ஞாயிறு, 12 ஜூலை, 2020

வர வர ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது" - சிகிச்சை கோரும் குடும்பம்

BBC :  மகாராஷ்டிராவில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்களில் ஒருவரான வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பேஷ்வாக்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். காவல் துறையினர் உள்பட மக்கள் சிலரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி தெலுங்கானாவை சேர்ந்த எழுத்தாளரான வரவர ராவ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களை மகாராஷ்டிர காவல்துறை கைதுசெய்தது. இதுதொடர்பாக வழக்கு இன்னும் விசாரணையில் இருந்து வரும் நிலையில், வரவர ராவ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சமீபகாலமாக உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வரவர ராவ் தங்களிடம் சிறைச்சாலையில் இருந்து தொலைபேசி வழியாக நேற்று (சனிக்கிழமை) பேசியதாகவும், அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அவர் குரல், பேசும் விதம் வழியாகவும் மற்றும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் வழியாகவும் அறிய முடிந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
"கடந்த மே மாதம் மயக்க நிலையில் சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்றே நாட்களில் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதபோதும் அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப கொண்டுசெல்லப்பட்டார். அப்போது முதலே அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அவருக்கு இப்போது வரை அவசர சிகிச்சை தேவைப்பட்டபோதும் அது நிறைவேற்றப்படவில்லை" என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
வரவர ராவ் ஜூன் 24ஆம் தேதி மற்றும் இந்த மாதம் இரண்டாம் தேதி என இரண்டுமுறை தொலைபேசி வழியாக பேசியபோதே அவரது குரலில் பலவீனமும், குழப்பமும் தென்பட்டதாகவும், ஆனால் கடைசியாக நேற்று பேசியபோது அவரது உடல்நிலை மென்மேலும் பலவீனமடைந்துள்ளது தென்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.>"நேற்று அவர் பேசிய விடயங்களும், விதமும் எங்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளன. அவரது உடல்நிலை குறித்து நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் முறையே 70, 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற தனது தந்தை மற்றும் தாயின் இறுதிச்சடங்கு குறித்து அவர் பேசினார்."இதைத்தொடர்ந்து வரவர ராவுடன் உடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் தங்களிடம் கூறிய விடயங்கள் அதிர்ச்சியளித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்."அவரால் நடக்க முடியவில்லை, கழிப்பறைக்குச் சென்று பற்களைத் துலக்க முடியவில்லை. அவருக்கு உடல் மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்குரிய உடனடி மருத்துவப் பராமரிப்பு தேவை என்று அவர் எங்களிடம் கூறினார்."
வரவர ராவ் குழப்பான மனநிலையில் இருப்பதும், நினைவுகளை இழப்பதும் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வே காரணமென்றும் இது மூளை பாதிப்புக்கு வழிவகுக்கக் கூடும் என்றும் அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்."சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையான வசதிகள் இல்லாததால், அவரை உடனடியாக பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"அவரது பிணை மனுக்கள் குறைந்தது ஐந்து தடவைகள் நிராகரிக்கப்பட்டன. மேலும் அவரது வயது, உடல்நலக்குறைவு மற்றும் கோவிட் பாதிப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டி தாக்கல்செய்யப்பட்ட பிணை மனுக்கள் கூட புறக்கணிக்கப்பட்டன. அவருடைய வாழ்க்கை நிலை இப்போது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களுடைய தற்போதைய கோரிக்கை" ஜூம் செயலி மூலம் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
"பல்வேறு தரப்பினரும் பலமுறை முறையீடுகள் செய்த போதிலும், வரவர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு கவிஞரை தனது வயதான காலத்தில் சிறையில் அடைத்த சர்வாதிகாரிகளை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது" என்று இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா.லெ. - விடுதலை)யை சேர்ந்த திபான்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த வரவர ராவ்?

தெலங்கானாவை சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளையும் கொண்ட எழுத்தாளர், கவிஞர் மற்றும் 'விப்லவ ரட்சயாட்ல சங்கம்' என்னும் எழுத்தாளர் அமைப்பின் நிறுவனராவார்.இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இவர் மீது பல சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், பின்பு அவை திரும்ப பெறப்பட்டன.ராம்நகர், செகந்திராபாத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்குகளில் இவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2002ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை நிறுத்துவதற்காக சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய அரசாங்கம் ஏற்பாடு செய்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் இவர் பாடகர்-செயற்பாட்டாளரான காத்தாருடன் இணைந்து மத்தியஸ்தராக செயல்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக