புதன், 8 ஜூலை, 2020

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒருவர் பலி?- காவலர்கள் ரகுகணேஷ், ஸ்ரீதருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

sathankulam-death-of-mahendram-hc-sends-notice
.hindutamil.in :சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக, தந்தை, மகன் கொலையில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:எனது கணவர் உயிரிழந்துவிட்டார். மகன்கள் துரை மற்றும் மகேந்திரனுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், ஜெயக்குமார் என்பவர் இறந்தது தொடர்பான வழக்கில் என் மகன் துரையை விசாரிக்க சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மே 22-ல் என் வீட்டிற்கு வந்தார்.
மறுநாள் அதிகாலை 2 மணிக்கு என் சகோதரி வீட்டிற்கு ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் துரையை தேடிச் சென்றனர். அங்கு துரை இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 2 நாள் சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாகத் தாக்கினர்.
இதில் மகேந்திரனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. சுயநினைவு இழந்த நிலையில் மே 24-ல் மகேந்திரனை வெளியே அனுப்பினர். வீட்டிற்கு வந்ததும் உடல் நிலை மோசமடையவே மகேந்திரனை மருத்துவமனையில் சேர்த்தோம். ஜூன் 13-ல் என் இளைய மகன் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக புகார் அளித்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் மகன் துரையை விடுவிக்கமாட்டோம் என போலீஸார் மிரட்டினர். இதனால் உடனடியாக புகார் அளிக்கவில்லை.
இச்சூழலில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மகேந்திரன் இறப்பு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்தேன்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் புகார் தொடர்பாக விசாரணை நடத்தவும், எங்கள் குடும்பத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி, தூத்துக்குடி ஆட்சியர், எஸ்பி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக