சனி, 18 ஜூலை, 2020

உ.பி.: நேபாள நபரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என வலுக்கட்டாயமாக சொல்ல வைத்த கும்பல்


உ.பி.: நேபாள நபரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என வலுக்கட்டாயமாக சொல்ல வைத்த கும்பல்
மாலைமலர் :மொட்டை அடிக்கப்பட்ட நேபாள நபர். இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் தற்போது தன் நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு பிரதமரான கேபி சர்மா ஒலி எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். மேலும், இவர் சீன ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
நேபாளத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. நேபாள மக்களிடையே இந்தியா குறித்து எதிர்மறை கருத்துக்களை பிரதமர் கேபி சர்மா ஒலி விதைத்து வருகிறார். உச்சக்கட்டமாக‘‘உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில்தான் உள்ளது. கடவுள் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல’’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் நான்கு பேர் கொண்ட கும்பல், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை பிடித்து தலையை மொட்டியடித்துள்ளனர். அத்துடன் நேபாள பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பும்படியும், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியா - நேபாளம் இடையிலான உறவு மோசம் அடைந்து வரும் நிலையில், இதுபோன்ற செயல்கள் அதற்கு வலுவூட்டுவது போல் உள்ளது. இந்த சம்பவம் குறித்து வாரணாசி போலீஸ் அதிகாரி அமித் பதாக் கூறுகையில் ‘‘இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுப்போம். அருண் பதாக் என்பவர் சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் உள்ள மற்றவர்கள் அவரது கூட்டாளிகள்’’ என்றார். வீடியோ சமூக வலைதங்களில் பரவியதை தொடர்ந்து நேபாள தூதர், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசியதாகவும், கடும் நடவடிக்கை எடுப்பதாக யோகி உறுதி அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக