திங்கள், 10 ஆகஸ்ட், 2020

கேரளா நிலசரிவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி : மூணாறு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கயத்தாறு, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். பெட்டிமுடி மலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன.  அந்த வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 13 பேரை உயிருடன் மீட்டனர். மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  2வது நாளாக நேற்றுமுன்தினம் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  தொடர்ந்து கொட்டும் மழையில், 3வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது.  இதில் 16 உடல்கள் மீட்கப்பட்டடன.  மீதமுள்ள 19 பேரின் கதி என்ன என தெரியவில்லை.

பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  மூணாறு பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான பெட்டிமுடியைச் சேர்ந்த அனந்தசிவன் (வயது 58) நிலச்சரிவு ஏற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரும், அவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அனந்தசிவன், அவருடைய மனைவி வேலுத்தாய் (55), மகன் பாரதிராஜா (35), மருமகள் ரேகா (26) உள்பட அந்த குடும்பத்தினை சேர்ந்த 31 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 19 பேர், பள்ளிக்கூட மாணவர்கள் என தெரியவந்து உள்ளது. இவர்கள், அனைவரும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக