அதிகாரம் சென்றது.

அவர்கள் வழிபாட்டில் முருகனுக்கு இருந்த அத்தனை வழிபாட்டு முறையும் மாறியது. சன்னதம் கொண்டு ஆடும் சாமியாடல் இல்லை, குறி சொல்லுதல் இல்லை, அசைவப்படையல் இல்லை.

இருந்தபோதும் பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளில் வேலனை முழுமையாக ஏற்றதில்லை. எவன் பெற்ற பிள்ளைக்கோ இவர்கள் பெயரை ஸ்கந்தன், சுப்பிரமணியம் என்று சூட்டிக்கொண்டார்கள்.

இன்று ராமர் வேலைக்காகவில்லை, விநாயகர் வேலைக்காகவில்லை என்று முருகனை தூக்குகிறார்கள். இவர்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்கு நம் வேலினை வைத்தே நம் கண்களை குத்துகிறார்கள்.

நமது அடையாளம் இந்து அல்ல. அது கிறித்துவர்கள் அல்லாத, முஸ்லிம்கள் அல்லாத பிற மக்களை குறிக்க வெள்ளைக்காரன் கொடுத்த அடையாளம். இன்று இவர்களின் நடிப்புக்கு மயங்கினால் தமிழுக்கான அடையாளத்தை அழித்துவிடுவார்கள். ஏற்கனவே பாதி அழித்துவிட்டார்கள். மீதியை அழிக்க கிளம்பிவருகிறார்கள் ஜாக்கிரதை

இதை சொல்ல நீ யார் என்று கேட்டால், என் இயற்பெயர் முருகன், பள்ளியில் சேர்த்தபோது கார்த்திகேயன் ஆனேன். நான் சொல்லாமல் யார் சொல்லுவார்

1 கருத்து:

  1. எனக்கு சிவன் ,முருகன்,
    விநாயாகர் பற்றி முழு விளக்கம் வேண்டும்

    பதிலளிநீக்கு