செவ்வாய், 14 ஜூலை, 2020

பத்மநாபசுவாமி கோயில் தீர்ப்பு : அரசுக்கு பின்னடைவா?

பத்மநாபசுவாமி கோயில் தீர்ப்பு : அரசுக்கு பின்னடைவா? மின்னம்பலம் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக கிட்டதட்ட 9ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது. பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இது அரசுக்கு பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. ஆனால் தற்போதைய கட்டமைப்பு 18 ஆம் நூற்றாண்டில் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த கோயில் தனித்துவமான சேர பாணியிலான கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இந்தியாவில் வைணவத்துடன் தொடர்புடைய 108 புனித கோயில்களில் இதுவும் ஒன்று என அறியப்படுகிறது.

சுதந்திரம் பெற்றதிலிருந்து, அரச குடும்பத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பலராம வர்மா காலமான 1991ஆம் ஆண்டு வரை அரச குடும்பத்தால் நடத்தப்பட்ட அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் பத்மநாப சுவாமி கோயில் இருந்துள்ளது.
1991 ஆம் ஆண்டில் சித்திரை திருநாள் பலராம வர்மா மறைவைத் தொடர்ந்து அவரது தம்பி, உத்ராடம் திருநாள் மாரந்தா வர்மா கோயிலை கையகப்படுத்த அரசு அனுமதி வழங்கியது.
இந்த கோயிலின் ரகசிய பாதாள அறைகளிலிருந்த தங்கம், வைரம், வெள்ளி நகைகளும், பொருட்களும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இக்கோயில் உலக அளவில் கவனம் பெற்றது.
கோயிலின் ரகசிய அறைகள் எ - எஃப் வரை பிரிக்கப்பட்டன. 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. அதில் ஒரு லட்சம் கோடி மதிப்பில் நகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இதனிடையே கோயில் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 2011ல் கேரள உயர் நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைத்தது. 2011 ஜனவரி 31ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில், கோயில் மற்றும் சொத்து நிர்வாகத்தைக் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். அரசு சார்பில் குழு அமைத்து கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்கலாம் என்று தெரிவித்தது. எனினும் பூஜை உள்ளிட்ட நடவடிக்கைகள் பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அரச குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2011 மே மாதத்தில், கேரள நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது. அதோடு கோயில் சொத்து, நகைகள், பாதாள அறைகளில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை மதிப்பிடவும் உத்தரவிட்டது.
அனைத்து அறைகளையும் திறந்து நகைகள் மதிப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோயில் நிலவறையில் உள்ள பாதாள அறையை மட்டும் திறக்க அரச குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. நிலவறையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றும், திறந்தால் அரச குடும்பத்துக்கு ஆபத்து என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த அறையைத் திறக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், கோபால் சுப்பிரமணியனும் தனது ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2011 முதல் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படாமல் கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று (ஜூலை 13) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் தீர்ப்பு வழங்கினர். பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் அரச குடும்பத்துக்கு உரிமை இருக்கிறது. இடைக்கால நடவடிக்கையாகக் கோயிலை நிர்வகிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வாகக் குழு அமைக்க வேண்டும். பி பாதாள அறையைத் திறப்பது குறித்து நிர்வாகக் குழுவே முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர், பூயம் திருனல் கவுரி பார்வதி பாயி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பத்மநாபன் கொடுத்த ஆசி. அவரது அருளால் அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும், நலமாகவும் வாழப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும், அதை அரசு செயல்படுத்தும் என்றும் தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை இன்னும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தீர்ப்பு பற்றிய விரிவான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, “இந்த தீர்ப்பானது திருவிதாங்கூர் அரச குடும்பம் மற்றும் பக்தர்களின் நம்பிக்கையை மதிக்கும் வகையில் இருப்பதாகவும், மாநில அரசுக்கு இது மிகப்பெரிய அடி” என்றும் தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இந்த முடிவு முந்தைய யுடிஎஃப்(ஐக்கிய ஜனநாயக முன்னணி) அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு மாநில அரசுக்கு பெரும் பின்னடைவு என்று தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், கோயில்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் குறித்து முடிவெடுக்கும் உரிமை பக்தர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது அரசாங்கத்துக்கோ அல்ல என்ற கட்சியின் கருத்தை மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக