புதன், 29 ஜூலை, 2020

EIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களின் கருத்துக்கள் தேவை இல்லை

கவுத்தி மலை Kavuthi Hill Vediyappan Hill EIA 2020 Tamilஅ.தா.பாலசுப்ரமணியன் - பிபிசி தமிழ்::
  EIA 2020 தமிழ் நாட்டில் மக்கள் சக்தி காப்பாற்றிய இரு மலைகள்: சுற்றுச்சூழல் கருத்து கேட்பின் தாக்கம்  பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என்று தற்போது இருக்கும் விதியை திருத்தி கருத்துக் கேட்புக் கூட்டம் கட்டாயமில்லை என்று ஆக்கும் வகையில் வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை - 2020 (Draft EIA 2020) என்ற அந்த ஆவணம் தொடர்பான தங்கள் கருத்துகளை மக்கள் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிவிக்கையின் 19-ம் பக்கத்தில் சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்தால் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். கடந்த சில நாள்களாக இந்த அறிவிக்கை விவாதப் பொருளாகிவருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை என்ற இரண்டு மலைகளில் ஒரு இரும்புத் தாது திட்டம் வராமல் தடுப்பதற்கு இந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் எப்படி உதவியது என்ற சுவாரசியமான வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.
இது நடந்தது 2008ம் ஆண்டு. அப்போது நான் திருவண்ணாமலையில் செய்தியாளராக இருந்தேன்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு மிக அருகில் உள்ள கவுத்தி, வேடியப்பன் மலைகளில், காப்புக் காட்டில், 325 எக்டேர் நிலப்பரப்பில் இரும்புத் தாது வெட்டியெடுத்து, கழுவி, வில்லைகளாக மாற்றி எடுத்துச் செல்லும் திட்டத்துக்கு ஜிண்டால் குழுமம் உரிமம் கேட்டிருந்தது.
இதற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2008 டிசம்பர் 27ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.


EIA 2020 Tamil கவுத்திமலை வேடியப்பன் மலை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம். சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை


படக்குறிப்பு, கவுத்தி மலை - வேடியப்பன் மலை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் - 27 டிசம்பர் 2008
தற்போதுவரை நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2006ன்படி இத்தகைய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடுவதும், பிறகு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதும் கட்டாயம்.
முதலில் இந்தக் கூட்டம் பற்றியோ, திட்டம் பற்றியோ மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. ஆனால் சில சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த நிறுவனம் வெளியிட்டிருந்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை இணையத்தில் படித்து அதன் பாதிப்புகளை மக்களிடம் பிரசாரம் செய்தனர்.

2 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள்

அந்த நிறுவனம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையிலேயே 2 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்றும், இதனால் காட்டுப் பகுதியில் தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், தாதுவை வெட்டியெடுப்பதால் ஏற்படும் சத்தம் காரணமாக கேட்புத் திறன் இழப்பு ஏற்படும் என்றும், வெட்டியெடுக்கும் தாதுவில் இருந்து வெளியாகும் சிலிகா தூசி மற்றும் நுண்ணிய இரும்புத் துகள்களை சுவாசிப்பதன் மூலம் ஆக்குபேஷனல் லங் டிசீஸ் எனப்படும் நுரையீரல் நோய் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்தப் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


EIA 2020 Tamil -கவுத்தி மலை Kavuthi Hill Vediyappan Hill. EIA 2020 draft சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை


படக்குறிப்பு, கவுத்தி மலை
சுற்றச்சூழல் செயற்பாட்டாளர்கள் செய்த பிரசாரம் காரணமாக ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கவிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால், ஆட்சியரக கூட்ட அரங்கில் அனைவருக்கும் இடமில்லை. சில நூறு பேர் மட்டுமே கூட்ட அரங்கில் அமர்ந்தனர். திட்டத்தைப் பற்றி அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஆங்கிலத்தில் விளக்க முயன்றபோது கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் முனைவர் மு.ராஜேந்திரன் தமிழில் விளக்கும்படி கூறினார்.
பிறகு சுமார் 50 பேர் கருத்துத் தெரிவித்தனர். அதில் படூர் ரமேஷ் என்னும் வழக்குரைஞர் ஒருவர் மட்டுமே திட்டத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார். பச்சையம்மாள் என்ற 85 வயது மூதாட்டி தாம் சிறு வயது முதல் இந்த மலையை நம்பியே வாழ்வதாகவும், பஞ்ச காலத்தில்கூட மலையில் விறகு பொறுக்கி வாழ்ந்ததாகவும் கூறியதோடு, "இந்த மலையை வெட்டவேண்டுமென்றால் என்னை முதலில் வெட்டுங்கள்" என்று உணர்ச்சி பொங்கக் கூறியது இன்றும் பலரால் நினைவுகூறப்படுகிறது.
இதைப் போலவே மருத்துவமனையும், பள்ளிக்கூடமும் கட்டித் தருவோம் என்று இரும்புத் தாது நிறுவனம் உறுதி அளித்ததை சுட்டிக்காட்டிய ஒருவர் "எங்கள் அரசாங்கம் எங்களுக்கு பள்ளிக்கூடமும், மருத்துவமனையும் கட்டித் தந்துள்ளது. இதையெல்லாம் நீங்கள் ஏன் செய்யவேண்டும்? எங்களை நோயாளியாக்கிவிட்டு பிறகு மருத்துவமனை கட்டித்தருவீர்களா" என்று கேட்டார்.
வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக அம்பாசமுத்திரம் அருகே தனியார்க் காடு ஒன்றை விலைகொடுத்து வாங்கி வனத்துறைக்குத் தருவதாக நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது. இதை சுட்டிக்காட்டிப் பேசிய கிராமவாசி ஒருவர், "அம்பாசமுத்திரத்திலே மரமிருந்தால் திருவண்ணாமலைக்கு காற்று வருமா?" என்று கேட்டார்.
மரங்களையும், வனங்களையும் தவிர, அந்த மலையில் உற்பத்தியாகும் இரண்டு ஓடைகள் பல ஏரிகளை நிரப்புவதைக் குறிப்பிட்ட விவசாயிகள் இந்த திட்டத்தால் ஓடைகள் அழிந்து, ஏரிகள் நிரந்தரமாக வறண்டு போகும் என்றும், இரும்புத் தாது துகள்களால் விவசாயம் செய்யத் தகுதியற்றவையாக விளைநிலங்கள் மாறும் என்றும் தெரிவித்தனர்.
இந்த கருத்துகளையெல்லாம் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன், உங்கள் எதிர்ப்புகளையெல்லாம் பதிவு செய்துகொள்கிறேன். உங்கள் உணர்வுகளை அரசு புரிந்துகொள்ளும், இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அரசு இந்த திட்டத்தை தொடர விரும்பாது என்று அங்கேயே வாக்குறுதி அளித்தார் (அப்போது திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இதற்குப் பிறகும் அவர் ஆட்சியராகவே தொடர்ந்தார்).


EIA 2020 Tamil டாக்டர் மு.ராஜேந்திரன். EIA 2020 draft சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை


படக்குறிப்பு, டாக்டர் மு.ராஜேந்திரன்
இப்படி வாக்குறுதி அளித்ததோடு மட்டுமில்லாமல் கூட்டத்தில் நடந்தவற்றைப் பற்றி தெளிவான, முழுமையான அறிக்கையைத் தயாரித்து அரசுக்கு அனுப்பினார். அந்த அறிக்கையில், இந்த திட்டம் வந்தால் முன்னெப்போதும் கண்டிராத வகையில் திருவண்ணாமலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று அவர் எச்சரித்திருந்தார்.
மினிட்ஸ் எனப்படும் இந்த கூட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு, இந்த எச்சரிக்கையை சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றம் நியமித்த மத்திய அதிகாரம் பெற்ற குழு (Central Empowered Committee) இந்த திட்டத்துக்கு உரிமம் வழங்க இயலாது என்று 2009 ஜூன் மாதம் இறுதியாக நிராகரித்து ஆணையிட்டது.
மீண்டும் அதே நிறுவனம் 2014ல் 23 ஹெக்டேர் காப்புக் காட்டில் சுரங்கம் தோண்ட அனுமதி கேட்டு புதிதாக விண்ணப்பித்தது. ஆனால், அப்போது மக்கள் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருந்தது. ஒரு முறை கால் பதித்தால் சுரங்க நிறுவனங்கள் முழு மலையையும் எடுத்துவிடுவார்கள் என்று எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்தனர்.
இப்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி முன்பே தெரிந்துகொள்ளும் வாய்ப்பும், அதை எதிர்த்து மக்கள் கருத்துகளைப் பதிவு செய்யும் வாய்ப்பும், புதிய வரைவு அறிக்கையில் பறிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் சூழலியல் செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ். 2008ல் கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புச் சுரங்கம் வரவிருப்பது குறித்து உள்ளூர் செயற்பாட்டாளர்களை கூட்டி முதலில் எச்சரிக்கை விடுத்தவர் இவரே.

துல்லியமான அறிக்கை

தாம் நடத்திய இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொள்ளுமாறு தற்போது கூட்டுறவுத் துறை தேர்தல் ஆணையராக இருக்கும் முனைவர் மு.ராஜேந்திரனிடம் கேட்டோம். "பல இடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் கண் துடைப்பாக நடக்கும். மக்களுக்குப் போதிய தகவல்கள் தெரியாமல்போய் திட்டம் தொடங்கிய பிறகு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனால், கவுத்திமலை வேடியப்பன் மலை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முதலில் அவர்களை இந்த திட்டம் தொடர்பான விவரங்களை தெளிவாக எடுத்துக்கூறும்படி செய்தேன்.
திட்டத்துக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும், 2 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்ற தகவல்களைக் கேட்டபோது மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஒருவர் மட்டுமே திட்டத்தை ஆதரித்தார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை துல்லியமாகத் தெரிவித்து, இந்த திட்டத்தால் சட்டம் ஒழுங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்குலையும் என்று அறிக்கை அனுப்பினேன். அதைக் குறிப்பிட்டுதான் உச்சநீதிமன்றக் குழு இந்த திட்டத்துக்கு உரிமம் வழங்க முடியாது என்று நிராகரித்தது என்று கூறினார் ராஜேந்திரன்.
சில வகை தொழில்கள், சுரங்கங்களுக்கு முன்கூட்டி சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதில்லை என்று இந்த வரைவு அறிக்கை கூறுவதை இவர் சுட்டிக்காட்டுகிறார் பியுஷ்.


EIA 2020 Tamil பியுஷ் மனுஷ். EIA 2020 draft சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை


படக்குறிப்பு, பியுஷ்
இந்த வரைவு அறிக்கையில் உள்ளபடி 2008ல் விதிகள் இருந்திருந்தால் கவுத்தி, வேடியப்பன் மலை எதிர்ப்பியக்கம் என்ன விளைவை எதிர்கொண்டிருக்கும் என்று கேட்டபோது, சுரங்கம் தோண்டிவிட்டு சில ஆயிரம் அபராதம் செலுத்தியிருப்பார்கள் என்றார் பியுஷ்.
நிலக்கரி, தாதுச் சுரங்கங்கள் உள்ளிட்ட பல தொழில்களுக்கும், மீத்தேன், ஷேல் எரிவாயு ஆகியவற்றைக் கண்டறிவதற்கான ஓர் ஆய்வுக்கும் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவேண்டியதில்லை என இந்த வரைவு அறிக்கையின் 26வது பிரிவு கூறுகிறது.
இந்த சுரங்கம் வந்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றெல்லாம் கம்பெனி ஆட்கள் மக்களிடம் கூறி வைத்திருந்தார்கள். ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 180 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்ற உண்மையான விஷயத்தை அவர்கள் ஆட்சியர் முன்னிலையில் கூறவேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் ஒரு திட்டம், வெறும் 180 பேருக்கு மட்டுமே வேலை தரும் என்ற தகவல் கூட்டத்துக்கு வந்திருந்த கிராம மக்களை வெகுண்டெழச் செய்தது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை அப்படியே அமலுக்கு வந்தால், எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் "சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் சூழ்நிலை இல்லை" என்று அரசு தன் விருப்பம்போல கூறி மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யலாம் என்று கூறுகிறார் பியுஷ். இதனால், மக்கள் கருத்துகளைக் கேட்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல, வரப்போகும் திட்டம் பற்றிய உண்மையை மக்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என்பது அவரது அச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக