புதன், 15 ஜூலை, 2020

திலகன் என்னும் மகாநடிகன்- இன்று பிறந்த தினம்..

.hindutamil.in : 85 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடிகர் திலகன் பிறந்தார். இயற்பெயர் சுரேந்திரநாத திலகன்(1935-2012) . அவர் மறைந்து எட்டு வருடங்களாகிறது. இந்த நெடிய பயணத்தில், நடிகன் என்பதற்கு மேலாக எந்த அடையாளத்தையும் போர்த்திக் கொள்ளாத கலைஞனாக திலகன் இருந்தார். பிரபலமான ஒருவரது மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்படும் புகழுரைகளுக்கு அவர் தகுதியானவர்தானா என்ற சஞ்சலம் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், திலகன் விஷயத்தில் எந்த ஊடாட்டமும் இல்லை. உலகின் எந்தவொரு நடிகருடன் ஒப்பிடக்கூடிய தகுதியும் திறமையும் கொண்ட மகாநடிகன் திலகன்.
திலகன் பிறவிக் கலைஞன். நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே வரித்துக் கொண்வர்.. பள்ளி நாடகங்களில் தொடங்கி, நண்பர்களுடன் ஆரம்பித்த முண்டகயம் நாடக சமிதி, அதிலிருந்து படிப்படியாக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப், காளிதாஸ் கலா கேந்திரா என முன்னேறி திரைத்துறைக்கு வந்தவர். அவரின் முதல் படம் பி.ஜே.ஆண்டனியின் பெரியார். 1973ல் வெளியான இந்தப் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் தோன்றிய திலகனை பெரிதாக யாரும் அடையாளம் காணவில்லை. அவரை முன்னிலைப்படுத்திய திரைப்படம் 1979ல் வெளிவந்த கே.ஜி.ஜார்ஜின் உள்கடல். அதன் பிறகு திலகன் என்ற நடிகன் மக்களின் மனதை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். 1981ல் யவனிகா திரைப்படத்துக்காக திலகன் தனது முதல் மாநில விருதை பெற்றார்.


ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக கூடுவிட்டு கூடு பாய்வதில் திலகன் அசகாயசூரர். தனக்கே உரிய உடல் மொழியையோ, மேனரிஸங்களையோ அவர் உருவாக்கிக் கொண்டதில்லை. கதாபாத்திரம் எதை கோருகிறதோ அதை மட்டும் பிரதிபலித்தவர். கேரளாவில் நடிகர்களை அப்படியே இமிடேட் செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் கிண்டலுக்கு தப்பாத அரசியல்வாதியோ, நடிகனோ அங்கு இல்லை. மம்முட்டியும், மோகன்லாலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர்களை இமிடேட் செய்து கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் அரங்கேறும். மிமிக்ரி கலைஞர்களால் மிகக் குறைவாக இமிடேட் செய்யப்பட்டவாகள் திலகனும், நெடுமுடி வேணுவும்தான். இருவருக்கும் பொதுவான மேனரிஸங்கள் என்று எதுவும் இல்லை. இருவரும் கதாபாத்திரங்களாக மாறக் கூடியவர்கள்.
திலகன் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வாழும் சித்திரங்கள் எனலாம். அவரை அகங்காரம் கொண்ட காரணவராகவே பல படங்கள் சித்தரித்தன. அதன் தொடர்ச்சியாகதான் சத்ரியன் படத்தில் அவர் வில்லனாக நடித்ததும். ஆனால் திலகன் எல்லாவித கதாபாத்திரங்களையும் அனாயாசமாக கையாளக் கூடியவர்.
கிரீடம் படத்தில் மகன் ஒரு நல்ல நிலையை எட்ட வேண்டும் என்ற பதைபதைப்புடன் வாழும் தந்தை. அந்த கனவு கண் முன்னால் நொறுங்கிப் போகும் போது அவர் வெளிப்படுத்தும் விரக்தி... திலகனால் மட்டுமே சாத்தியம். லோகிததாஸின் திரைக்கதையில் வந்த கிரீடம் திலகனின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோல் படத்தில் நியாய தர்மங்களையும், சுய கௌரவத்தையும் வறுமையின் முன் தொலைத்து மகளை நாடகத்திற்கு என்று சொல்லி விபச்சாரத்துக்கு அழைத்து செல்லும் தந்தையின் கதாபாத்திரம். தனது உண்மை முகம் மகனின் முன்னால் தெரிய வரும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இயலாமையும், பேடிமையும் மலையாள ரசிகன் ஒவ்வொருவரின் மனதிலும் கல்வெட்டாக பதிந்திருக்கும்.
இன்னொரு மறக்க முடியாத தந்தை கதாபாத்திரம் ஸ்படிகம் படத்தில் இடம்பெறுவது. அதில் திலகன் கணக்கே உலகை ஆள்கிறது என்ற விடாப்பிடி கொள்கையுடைய கணக்கு வாத்தியார். அவரிடம் அதிக அடியும் அவமானமும் படுகிற மாணவனாக அவரது மகன் மோகன்லால். மகனின் தொழிலநுட்ப அறிவை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து துன்புறுத்த ஒருகட்டத்தில் மகன் ரவுடியாக மாறுகிறான். தந்தையின் பிடிவாதம் தொடர்கிறது. மகள், மனைவி என ஒவ்வொருவராக அவரைவிட்டு விலக, மெதுவாக மகனின் அருமை தெரிய வருகிறது. கத்திக்குத்துப்பட்டு மகன் மருத்துவமனையில் படுத்திருக்க யாருக்கும் தெரியாமல் மகனைப் பார்க்க திலகன் வருவார். மகனை பார்த்துவிட்டு திரும்புகையில் எதிரில் தெரிந்தவர்களை கண்டதும் சட்டையை சுருட்டிவிட்டு தலையில் துண்டை போட்டு ஒரு நடை நடப்பார். துயரம், அன்பு, பச்சாதாபம் எல்லாம் கலந்த நடை. மகா நடிகனின் நடை.
வீண்டும் சில வீட்டுகாரியங்கள் படத்தில் திலகன் ஜெயராமின் தந்தை. இதுவும் லோகிததாஸ்தான். சின்ன வயதில் கஷ்டப்பட்டு பெரும் பொருள் சேர்த்து பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு ஆளாக்கிய தந்தை. அவரின் இளைய மகன் ஜெயராம் நாடக மோகி. திலகனும் அப்படியே. எங்கு நாடகம் நடந்தாலும் சென்றுவிடுவது தந்தை, மகனின் வழக்கம். இந்த விஷயத்தில் இருவரும் கூட்டுக் களவாணிகள். ஜெயராமை திலகன் வாருவதும், ஜெயராம் திருப்பியடிப்பதுமாக படம் கலகலப்பாக செல்லும். ஒருமுறை நள்ளிரவு தாண்டியும் வீட்டிற்கு வராத திலகனின் மீது மனைவியும் பிள்ளைகளும் கோபத்துடன் காத்திருக்க, திலகன் அவர்களை சமாளித்து, அவர்களையே கோபித்து தப்பிக்கும் இடம் எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. இளைய மகளின் திருமணத்துக்கு பணம் இல்லாமல் திலகன் கொள்ளும் கவலையும், மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுத்து படியேறிவரும் அந்த தடுமாற்ற நடையும் ஒரு நடுத்தர வர்க்க தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான அகராதி.
சந்தேஷம் படத்தில் போஸ்ட்மாஸ்டராக பல ஊர்களில் கடுமையாக உழைத்து கடைசியில் ஓய்வு பெற்று மனைவி பிள்ளைகளுடன் வாழும் தந்தையின் கதாபாத்திரம். சீனிவாசனும், ஜெயராமும் வளர்ந்த பிள்ளைகள். ஒருவன் கம்யூனிஸ்ட், இன்னொருவன் காங்கிரஸ். இவர்களின் கட்சி வெறியால் திலகனின் கனவுகள் ஒவ்வொன்றாக துண்டாடப்படும். எல்லாம் நகைச்சுவைதான். ஆனால் கேரளாவில் சகோதரர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக விரோதிகளாகதான் இருப்பார்கள். அந்தளவு கட்சிதான் அவர்களுக்கு முதலிடம். அதனை பொட்டில் அடித்தது போல் சொன்ன படம். ஜெயராமும், சீனிவாசனும் இருந்தாலும் திலகன்தான் கதையின் நாயகன்.
கரகர குரல், கரடு முரடான உடல்வாகு. இதை வைத்து திலகன் செய்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் பல. சத்தியன் அந்திக்காடின் நாடோடிக்காற்றில் திலகன் தொழிலதிபர் போர்வையில் இருக்கும் ஸ்மக்ளர். கேரளாவிலிருந்து துபாய் கொண்டு விடுவதாகச் சொல்லி மோகன்லாலையும், சீனிவாசனையும் மெரினா கடற்கரையில் இறக்கிவிடுவார் மம்முக்கோயா. துபாய் ஷேக் உடையில் இருக்கும் அப்பாவிகளான இவர்களை திலகனின் ஆட்கள் சிஐடி என்று நினைத்து பதறுவதும், திலகனும் அதை நம்பி சிஐடிகளை கொல்ல திட்டம் போடுவதும் என்று படம் நெடுக சிரிப்பை பறக்க விடுவார் திலகன். இதன் இரண்டாவது பாகமான பட்டண பிரவேசத்திலும் இந்த நகைச்சுவை தொடரும். கையறு நிலையில் தனது நண்பனைப் பார்த்து அவர் பிரபாகரா என்றழைப்பது மலையாளிகளால் மறக்க முடியாத வசனம். அதன் பாதிப்பில் சமீபத்தில் வந்த வரனே ஆவ்ஷ்யமுண்டு படத்தில் நாய்க்கு பிரபாகரா என்று பெயர் வைத்திருப்பார்கள்.
முகாமுத்ரா படத்தில் திலகனுக்கு அண்ணன், தம்பி என இரு வேடங்கள். ஒருவர் போலீஸ். இன்னொருவர் போலீஸ் உடையைப் போட்டு மாமூல் வசூலிக்கும் திருடன். ஏமாற்றுக்கார திருடனாக வரும் திலகனின் பேச்சும், அடாவடியும், அசட்டையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும். சோம்பேறித்தனமும் விட்டேத்தியுமான அவரின் பேச்சும் மாடுலேஷனும் தனித்தன்மை வாய்ந்தது.

குட்டேட்டன் படத்தில் திலகனுக்கு பெண் பித்தர் வேடம். காமெடிதான். ஒவ்வொரு முறையும் புதுக்கிளியுடன் மலையேறும் இவரைப் பார்த்து பொறாமைப்படும் கேரக்டர் மம்முட்டிக்கு. ஒருகட்டத்தில் திலகனின் சிஷ்யராகவும் மாறுவார் மம்முட்டி.
மூக்கில்லா ராஜ்யத்தில் திலகனின் நகைச்சுவை நடிப்பு இன்னொரு பரிமாணத்தை கொள்ளும். இதில் திலகன், சித்திக், முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நால்வரும் மனநல மருத்துவமனையில் இருப்பவர்கள். ஒருமுறை அங்கிருந்து தப்பித்து நகரத்துக்கு வருவார்கள். அங்கு இவர்கள் நடத்தும் காமெடி கூத்துதான் கதை. மொட்டைத் தலையுடன் நோயாளிகளுக்கு திலகன் சிரத்தையுடன் மருத்துவம் பார்ப்பதும், மேடையில் இவரை சீஃப் கெஸ்டாக நினைத்து பேச அழைப்பதும், அவர் ஒவ்வொரு உடையாக கழற்றி எறிவதும்... அட்டகாசம். சில மூன்றாந்தர நகைச்சுவை நடிகர்களைப் போல் முகத்தை கோணலாக்கியும், வசனத்தை ஜவ்வாக இழுத்துப் பேசியும் காமெடியை கட்டியிழுத்து இம்சிக்கும் போக்கை திலகனிடம் காண முடியாது. நவரசங்களையும் ஆளுமை செய்த ஒரு நடிகர் திலகன் என்றால் அதில் மிகையில்லை.
இறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்புவரை திலகனின் வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்தது. அம்மாவுக்கு - அசோஸியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட் - எதிராக திலகன் குரல் கொடுக்கத் தொடங்கிய போது பிரச்சனையும் ஆரம்பித்தது. திலகன் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. திலகன் மம்முட்டி உள்ளிட்டவர்களை நேரடியாக தாக்கிப் பேசினார். கூலிங் கிளாஸ் மாற்றுவதெல்லாம் நடிப்பு கிடையாது என்று மம்முட்டியையும் அவரது சமகாலப் படங்களை விமர்சித்தார். திலகன் எப்போதும் அப்படிதான். அவரின் பெருந்தச்சன் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைப்பதாக இருந்தது. கடைசி நேர லாபியில் அது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. அமிதாப்பச்சன் அந்த வருடத்துடன் நடிப்பை நிறுத்தப் போவதாக ஓய்வை அறிவித்திருந்தார். இதனை திலகன் நேரடியாகவே விமர்சித்தார். அவர் எப்போதும் அப்படிதான்.
அம்மாவுக்கு எதிரான திலகனின் விமர்சனம் கடுமையானது என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் அவரை கூடுதல் கரிசனத்துடன் மலையாள நடிகர்கள் அணுகியிருக்க வேண்டும். திலகனுக்காக இலக்கியவாதிகளும், சில அரசியல்வாதிகளும் பரிந்து பேசியும் தடை நீடித்தது. இந்த காலகட்டத்தில் அவர் மனரீதியாக நொறுங்கிப் போனார். எனக்குத் தெரிந்தது நடிப்பு ஒன்றுதான், அதை என்னால் விடமுடியாது என மீடியாக்களில் அவர் கண்கலங்கியதுண்டு. திட்டமிட்டு என்னை புறக்கணிக்கிறார்கள் என சினந்ததுண்டு. ஒருகட்டத்தில் சினிமா இல்லையென்றால் என்ன என்று நாடகத்தில் நடிக்கச் சொன்றார்.
2011ல் தடை நீங்கியது. அதற்கு முன்பே இயக்குனர் ரஞ்சித் அவரை தனது இந்தியன் ருப்பீயில் ஒப்பந்தம் செய்திருந்தார். திலகன் என்ற நடிகனுக்கு அதில் நல்ல தீனி கிடைத்தது. வயதானாலும் தானொரு மாஸ்டர் என்பதை அந்தப் படத்தில் அவர் நிரூபித்தார். ஏறக்குறைய பிருத்விராஜுக்கு இணையான வேடம். பிருத்விராஜின் தங்கையை பெண் பார்க்க வருகிறவர்களிடம் வரதட்சணை குறித்து திலகன் பேசும் காட்சி ஒன்று இந்தியன் ருப்பீயில் வருகிறது. ஒரு சில நிமிடங்கள் வரும் அந்தக் காட்சி திலகன் என்ற நடிகனால் உச்சபட்ச அதிர்வை நம்முள் உண்டாக்கும். அதுதான் திலகன்.
இந்தியன் ருப்பீ படத்துக்குப் பிறகு இயக்கிய ஸ்பிரிட் படத்திலும் ரஞ்சித் திலகனை நடிக்க வைத்தார். திலகனுக்கு ஏற்ற கதாபாத்திரம் அந்தப் படத்தில் இல்லை. ரஞ்சித் திலகனுக்கென்றே ஒரு குடிகார ஆசானை உருவாக்கினார். இதப்பாருடா என்று திலகன் தனது கையில் கட்டியிருக்கும் வாட்சை உயர்த்திக் காட்டும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கிறது.
திலகன்... நீங்கள் உங்களின் முழு ஜீவிதத்தை எங்களுக்காக தந்தீர்கள். உங்கள் நடிப்பால் எங்களை கண் கலங்க வைத்தீர்கள், சினங்கொள்ளச் செய்தீர்கள், நெகிழ்ச்சியுடன் உருக வைத்தீர்கள். கடுவா சாக்கோ மாஸ்டரும், அச்சுதன் மேனனும், பெருந்தச்சனும், கரீமும், கே.சி.பிரான்சிஸும், ஆசானும் நித்தியத்துடன் எப்போதும் ஜீவித்திருப்பார்கள். கலைஞனுக்கு என்றும் மரணமில்லை. ஹேப்பி பர்த்டே திலகன்.
வென்ற விருதுகள்:
2009-ல் பத்மஸ்ரீ
தேசிய விருதுகள்:
1987 சிறந்த துணை நடிகர்: ரிதுபேதம்.
இதுதவிர ஏகப்பட்ட கேரள திரைவிருதுகளையும் 2006, 2011 பிலிம்ஃபேர் விருதையும் வென்றுள்ளார்.
-கட்டுரையாளர்: ஜான் பாபுராஜ்.
தொடர்புக்கு: johnbaburaj74@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக