ஞாயிறு, 5 ஜூலை, 2020

சாத்தான்குளம்: பென்னிக்ஸ் கையில் சிக்கிய செல்போன் ஆதாரம்? - பின்னணியில் முக்கியப் பிரமுகர்?

சாத்தான்குளம் காவல்நிலையம் பென்னிக்ஸ் - ஜெயராஜ்vikatan.com - அ.சையது அபுதாஹிர் : பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரும் கடையை மூடாமல், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் கைதுசெய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதைத்தாண்டி மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சர்ச்சையின் மையமாக மாறியுள்ள சாத்தான்குளம் விவகாரத்தில் தினமும் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள்ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக மதுரை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டது. இந்த விவகாரம் குறித்து நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரணை நடத்தச் சென்றபோது, அங்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் புகார் அளித்தார்.
தமிழக அரசும் சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. அதற்கு முன்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், மற்றும் நான்கு காவலர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களைத் தவிர, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் விசாரணையும் செய்துவருகிறார்கள். பென்னிக்ஸ், அவர் தந்தை ஜெயராஜ் ஆகியோரை கடையிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது யார்... இரவு முழுவதும் இருவரையும் விசாரிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தது எந்த அதிகாரி என்றும் விசாரணை நடந்துவருகிறது.

இந்த விவாகரத்தில் புதிய தகவல் ஒன்றும் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரும் கடையை மூடாமல், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் கைது செய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதைத்தாண்டி மற்றொரு காரணமும் இருந்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்' - கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்
பென்னிக்ஸ் செல்போன் கடை வைத்திருந்ததால், அந்தப் பகுதியில் உள்ள பலரும் செல்போன் சர்வீஸ் செய்ய அவரது கடையை அணுகுவது வழக்கம் என்கிறார்கள். அப்படி சர்வீஸுக்கு வந்த செல்போன் ஒன்று சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவருடையது. அந்த செல்போனில் இருந்த சில முக்கியத் தகவல்களைக் கசியவிடாமல் பார்த்துக்கொள்வதற்காகவே காவல் நிலையத்துக்கு ஜெயராஜை அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதற்குப் பலன் கிடைக்காமல்போகவே, அடுத்தகட்டமாக பென்னிக்ஸையும் அழைத்துச் சென்றனர் என்கிறார்கள். கடையை அடைக்கவில்லை என்று காரணத்துக்காக உயிர்போகும் நிலைக்கு காவல்துறையினர் அடிக்க வாய்ப்பில்லை, அவர்களின் நோக்கம் பென்னிக்ஸ் தரப்பிடம் உள்ள தகவல்களை கசியவிடக்கூடாது என்பதாகவே இருந்துள்ளது” எனக் கூறி அதிர வைக்கின்றனர்.

இதைத்தவிர, ஏற்கெனவே சாத்தான்குளம் பகுதியில் மணல் கடத்தல் குறித்த விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சிலரை சாத்தான்குளம் காவல்துறை கைது செய்திருந்தாலும், ஒரு முக்கிய குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் இந்த இருவர் மரணம் நிகழ்ந்துள்ளது.

அந்தக் குற்றவாளியைக் காவல்துறை கைதுசெய்யாமல் இருக்கவும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
செல்போன் விவகாரம் கடந்த இரண்டு நாள்களாக சாத்தான்குளம் காவல்துறையினர் மத்தியில் சத்தமில்லாமல் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களின் செல்போன்கள் எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன

;சி.பி.சி.ஐ.டி விசாரணை
அதேநேரம், பென்னிக்ஸ் கையில் சிக்கிய ஆவணம் குறித்து சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலருக்கு மட்டுமே தெரியும் என்றும் தெரிவிக்கின்றனர் காவல்துறையைச் சேர்ந்த சிலர். சிபிஐ விசாரணைக்கு வரும்போதுதான் இந்த செல்போன் குறித்த தகவலின் உண்மைத்தன்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் சொல்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக