வெள்ளி, 10 ஜூலை, 2020

ரவுடி விகாஸ் துபேயின் அடியாட்களாக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர் ... பார்ப்பன ஜாதி பாசம் ..


தினமலர் : லக்னோ: 'என் மகன் செய்த தவறுகளுக்கு, சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என உ.பி.,யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின் தாயார் தெரிவித்தார்.
உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில், உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்த போது கைது செய்யப்பட்டான்.
விகாஸ் துபே கைது குறித்து அவனது தாயார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என் மகன் ஒவ்வொரு ஆண்டும் மஹாகாலர் கோயிலுக்கு செல்வான். இப்போது அவனை கால பைரவர் தான், சாவிலிருந்து காப்பாற்றி உள்ளார். என் மகன் பா.ஜ.,வில் இல்லை. சமாஜ்வாதி கட்சியில் இருக்கிறான். அவன் செய்த தவறுகளுக்கு சரியான நடவடிக்கைகளை அரசு ஏடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவன் போலீசாரை சுட்டுக் கொன்ற போது, தன் மகனை என்கவுன்டர் செய் வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.>
விகாஸ் துபே கைது குறித்து அகிலேஷ் யாதவ், 'போலீசார் விகாசை கைது செய்தனரா அல்லது அவர் சரணடைந்தாரா' என கேள்வி எழுப்பி உள்ளார்.

Vijay BhaskarVijay   : வட இந்தியர்கள் பயன்படுத்தும் சர் நேம்கள் மீது ஒரு எரிச்சல் கலந்து ஈர்ப்பு எனக்கு உண்டு.
பெயரில் கூச்சமில்லாமல் சாதியை வைத்துக் கொண்டு எப்படித்தான் இவர்கள் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அதே வேளையில்
எந்த வட இந்தியப் பெயரை பார்த்தாலும் அதில் இருக்கும் சர் நேமை கூகிள் செய்து பார்ப்பேன்.
அதற்கொரு பெரிய பேக்ரவுண்ட் தகவலாக கொடுத்திருப்பார்கள்.
உதாரணமாக ராகுள் டிராவிட் என்றால் அதிலுள்ள Dravid ஐ நீங்கள் கூகிள் செய்து பார்த்தால் டிராவிட் என்பது கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழும் தேசாஸ்த்த ரிக் வேத பிராமணர்கள் என்று வரும்.
எந்த வடக்கத்தி பெயர் பார்த்தாலும் அதிலுள்ள சர் நேம் எனக்கு தெரியாத பெயராக இருந்தால் நிச்சயம் அதை மனதில் குறித்துக் கொண்டு கூகிள் செய்து பார்த்து விடுவேன்.
ஒரு வாரம் முன்பு உத்திரபிரதேசத்தில் எட்டு காவலர்கள் ஒரு கேங்ஸ்டரால் கொல்லப்பட்டார்கள்.
விகாஸ் துபே என்னும் அந்த கேங்ஸ்டரை காவலில் வைக்க பெரும் போலீஸ் படை சென்றிருக்கிறது.
ரகசியமாக செல்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த போலீஸ் படைக்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
விகாஸ் துபேவின் வீட்டு மாடியில் வரிசையாக துப்பாக்கிகளை வைத்து காத்திருந்த குண்டர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

மேலிருந்து பலர் துப்பாக்கியால் தாக்கும் போது கீழிருந்து தாக்குவது மிகக் கடினம். அதன் காரணமாக போலீசால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. எட்டு போலீசார்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
உத்திரபிரதேசம் மட்டுமல்ல, உலகே இதைப் பார்த்து அதிர்ந்தது. எட்டு போலீஸ்காரர்களை ஒரு ரவுடி சுட்டுக் கொல்வது என்பது மிகக் கொடூரமான விஷயம். தப்பித்த விகாஸ் துபேவை போலீஸ் தேடி இன்று கண்டுபிடித்து விட்டார்கள்.
அப்படி விகாஸ் துபேவை தேடும் போது போலீஸுக்கு பெரிய சந்தேகம் ஒன்று ஏற்பட்டது. அவரை காவலில் எடுக்க போகும் செய்தி மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எப்படி போலீஸ் ஸ்டேசனில் இருந்து விகாஸ் துபே வீட்டுக்கு போகும் முன் விகாஸுக்கு தகவல் கிடைத்தது என்பதுதான் அந்த சந்தேகம்.
இறங்கி அதிரடியாக விசாரித்ததில் சக போலீஸ்காரர்கள் இருவரே “உங்களை கைது செய்ய வருகிறார்கள்” என்று விகாஸ் துபேவுக்கு தகவல் கொடுத்தது தெரிய வந்தது.
அவர்கள் பெயர் வருமாறு.
1. வினய் திவாரி.
2. கே.கே ஷர்மா.
இந்த திவாரி மற்றும் ஷர்மா இரண்டுமே வட இந்திய சர் நேம்களில் பிராமணர்கள் சர் நேமாக வருகிறது.
இப்போது இதே பெயர் இரண்டு முஸ்லிம்கள் பெயராக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
பத்திரிகைகள் எல்லாம் இதை மிகப்பெரிய தீவிரவாத செயலாக பரப்பி அதிரடித்து இருப்பார்கள்.
ஆனால் இங்கே எட்டு போலீசாரின் இறப்புக்கு காரணமாக இருப்பது திவாரியும், ஷர்மாவும். அதனால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்களை குற்றவாளிகளாக ஆவதை பார்த்து மகிழ்வதல்ல இப்பதிவின் நோக்கம்.
குற்றம் செய்பவர்கள் அனைத்து சமூகங்களிலும் விரவி கிடக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு.
இந்த சாதிக்காரர்கள் என்றாலே Soft ஆனவர்கள். நல்லவர்கள்.
இந்த சாதிக்கார்கள் என்றாலே Hard ஆனவர்கள். கெட்டவர்கள்.
இந்த மதத்தவர்கள் என்றாலே கண்ணியமானவர்கள்.
இந்த மதத்தவர்கள் என்றாலே
கண்ணிமில்லாதவர்கள்.
இப்படி ஏகப்பட்ட பொதுப்புத்திகள் நம்மைப் போன்ற சாதரண பொதுமக்கள் மனதில் படிந்திருக்கின்றன.
அனைத்து சாதியிலும், அனைத்து மதத்திலும், அனைத்து இனத்திலும்
அனைத்து விதமான நல்லவர்களும் இருக்கிறார்கள்.
கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த புரிதல்தான் சமூக மாற்றத்தின் அடிப்படையாகும்.
எழுதியவர் : Vijay BhaskarVijay

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக