வியாழன், 2 ஜூலை, 2020

ரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் ? பொதுமக்கள வாக்கெடுப்பு ...

ரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின்மின்னம்பலம் : ரஷ்ய வாக்காளர்கள் 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினை ஆட்சியில் அமர்த்த அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றங்களை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்திருப்பதாக உலக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன.
கொரொனா வைரஸ் காலத்திலும் ஏற்கனவே செர்பியா தேர்தலை நடத்திய நிலையில், முக்கிய நாடான ரஷ்யாவில் அரசியலைப்பை மாற்றியமைத்து, ‘புடின் இல்லாமல் ரஷ்யா இல்லை’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஏப்ரல் 22 ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு, மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க ரஷ்ய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வார காலமாக வாக்கெடுப்பு நடந்தது. கடந்த ஒரு வாரம் நடந்த வாக்கெடுப்புக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 1 தொடங்கியது.

இரு முறைக்கு மேல் ஒருவர் ரஷ்யாவில் அதிபராக முடியாது என்பது ரஷ்யாவின் அரசியல் அமைப்புச் சட்டம். அதன்படி விளாதிமிர் புடினின் இரண்டாம் முறை அதிபர் பதவிக் காலம் 2024 வரை இருக்கிறது. அதற்கு மேல் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை திருத்த முற்பட்ட புடின், மேலும் இரு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் ரஷ்ய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றினார்.இந்த திருத்தம் உள்ளிட்ட அதிபருக்கு உச்ச அதிகாரங்களைத் தரும் பல்வேறு திருத்தங்களை முன் வைத்து அதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துகொண்டுள்ளன.
இந்திய நேரப்படி ஜூன் 2 அதிகாலை நிலவரப்படி வாக்களித்தவர்களில் 74% பேர் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக அதாவது நிரந்தர அதிபராக புடினை அமர்த்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இதன் மூலம் புடின் வரும் 2024, 2030 தேர்தல்களிலும் அதிபராக போட்டியிட முடியும். இதன் மூலம் 2036 வரை ரஷ்ய அதிபராக புடினால் இருக்க முடியும்.
இந்தத் தேர்தலில் பல முரண்பாடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும்... எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, புடினின் மெகா பிரச்சாரம் ஆகியவையே இந்த முடிவுகளுக்கு காரணம் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக