ஞாயிறு, 12 ஜூலை, 2020

புலிகளுடன் தொடர்பான வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தடை.. ...

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தடை- புதிய தகவல்தினக்குரல் : இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக நியுஸ் இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
கரும்புலிகளின் பாணியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் உட்பட விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து ஐக்கியநாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ஒருவரை மேற்கோள்காட்டி பி.கே. பாலசந்திரன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தின் முடிவின் பின்னர் இலங்கையிலும் வெளிநாட்டிலும் முன்னாள் போராளிகளை கண்காணிப்பதற்காக அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஏற்படுத்திய பொறிமுறைகளை நல்லாட்சி அரசாங்கம் செயல் இழக்கச்செய்தது என பயங்கரவாத விவகாரங்களுக்கான நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக யுத்தம் முடிவடைந்த பின்னர் பத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாத தடுப்பு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் இராணுவகட்டமைப்பை இராணுவத்தினர் அழித்த போதிலும் அந்த அமைப்பின் கப்பல் வர்த்தக மற்றும் அரசியல் வலையமைப்புகள் தொடர்ந்தும் இயங்குகின்றன என அந்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலகின் பல பகுதிகளிலும் அவை இயங்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு கனடா பிரித்தானியா அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எந்த தடையுமின்றி கரும்புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக தடைவிதிப்பதுடன் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்குகிழக்கில் செயல் இழக்கச்செய்யப்பட்ட பாதுகாப்பு பொறிமுறையை கோத்தபாய அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படையினரை விவசாயம் கட்டுமானம் உட்பட ஏனைய கிராமிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களை மக்களுக்கு நெருக்கமானவர்களாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக