வெள்ளி, 10 ஜூலை, 2020

ஸ்வப்னா பெயரில் வெளியான ஆடியோ.. ஸ்வப்னா உயிருக்கு ஆபத்து!

swapna suresh releases an audio about gold casenakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு: கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராகப் பார்க்கப்படும் ஸ்வப்னாவில் பெயரில் வெளியான ஆடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது.
பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.


இதில் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஸ்வப்னா என்ற தகவல் தொடர்பு துறையில் பணியாற்றும் பெண், இந்த விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை எனவும், அதிகாரிகளின் ஆணையைப் பின்பற்றி எனது பணிகளை மட்டுமே செய்தேன் என, கூரை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். இதனிடையே இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்வப்னா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "ஐக்கிய அரபு அமீரக தூதரக தலைவர் என்னிடம் 'ஏன் தாமதம்' என்று கேட்டார். அதனால் நான் அந்த பார்சல் விவகாரத்தை சரி செய்துகொடுக்க சுங்கத்துறை உதவி ஆணையாளர் ராமமூர்த்தியிடம் பேசினேன். அதுதவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. நான் பார்க்கும் வேலை தொடர்பாக உயர் அதிகாரிகள், அரசு பணியாளர்கள், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உட்பட எல்லா அரசியல் கட்சியினருடன் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். இந்த தொடர்பு அனைத்தும் ஐக்கிய அமீரக தூதரக தலைவர் சொல்லும் பணிக்காக மட்டுமே தவிர சொந்த நலனுக்காக யாரிடமும் பேசியது இல்லை. 

ஒரு பெண்ணாகிய என்னை இதுபோல ஃப்ரேம் செய்து, என்னையும், என் குடும்பத்தையும் தற்கொலையின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இந்த துரோகம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மட்டும் தான். வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நீங்கள்தான் எங்கள் மரணத்திற்கு உத்தரவாதம். நான் இப்போது தலைமறைவாக இருப்பது, பெரிய தங்க கடத்தல் குற்றம் செய்ததற்காக அல்ல, பயத்தினால்தான், எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகத்தான். தேர்தலுக்காக அரசியல் செய்யாமல் உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்னையும் விசாரியுங்கள். யாருக்காகவோ இப்படிச்செய்கிறார்கள், இது தொடர்ந்தால் என்னைப்போன்ற ஏராளமான ஸ்வப்னாக்கள் இந்த நாட்டில் உயிரிழப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக